காஞ்சிக் கடிகை
காஞ்சியில் நிலைகொண்டிருந்த கடிகாஸ்தானம் என்னும் கல்விநிறுவனம் பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே செயல்பட்டு வந்தது. கடிகாஸ்தானத்தைப் பற்றிய மிகப்பழமையான சாசனச் சான்று கர்ணாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்திலுள்ள தாள்ளகுண்டா என்னுமிடத்திலிருந்து கிடைக்கிறது. அந்தக் கல்வெட்டு கதம்பவம்சத்தைச் சேர்ந்த ககுஸ்தவர்மனுடையது. அந்தக் கல்வெட்டு அவனுக்கு இரு தலைமுறைகள் முந்தைய முன்னோனான மயூரவர்மன் என்னும் அரசன் தன் குருவான வீரசர்மனுடன் கூட காஞ்சியிலுள்ள கடிகாஸ்தானத்தில் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்கவேண்டி காஞ்சிக்கு வந்ததைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டிலுள்ள பின்வரும் ச்லோகம் இந்தக்குறிப்பைத் தருகிறது.
यः प्रयाय पल्लवेन्द्रपुरीं गुरुणा समं वीरवर्म्मणा।
अधिजिगमिषुः प्रवचनं निखिलं घटिकां विवेश सुतार्कुकः।।
ய: ப்ரயாய பல்லவேந்த்³ரபுரீம்ʼ கு³ருணா ஸமம்ʼ வீரவர்ம்மணா|
அதி⁴ஜிக³மிஷு: ப்ரவசனம்ʼ நிகி²லம்ʼ க⁴டிகாம்ʼ விவேஸ² ஸுதார்குக:||
மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளைய செப்பேடும் பல்லவ வம்சத்தைச் சேர்ந்த ஸ்கந்தசிஷ்யன் என்னும் மன்னவன் ஸத்யஸேனன் என்பவனிடமிருந்து காஞ்சியையும் கடிகையையும் கைப்பற்றியமையைக் குறிப்பிடுகிறது. அந்தச் செப்பேட்டிலுள்ள பின்வரும் செய்யுள் இந்தச்செய்தியைத்தருகிறது.
स्कन्दशिष्यस्ततोभवत्।
द्विजानां घटिकां राज्ञः सत्यसेनात् जहार यः।।
ஸ்கந்த³ஸி²ஷ்யஸ்ததோப⁴வத்|
த்³விஜானாம்ʼ க⁴டிகாம்ʼ ராஜ்ஞ: ஸத்யஸேனாத் ஜஹார ய:||
இதே செப்பேடு எந்கைக்குக் கைலாயத்திற்கு நிகராகக் கற்றளி எடுப்பித்த இரண்டாம் நரஸிம்ஹவர்மனும் அந்தணர்களின் கடிகையைப் புதுப்பித்ததைக் குறிப்பிடுகிறது.
तत्प्रसूनुः नरसिंहवर्म्मा पुनर्व्यधात् यो घटिकां द्विजानाम्।
शिलामयं वेश्म शशाङ्कमौलेः कैलासकल्पं च महेन्द्रकल्पः।।
தத்ப்ரஸூனு: நரஸிம்ʼஹவர்ம்மா புனர்வ்யதா⁴த் யோ க⁴டிகாம்ʼ த்³விஜானாம்|
ஸி²லாமயம்ʼ வேஸ்²ம ஸ²ஸா²ங்கமௌலே: கைலாஸகல்பம்ʼ ச மஹேந்த்³ரகல்ப:||
வைகுண்டபெருமாள் கோயிலிலுள்ள கல்வெட்டும் இரண்டாம் பரமேச்வர வர்மன் மறைந்த பின்னர் புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் கடிகையைச் சேர்ந்தவர்களும் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. கைலாயநாதர் கோயிலிலுள்ள இரண்டாம் விக்ரமாதித்யனின் கல்வெட்டு கடிகையாரைக் குறிப்பிடுகிறது. பல்லவமல்லனான இரண்டாம் நந்திவர்மனின் கசாக்குடிச் செப்பேடும் கடிகையில் இருந்தவர்கள் நான்குவேதங்களிலும் வல்லவர்கள் என்று குறிப்பிடுகிறது.
கடிகையின் இடம்
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டியலங்காரம் என்னும் நூலில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற பின்வரும் செய்யுள் கடிகையின் அமைவிடத்தைக் குறிப்பிடுவதாகச் சில அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பெற்றுள்ளது.
“ஏரி இரண்டும் சிறகா எயில்வயிறாக்
காருடைய பீலி கடிகாவா — நீர்வண்ணன்
அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே,
பொற்றேரான் கச்சிப் புரம்”இந்தச் செய்யுள் வானிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கும் தோற்றத்தை வர்ணிக்கிறது. காஞ்சிபுரம் மேலிருந்து பார்க்க ஒரு மயிலைப் போல தோன்றுகிறது. அந்த மயிலின் இறகுகளாக இரண்டு ஏரிகள் அமைந்துள்ளன. கோட்டை வயிறாக அமைந்துள்ளது, அழகான தோகை போல கடிகா அமைந்துள்ளது என இந்தக் கல்வெட்டு வர்ணிக்கிறது.
ஈங்குள்ள கடிகா என்னும் சொல்லிற்கு கடிகை என்னும் பொருளைக் கொண்டு கடிகை வால்பகுதியில் இருந்ததாக சில அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். அதாவது வால்பகுதியான கைலாயநாதர் கோயில் பக்கம் கடிகை இருந்திருக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர். ஆனால் பிறரோ இந்தக் கருத்தை மறுத்து கடி-மணம் கமழும் கா – பூங்கா எனப் பொருள் கூறுகின்றனர்.
கடிகையைப் போன்ற மற்றைய அமைப்புக்கள்.
மற்றைய கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பெறும் காந்தளூர்ச்சாலை, பார்த்திவசேகரபுரம் சாலை ஆகியவையும் கடிகையைப் போன்றவையே. ந்ருபதுங்க வர்மனின் பாஹூர் செப்பேடு குறிப்பிடுவதும் கடிகையைப் போன்றதொரு சாலையையே. இத்தகைய சாலைகள், எண்ணாயிரம், திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய இடங்களில் அமைந்திருந்ததாகக் கல்வெட்டுக்களிலிருந்து அறியமுடிகிறது.
கடிகையின் விளக்கம்
தந்த்ரவார்த்திகம் என்னும் நூலின் விளக்கவுரையில் பட்ட ஸோமேச்வரர் கடிகை என்னும் சொல்லைப் பின்வருமாறு விளக்குகிறார்.
वेदकौशलजिज्ञासार्थं तत्तत् वेदभागचिह्नलेख्यानि घटिकायां कुंभाख्यायां निक्षप्य तत्तत् वेदभागपरीक्षाकाले तान्याकृष्य अकृष्टलेख्यिचिह्नितं वेदं पठ इत्यध्येतारः अनुयुज्यन्ते इति घटिकामार्गवर्तिनोऽनुयोगः
வேத³கௌஸ²லஜிஜ்ஞாஸார்த²ம்ʼ தத்தத் வேத³பா⁴க³சிஹ்னலேக்²யானி க⁴டிகாயாம்ʼ கும்பா⁴க்²யாயாம்ʼ நிக்ஷப்ய தத்தத் வேத³பா⁴க³பரீக்ஷாகாலே தான்யாக்ருʼஷ்ய அக்ருʼஷ்டலேக்²யசிஹ்னிதம்ʼ வேத³ம்ʼ பட² இத்யத்⁴யேதார: அனுயுஜ்யந்தே இதி க⁴டிகாமார்க³வர்தினோ(அ)நுயோக³:
வேதத்தில் தேர்ச்சியை அறிய விழையும் ஆசிரியர் வேதபாகத்தின் சின்னங்களை எழுதி கடிகை எனப்பெறும் சிறு பானையிலிடுவர். அதற்கான தேர்வின்போது அந்த ஓலைநறுக்குகளிலிருந்து ஒன்றை எடுத்து மாணவன் அதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வேதபாகத்தை ஒப்பிக்க வேண்டும். இவ்விதம் கடிகையில் தேர்வு நடைபெறுகிறது.
இதனால்தான் அந்தக் கல்வெ நிறுவனம் கடிகை என வழங்கப்பெற்றது.
கடிகையின் தொடர்ச்சி
கர்ணாடக மாநிலம் சென்னராயபட்னத்திலுள்ள 1442 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று கடிகையைக் குறிப்பிடுகிறது. ஆகவே கடிகை பதினைந்தாம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது எனலாம்.
கோயில்களில் கடிகாலயம்
முந்தைய அறிஞர்கள் சில கல்வெட்டுக்களிலுள்ள கடிகா என்னும் சொல்லைப் பல முந்தைய அறிஞர்கள் கடிகாஸ்தானத்துடன் தொடர்பு படுத்தியிருக்கின்றனர். ஆனால் கோயில்களில் பொதுவாக கடிகாலயம் அல்லது கடிகாஸ்தானம் எனப்பெறுமிடம் கோயில்களில் கடிகாரம் வைக்கப்பெற்றுள்ள இடத்தைக் குறிப்பிடுவதாக சிற்ப நூல்களிலிருந்து அறியமுடிகிறது.
கடிகையில் தமிழ்
மேற்கண்ட சான்றுகளினின்று கடிகை என்பது அந்தணர்கள் கூடி வேதமும் சாஸ்த்ரமும் கற்பிக்கும் இடம் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரு கல்வெட்டு கடிகையில் தமிழும் கற்பிக்கப்பெறும் பாடங்களில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு செங்கல்பட்டு அருகிலுள்ள திருக்கச்சூர் என்னும் ஊரின் கண்ணமைந்த கச்சபேச்வரர் ஆலயத்தின் வெளிச் சுற்றின் தென்புறச்சுவரில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 26 –இல் 319 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இதன் வரிகளாவன.
வரி 1 : ஸ்வஸ்திஸ்ரீ செங்காட்டுக் கோட்டத்துக் கோனாசுரநாட்டுக் கா
வரி 2 : வனூரான பொய்யாமொழிமங்கலம் கடிகையாரில்
வரி 3 : முத்தமிழ் ஆசாரியரான தமிழ் கரைகண்ட சாத்தனா
வரி 4 : ருடைய சந்தானத்தில் பெருநம்பிகள் காணி பொய்யா
வரி 5 : மொழிமங்கலம்…
இந்தக் கல்வெட்டு முழுமையுறாததைப் போலத் தெரிகிறது. இந்தக் கல்வெட்டு சாத்தனாரின் ஸந்தானமான பெருநம்பிகள் என்பான் பொய்யாமொழி மங்கலத்தைக் காணியாக் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறது. பொய்யாமொழி மங்கலம் செங்காட்டுக் கோட்டத்திலுள்ள கோனாசுர நாட்டில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் சாத்தனார் முத்தமிழ் ஆசாரியர் எனவும் தமிழ்க்கரைகண்டவர் என்றும் குறிப்பிடப்பெற்றுள்ளது முக்கியமானது.
பொய்யாமொழி மங்கலத்தை விடுங்கள். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் சாத்தனார் மூன்று தமிழிலும் தேர்ந்தவர் மற்றும் தமிழில் கரைகண்டவர். அவர் காவனூர் கடிகையில் உறுப்பினர் என்பது கல்வெட்டு தரும் செய்தி. இந்தக் கல்வெட்டில் அரசன் அல்லது காலத்தைப் பற்றிய குறிப்பு இல்லையெனினும் எழுத்தமைதி கொண்டு இந்தக் கல்வெட்டின் காலத்தை 12-13 ஆம் நூற்றாண்டாகக் கொள்ளவியல்கிறது.
மேற்கண்ட சான்றுகளைக் கொண்டு பின்வரும் முடிவுகளை எட்டவியல்கிறது.
- கடிகைகள் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிறகும் அமைந்திருந்தன.
- தமிழும் கடிகையில் கற்பிக்கப்பெற்றது அல்லது இந்தக் கல்வெட்டுக் காலத்தில் பாடங்களில் சேர்ப்பிக்கப்பெற்றிருந்தது.
காஞ்சியை போற்றுதும், காஞ்சியை போற்றுதும்…
தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு!
நன்றி.
ராம்ஜி
குரு சங்கரநாராயணரின் வலை கடிகையில் கற்பது எங்கள் பாக்கியம்
நன்றி.உங்கள் வலைத்தளம் ஒரு வரலாற்றுப்புதையல்