கருடன் கொண்ட யானையும் ஆமையும்

கச்யப ப்ரஜாபதியான மஹர்ஷிக்கு பதின்மூன்று மனைவியர். அவர்கள் தக்ஷனின்  புதல்வர்கள். வினதா மற்றும் கத்ரூ ஆகிய இருவரும் அவர்களில் இருவர். இவர்களுள் கத்ரூ நாகங்களைப் பெற்றெடுத்தாள். வினதை தன் கணவரிடம் கத்ருவின் புதல்வர்களை விட வலிமை கொண்ட புதல்வர்கள் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு இரு முட்டைகள் பிறந்தன. ஆர்வத்தின் காரணமாக ஒரு முட்டையை அவள் உடைத்துப் பார்த்தாள். கால்களும் தொடையுமில்லாமல் அருணன் அந்த முட்டையிலிருந்து பிறந்தான். தன்னை அப்படி பிறப்பித்ததனால் தன் தாயை அவள் யாரோடு போட்டியிட்டாளோ அந்த ஸஹோதரிக்கே அடிமையாகும்படி சாபமிட்டாள்.

     ஒருமுறை வினதையும் கத்ரூவும் உச்சைஸ்ச்ரவா எனப்பெறும் தேவலோகக் குதிரையைக் கண்டனர். அதன் வாலின் நிறத்தைப் பற்றி இருவரும் தமக்குள் பணயம் வைத்துக் கொண்டனர். வெல்பவருக்குத் தோற்பவர் அடிமையாக இருக்கவேண்டுமென்பது போட்டியின் விதிமுறை. கத்ரூ தன் புதல்வர்களான நாகங்களை உச்சைஸ்ச்ரவத்தின் வாலைச் சுற்றிக்கொள்ளுமாறு கூறினாள். அந்த நாகங்களும் கூறிய படியே செய்தன. அதனால் அதன் வால் கருமையாகத் தெரிந்தது. ஆகவே கத்ரூ வெற்றி பெற்றாள். வினதை அவளுக்கு அடிமையாக அவள் புதல்வர்களான நாகங்களுக்குப் பணிவிடை செய்துவந்தாள். அவள் எல்லா வேலைகளையும் செய்துவந்தாள்.

     இதற்கிடையில் இரண்டாவது முட்டையிலிருந்து கருடன் வெளிவந்தான். அவன் மிகவும் பெருகி விச்வரூபம் எடுத்ததால் தேவர்களும் அஞ்சினர். அவனைக் குறித்து ஸ்தோத்ரம் செய்தனர். அதனால் தன்னுருவைக் குறுக்கிக் கொண்டான். அருணன் அப்போது கதிரவனுக்கு ஸாரதியாகப் போனான். கருடன் தன் தாய்க்கு உதவியாக நாகங்களுக்குப் பணிவிடை செய்துவந்தான். அவன் அந்த நாகங்களைச் சுமந்து கொண்டு கதிரவனுக்கு அருகில் சென்றான். நாகங்கள் வெம்மையால் வெந்தன. அதைக் கண்ட கத்ரூ இந்த்ரனை ஸ்துதித்தாள். இந்த்ரன் மழையை வர்ஷித்ததால் நாகங்கள் வெம்மை தணிந்தன.

     பிறகு கருடன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கோரினான். நாகங்கள் தேவலோகத்திலிருந்து அமுதம் கொண்டு வந்தால் தாயை விடுவிப்பதாகக் கூறினர். கருடன் அதற்கு ஒப்புக் கொண்டான். தன் தாயை தனக்கு உணவைக் காட்டுமாறு கூறினான். கடலின் நடுவிலிருக்கும் காட்டுமிராண்டிகளை உண்ணுமாறும் அவர்களிடைய அந்தணன் இருந்தால் விட்டுவிடுமாறும் கூறினாள் வினதை. கருடனும் அவ்வாறே அந்த காட்டு மிராண்டிகளை விழுங்கும்போது இடையில் மாட்டிக்கொண்ட ஒரு அந்தணனை விடுதலை செய்தான்.

     அவர்களை உண்டதும் போறாமைகண்டு தனது தந்தையான கச்யபரைப் பார்த்து மேலும் உணவளிக்குமாறு வேண்டினான். கச்யபர் ஒரு யானை மற்றும் ஆமையின் கதையைக் கூறினார்.

     முன்பு விபாவஸு மற்றும் ஸுப்ரதீகர் என்னும் இரு ஸஹோதரர்கள் இருந்தனர். அவர்கள் தம் சொத்தைப் பிரித்துக் கொள்ள எப்போதும் தமக்குள் பிணங்கிக் கொண்டேயிருந்தனர். இறுதியில் விபாவஸு தனது ஸஹோதரனை யானையாகப் போகும்படி சபித்தான். அதற்குப் பதிலாக ஸுப்ரதீகனும் தன் ஸஹோதரனை ஆமையாகப் போகும்படி சபித்தான். அந்த இரு யானையும் ஆமையும் ராக்ஷஸ வடிவில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே இருப்பதாகவும் அவற்றைப் புசிக்குமாறும் கச்யபர் ஆணையிட்டார். கருடன் அங்கு சென்று ஒரு ரோஹிண மரத்தின் கிளையின் மீதமர்ந்தான். அந்த மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியபடி வாலகில்யர்கள் என்னும் ப்ரஹ்மர்ஷிகள் தவமியற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட கருடன் அந்தக் கிளையை அலகால் கவ்வியபடி அந்த ஆமையையும் யானையையும் இரு கால் நகங்களால் பற்றியபடி பறந்தான். நேராக இமயத்திற்குச் சென்ற கருடன் மரக்கிளையை மெதுவாக இறக்கி வைத்து அதன் பிறகு அந்த இரு ஸஹோதரர்களையும் தனக்கிரையாக்கிக் கொண்டான்.

     இந்தக் கதை மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில் இருபத்தெட்டாம் அத்யாயத்திலிருந்து முப்பத்துமூன்றாம் அத்யாயம் வரை  விவரிக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கதை திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியிலுள்ள கோயிலில் சிற்பச்சித்திரமாகச் செதுக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கற்பலகையில் கருடன் எல்லா அணிகலன்கோளோடும் சித்தரிக்கப்பெற்றிருக்கின்றான். அவனுடைய அலகில் வாலகில்யர்கள் தொங்கும் மரக்கிளையைத் தாங்கியிருக்கிறான். இரு கரங்களும் யானையையும் ஆமையையும் பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சிற்பம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த்து.

கருடன் விபாவஸுவையும் ஸுப்ரதீகனையும் கொண்டு செல்லல்

கருடன் விபாவஸுவையும் ஸுப்ரதீகனையும் கொண்டு செல்லல்

     இவ்விதம் மஹாபாரதக் கதையானது சித்தரிக்கப்பெற்றிருக்கிறது.

Please follow and like us:

2 thoughts on “கருடன் கொண்ட யானையும் ஆமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *