பல்லவர் வரலாற்றில் பப்ப பட்டாரகர்

பல்லவர் செப்பேடுகளில் பப்ப பட்டாரகர் என்னும் பெயரை பலமுறை கண்டிருக்கலாம். சிவஸ்கந்தவர்மனின் ஹிரஹடகல்லி செப்பேட்டில் துவங்கி பெரும்பாலும் எல்லா செப்பேடுகளுமே இந்தச் சொல்லைக் கொண்டுள்ளன. எல்லாச் செப்பேடுகளும் அரசனை “பப்ப பட்டாரக-பாதானுத்யாத” என்றே குறிப்பிடுகின்றன. பப்ப பட்டாரகரின் திருவடிகளை த்யானிக்கும் என்பது இதன் பொருள். மிகப்பழமையான செப்பேடான ஹிரஹடகல்லி செப்பேடு பப்ப ஸ்வாமி என்பவருக்கு மஹாராஜர் என்னும் அடைமொழியையும் தருகிறது. மற்றைய செப்பேடுகளின் குறிப்பாவன.

 1. விஷ்ணுகோபவர்மனின் உறுவப்பள்ளி செப்பேடு –     பப்ப பட்டாரக மஹாராஜ பாதபக்த
 2. இரண்டாம் ஸிம்ஹவர்மனின் மாங்களூர் செப்பேடு – பப்ப பட்டாரக பாதபக்த
 3. இரண்டாம் ஸிம்ஹவர்மனின் பீகிரச் செப்பேடு – பப்ப பட்டாரக பாதபக்த
 4. விஷ்ணுகோபனின் நெடுங்கராய செப்பேடு –     பப்ப பட்டாரக மஹாராஜ பாதபக்த
 5. விஜய ஸிம்ஹவர்மனின் வேசந்த செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 6. இரண்டாம் ஸிம்ஹவர்மனின் விழவெட்டிச் செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 7. இரண்டாம் குமாரவிஷ்ணுவின் சேந்தலூர் செப்பேடு – பப்ப பட்டாரக பாதபக்த
 8. இரண்டாம் ஸிம்ஹவர்மனின் ஓங்கோடு செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 9. விஷ்ணுகோபனின் ஸுரா செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 10. முதலாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 11. முதலாம் பரமேச்வரவர்மனின் உன்னகுரவபாளையச்செப்பேடு – பப்ப பட்டாரக பாதபக்த
 12. இரண்டாம் நரஸிம்ஹவர்மனின் ரேயூரு செப்பேடு –     பப்ப பட்டாரக பாதபக்த
 13. இரண்டாம் நந்திவர்மனின் கசாக்குடி செப்பேடு – பப்ப பட்டாரக பாதானுத்யாத வர்த்தமான மஹிம்னா

மேற்கண்ட சான்றுகளைக் கொண்டு பப்ப பட்டாரகர் பல்லவர்  குலத்தின் மிகப்பெரிய மரியாதைக்குரிய நபர் என்பது தெளிவாகிறது. முதலாம் மஹேந்த்ரனின் வெளியிடப்பெறாத செப்பேடும் கூட இதே சொல்லாட்சியைக் கொண்டுள்ளது.

   முந்தைய அறிஞர்கள் பப்ப பட்டாரகர் என்னும் சொல்லை தானமளித்த அரசனின் தந்தையாகவே கொண்டனர். பப்ப என்னும் தந்தை என்னும் பொருளில் அமைந்த ப்ராக்ருத சொல், ஆகவே தந்தையாகவே இருத்தல் வேண்டுமென்றும் கருதினர். அப்பன் என்னும் தமிழ்ச்சொல்லும் இங்கே ஒப்பிட்டுப்பார்க்கத் தக்கது.

     இதே சொல்லாட்சி வேறு மாநிலங்களின் செப்பேடுகளிலும் கிடைக்காமல் இல்லை. நேபாளத்திலுள்ள ஜெயஸிடேவல் என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு அரசனை பப்ப பட்டாரகமஹாராஜ ஸ்ரீபாதானுத்யாத என்று குறிப்பிடுகிறது. ஒடிசாவைச் சேர்ந்த அனந்த சக்திவர்மனின் மற்றொரு கல்வெட்டு பப்ப பட்டாரக பாதப்ரஸாதாவாப்த சரீர ராஜ்யவிபவ என்று அரசனைக் குறிப்பிடுகிறது. பப்ப பட்டாரகரின் அருளால் உடலையும், ஆட்சியையும் செல்வத்தையும் பெற்றவர் என்று பொருள்.

இவ்விரண்டு இடங்களிலும் பப்ப பட்டாரகர் என்னும் சொல் தந்தை என்னும் பொருளிலேயே கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்றாம் நந்தவர்மனின் வேலூர்ப்பாளையச் செப்பேடு முற்றிலும் மாறுபட்ட தகவலைத் தருகிறது.

पृथ्वीपालस्य तस्य प्रथितगुणगणो बप्पभट्टारकाख्यः

शास्त्रे वेदे च साङ्ख्ये प्रकटितमहिमा यज्ञभट्टाभिधानः।

श्रीकाट्टुप्पळ्ळिनाम्नि श्रुतविनयधरस्तुङ्गकैलासकल्पं

ग्रामे बालेन्दुमौलेर्भ्भवनमकृत यद्भक्तियोगप्रगीतः।। 22

पिताभवदस्य विशुद्धबुद्धिर्गिरामिवेशश्शिवदासनामा।

माताभवद्यस्य गुणैस्समग्रे गरीयसी द्रोणमणिर्महीव।। 23

என்பது அந்தச் செப்பேட்டுப் பகுதி. வேதவேதாங்களிலும், ஸாங்க்யத்திலும் கரைகண்ட பெருமையுடையவரும், எல்லோருமறிந்த குணங்களையுடையவரும் கேள்வியிலும் பணிவிலும் தேர்ந்தவருமான யஜ்ஞபட்டர் என்பவர் அரசனுக்குப் பப்ப பட்டாரகர் என்று வழங்கப்பெற்றார்.  அவர் திருக்காட்டுப்பள்ளி என்னும் சிற்றூரில் பிறைசூடிய பெருமானுக்கு கைலையையொத்த கோயிலை எடுப்பித்தார். அவருடைய தந்தையின் பெயர் சிவதாஸன் என்பதாகும். அவர் தூய அறிவுடையவர். சொல்லுக்குத் தலைவரான தேவகுருவையொத்தவர். அவருடைய தாய் த்ரோணமணி என்பாள் எல்லா குணங்களிலும் சிறந்தவள். பூமியையொத்தவள்.

இவ்விதமாகப் பப்ப பட்டாரகர் என்பாருக்கு அடைமொழிகள் கொடுக்கப்பெற்றிருக்கின்றன. வேலூர்ப்பாளையச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளைக் கொண்டு பப்ப பட்டாரகர் என்பது ஒரு பதவியென்பதும் அதில் அறிவுசெறிந்தாரை நியமிப்பதுமுண்டு என்பது தெளிவாகிறது. ஆகவே பப்ப பட்டாரகர் என்பது அரசனின் தந்தையை மட்டும் குறியாது அரச குருவையும் குறிப்பிடுவதுண்டு என்று கருதுகிறேன்.

Please follow and like us:

2 thoughts on “பல்லவர் வரலாற்றில் பப்ப பட்டாரகர்

 1. கண்பதி பப்பா மோரியா ! என மராட்டியர் கணேச உத்ஸவத்தில்
  கூவுவர்; அது நினைவுக்கு வருகிறது

  தேவ்

 2. அப்பா,அம்மா என்ற சொல்லாட்சிகள் பழைய தமிழி்ில் இல்லை.தந்தை,அன்னை என்றே உள்ளன.இவ்வளவு முயற்சிக்கும் உங்களைுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *