தர்ம சாஸ்த்ர நூல்களில் சுவடியியற் குறிப்புகள்

ஸ்ம்ருதி நூல்கள்

வேதம் கூறும் நெறிமுறைகளுக்கே தர்மமென்று பெயர். அன்றாட வாழ்வில் அப்படி கடைப் பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆசாரம் எனப்படும். இவை தவிர நெறிகளை மீறும்போது எழும் வழக்குகளுக்கு வ்யவஹாரம் என்று பெயர். இத்தகைய சூழ்நிலைகளில் நடக்க வேண்டிய நெறிகளை விளக்கும் நூல்களே ஸ்ம்ருதி நூல்கள் எனப்படுகின்றன. இவற்றை ரிஷிகளும் தேவர்களும் எழுதியதாக நம்பப்படுகின்றன. இவற்றுள் முக்கியமாக 20 ஸ்ம்ருதி நூல்கள் முக்கியவையாகக் கருதப்படுகின்றன

இவற்றுள் பெரும்பாலும் வழக்குகளைக் குறிக்கும் வ்யவஹாராத்யாயத்தில் பெரும்பாலும் எழுத்தியல் குறிப்புகள் காணப்படுகின்றன. நாரதஸ்ம்ருதியில் எழுத்துக்களின் தோற்றத்தைக் குறிக்கும்போது

नाकरिष्यद्यदि ब्रह्मा लिखितं चक्षुरुत्तमम्।

तत्रेयमस्य लोकस्य नाभविष्यच्छुभा गतिः।। नारदस्मृतिः, 4.70

நாகரிஷ்யத்³யதி³ ப்³ரஹ்மா லிகி²தம்ʼ சக்ஷுருத்தமம்|

தத்ரேயமஸ்ய லோகஸ்ய நாப⁴விஷ்யச்சு²பா⁴ க³தி​:||  நாரத³ஸ்ம்ருʼதி​:, 4.70

இதன் பொருளாவது

ஒருவேளை ப்ரஹ்மதேவன் கண்களுக்கு மேன்மையான எழுத்துக்களை உண்டாக்கியிராவிட்டால், அப்போது இவ்வுலகத்தின் போக்கு நல்லதாக இருந்திராது.

இதன் மூலம் எழுத்துக்களின் தோற்றம் ப்ரஹ்மாவினால் உண்டானதென்றும் அந்த ஸ்ம்ருதிகாலத்தினின்றே எழுத்தியல் குறிப்புக்கள் திகழ்கின்றன என்பதையும் அறியமுடியும். இப்படி ப்ரஹ்மாவினால் உண்டாக்கப்பட்ட எழுத்துமுறையே ப்ராஹ்மீ என்ற கருத்தும் நிலவுகிறது. இதைப்பற்றி விரிவாக ப்ராஹ்மி லிபியைப் பற்றிக் காணும்போது காணலாம்.

மேலும் வ்யவஹார ப்ரகாசிகையில் இக்கருத்தே

षाण्मासिके तु समये भ्रान्तिः सञ्जायते यतः।

धात्राक्षराणि सृष्टानि पत्रारूढान्यतः पुरा।।

ஷாண்மாஸிகே து ஸமயே ப்⁴ராந்தி​: ஸஞ்ஜாயதே யத​:|

தா⁴த்ராக்ஷராணி ஸ்ருʼஷ்டானி பத்ராரூடா⁴ன்யத​: புரா||

என்று கூறப்பெற்றுள்ளது.

இதன் பொருள்

ஆறு மாதகாலத்தில் மனிதர்களுக்கு மறதி மற்றும் தடுமாற்றம் ஏற்படுவதால் ப்ரஹ்மாவினால் எழுத்துக்கள் படைக்கப்பட்டு தாள்களில் ஏற்றப்பட்டன.

இக்கருத்து முன்கூறிய கருத்திற்கு வலுசேர்ப்பதாக உள்ளது.  இதே கருத்து சுக்ரநீதியிலும்

भ्रान्तेः पुरुषधर्मत्वात् लेख्यं निर्णायकं परम्।

अनुभूतस्य स्मृत्यर्थं लिखितं निर्मितं पुरा।।

यत्नाच्च ब्रह्मणा वाचा वर्णस्वरचिह्नितम्।

ப்⁴ராந்தே​: புருஷத⁴ர்மத்வாத் லேக்²யம்ʼ நிர்ணாயகம்ʼ பரம்|

அனுபூ⁴தஸ்ய ஸ்ம்ருʼத்யர்த²ம்ʼ லிகி²தம்ʼ நிர்மிதம்ʼ புரா||

யத்னாச்ச ப்³ரஹ்மணா வாசா வர்ணஸ்வரசிஹ்னிதம்|

என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.

இதன் பொருள்

மனிதருக்கு மனமயக்கமே இயல்பாதலின் எழுதப்பட்ட சான்றையே நிகழ்ந்ததை நினைவிற்கொள்ளவும ப்ரஹ்மாவினால் எழுத்துக்கள்  சுரங்களோடு உண்டாக்கப் பட்டிருக்கின்றன என்று குறிப்பிருத்தலின் எழுத்தியலின் குறிப்பு விளங்கும்.

மேலும் ஸ்ம்ருதிநூல்களில் எழுதப்பட்ட சான்றை முக்கியமாகக் கொள்ளும் குறிப்புக்கள் விரவிக் கிடக்கின்றன.  சான்றுகளைக் குறித்த நியமங்களில் இத்தகைய சான்றுகள் கிடைக்கின்றன.

வஸிஷ்ட தர்ம ஸூத்ரத்தில்

लिखितं साक्षिणो भुक्तिः प्रमाणं त्रिविधं स्मृतम्।

லிகி²தம்ʼ ஸாக்ஷிணோ பு⁴க்தி​: ப்ரமாணம்ʼ த்ரிவித⁴ம்ʼ ஸ்ம்ருʼதம்|

இதன் பொருள்

எழுதப்பட்டது, நேரில் கண்டது மற்றும் அனுபவம் இவற்றை சான்றுகளாக் கொள்ளலாம் என்று குறிப்பிருக்கிறது. இதன் மூலம் எழுத்தியலின் தொடர்பை அறியலாம். மேலும் .யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியிலும் இதே ச்லோகம் இடம்பெற்றுள்ளது

மேலும் வ்யவஹாராத்யாயத்தில் லேக்ய ப்ரகரணம் எனும் இயலில் எழுத்தியல் தொடர்பான எண்ணற்ற சான்றுகள் உள்ளன. கடன் தொடர்பான வழக்குகளில் எழுத்துப் பூர்வமான சான்றுகளின் முக்கியத்துவம் பலவாறு

விளக்கப்பட்டுள்ளது.

यः कश्चिदर्थो निष्णातो स्वरुच्या तु परस्परम्।

विलेख्यं त्ववश्यं कार्यं तस्मिन् धनिकपूर्वकम्।।

ய​: கஸ்²சித³ர்தோ² நிஷ்ணாதோ ஸ்வருச்யா து பரஸ்பரம்|

விலேக்²யம்ʼ த்வவஸ்²யம்ʼ கார்யம்ʼ தஸ்மின் த⁴னிகபூர்வகம்||

இதன் பொருள்

கடன் கொடுப்பவர் மற்றும் பெறுபவரில் கொடுப்பவரின் முதலில் வைத்து எழுத்துப்பூர்வமான சான்று இயற்றப்பட வேண்டும் என்னும் இக்குறிப்பின் மூலம் எழுத்தியலின் குறிப்பு விளங்குகிறது.

இவை போக துணி மற்றும் தாம்ர பட்டயங்களில் எழுதும் பழக்கத்தின் குறிப்பும் யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியில் உள்ளது.

पटे वा ताम्रपटे वा स्वमुद्रोपचिह्नितम्।

படே வா தாம்ரபடே வா ஸ்வமுத்³ரோபசிஹ்னிதம்|

இதன் பொருள்

துணியிலோ அல்லது தாமிர பட்டயத்திலோ தன் சிஹ்னத்தோடே எழுத வேண்டும்.          இதன் மூலம் ஸ்ம்ருதி காலத்திய எழுத்தியல் தொடர்பான குறிப்புகள் விளங்குகின்றன. இவை தவிர பாண்டுலிபி என்னும் பெயரை விளக்குவது போன்றதோர் குறிப்பு காத்யாயன ஸ்ம்ருதியில் இருக்கிறது. முதலில் வெள்ளை எழுத்தால் பலகையில் எழுதி பிறகு திருத்த வேண்டும் என்கிற குறிப்புள்ளது.

पाण्डुलेखेन फलके ततः पत्रं विशोधयेत्।

பாண்டு³லேகே²ன ப²லகே தத​: பத்ரம்ʼ விஸோ²த⁴யேத்|

இதே போன்றதோர் குறிப்பு வ்யாஸஸ்ம்ருதியிலும் இடம் பெற்றுள்ளது.

पाण्डुलेखेन फलके भूमौ वा प्रथमं लिखेत्।

न्यूनाधिकं तु संशोध्य पश्चात्पत्रे निवेशयेत्।।

பாண்டு³லேகே²ன ப²லகே பூ⁴மௌ வா ப்ரத²மம்ʼ லிகே²த்|

ந்யூனாதி⁴கம்ʼ து ஸம்ʼஸோ²த்⁴ய பஸ்²சாத்பத்ரே நிவேஸ²யேத்||

இதன் பொருள்

வெள்ளை எழுத்தால் பலகையிலோ அல்லது பூமியிலோ எழுதி பின்னர் குறைவு மற்றும் அதிகமானவற்றை திருத்தி பின்னர் ஏட்டில் எழுதவேண்டும். இதன் மூலம் ஏட்டில் எழுதுவதோடு அதைத் திருத்தும் முறையையும் இரு ஸ்ம்ருதிகளும் விளக்குவதை அறியலாம்.

ஈண்டு பத்ரம் என்னும் சொல்லால் காகிதமே குறிப்பிடப்பெற்றுள்ளது என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றன. பத்ரம் என்னும் சொல்லால் பனையோலையோ அல்லது பூர்ஜபத்ரமோ குறிப்பிடப்பெற்றிருந்தால்  அதை முதலில் எழுதிப்பார்த்துத் திருத்தி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே இந்த பத்ரம் என்னும் சொல் காகிதத்தையே குறிப்பதாகவும் இந்த ஆதாரம் முகலாயர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாகக் கூறும் குறிப்புக்கு எதிராக அதற்கு முனே இருந்ததற்கான அடையாளம் என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்விதமாக தர்மசாஸ்த்ர நூல்கள் எழுத்தியலைப் பற்றிய பல குறிப்புக்களைத் தருகின்றன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *