அர்த்த, காம மற்றும் நாட்ய சாஸ்த்ரங்களில் இடம்பெற்ற எழுத்தியல் குறிப்புக்கள்

                அர்த்தம் என்றால் தொழில். வாழும் முறை. அதற்கு பயன் படும் பூமி, பணம், தானியங்கள், விலங்குகள் முதலியன அர்த்தம் எனப்படும். இவற்றைப் பெறுதலுக்கும் பாதுகாத்தலுக்குமான நெறிநூல் அர்த்தசாஸ்த்ரம் எனப்படும். அத்தகைய அர்த்த சாஸ்த்ரம் முறையே எந்தையில் தொடங்கி, ப்ருஹஸ்பதி, சுக்ராசார்யார், நாரதர் தொடங்கி பல்வேறு அறிஞர்களாலும் இயற்றப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது முழுமையாகக் கிடைப்பதும் அனைவராலும் கொண்டாடப்படுவதும் கௌடில்யர் எனப்படும் சாணக்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்த்ரநூலேயாம். அந்நூலிலும் அவர் பத்து முன்னாசிரியர்களைக் குறிப்பிடுதலின் அவர்க்கு முன்பே அர்த்த சாஸ்த்ரங்களை இயற்றியவர்கள் இருந்தனர் என அறியலாம். இந்நூலைத் தவிர அவரே எழுதிய சாணக்ய ஸங்க்ரஹம் மற்றும் சுக்ரநீதி முதலான நூல்களும் தர்ம மற்றும் அர்த்த சாஸ்த்ர கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இந்நூல்களிலும் சிற்சில இடங்களில் சுவடிகள் மற்றும் எழுத்தியல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

லிபிம்ʼ ஸங்க்²யானஞ்சோபயுஞ்ஜீத|

என்று அர்த்தசாஸ்த்ரத்தில் முதல் அதிகரணமான வினயாதிகரணத்தில் இடம்பெற்ற வாக்கியம் ஒருவனது நான்காமது வயதில் எண்ணையும் எழுத்தையும் பழக வேண்டுமென்று குறிப்பிடுவதினின்று அர்த்தசாஸ்த்ர காலத்தில் எழுத்து மற்றும் எண்ணின் பயன்பாடு விளங்குகிறது.. இது தவிர

ப்ராங்முக²ம் உத³ங்முக²ம்ʼ வா விப⁴க்தோபஸ்தா²னம்ʼ நிப³ந்த⁴புஸ்தகஸ்தா²னம்ʼ காரயேத்|  தத்ர அதி⁴காரிணா ஸங்க்²யானிப³ந்த⁴புஸ்தகம்ʼ காரயேத்|

இதன் பொருள்

                கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஆவணக்காபகத்தை நிறுவவேண்டும். அங்கு அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பான ஆவணக் காப்பகத்தையும் நிறுவவேண்டும் என்னுமிக்குறிப்பின் மூலம் அர்த்த சாஸ்த்ர காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களின் காப்பகமும் இருந்தது என்பதை அறிய முடிகிறது.

                இவை தவிர சுவடிக்கான ஓலைகளின் பிரிவைக் குறிக்கும்போது

தாட³தாடீ³பூ⁴ர்ஜானாம்ʼ பத்ரம்|

தாடம் மற்றும் தாடி என்று ஓலைகளின் இருவிதத்தைக் குறிப்பிடுகிறது அர்த்தசாஸ்த்ரம். இது தவிர எழுத்தனின் இலக்கணத்தை வரையறுக்கும் சாணக்யர்

அமாத்யஸம்பதோ³பேத​: ஸர்வஸமயவித் ஆஸு²க்³ரந்த²​: சார்வக்ஷர​: லேக²னவாசனஸமர்த²​: லேக²க​: ஸ்யாத்|

இதன் பொருள்

                அமைச்சனின் குணங்களோடியைந்தவனும் எல்லா ஸமயங்களையும் அறிந்தவனும் விரைவில் நூலறிபவனும் அழகிய எழுத்துக்களை உடையவனும் எழுத்திலும் சொல்லிலும் வல்லவனே எழுத்தனாவான். மேலும் பிழையான எழுத்தனின் குணங்களைக் குறிப்பிடும்போது

               

லேக²கஸ்²சேத் உக்தம்ʼ ந லிக²தி, அனுக்தம்ʼ லிக²தி து³ருக்தம் உபலிக²தி, ஸூக்தம்ʼ உல்லிக²தி, அர்தோ²த்பத்திம்ʼ வா விகல்பயதி|

இதன் பொருள்

                பிழையெழுத்தனாயின் சொன்னதை எழுதான். சொல்லாததை எழுதவான். பிழையாகச் சொன்னதை அவ்வண்ணமே எழுதுவான். நன்றாகச் சொல்லப்பட்டதையும் மேலெழுதுவான். பொருளுண்டாவதையும் திரிப்பான். இவ்வண்ணம் பிழையெழுத்தரின் குணைங்களை உரைத்ததலின் பிழையெழுத்தர்கள் அப்போது இருந்தமையையும் அறியமுடியும்.

               

ஸக்ருʼது³க்தக்³ருʼஹீதார்தோ² லகு⁴ஹஸ்தோ ஜிதாக்ஷர​:|

ஸர்வஸா²ஸ்த்ரஸமாலோகீ ப்ரக்ருʼஷ்டோ நாம லேக²க​:||

                                                                                                                               

                என்று சாணக்ய ஸங்க்ரஹமும் எழுத்தனின் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறது. இதன் பொருளாவது

                ஒரு முறை சொன்னாலே கிரஹித்துக் கொள்பவனும் கைலாகவம் உடையவனும் எழுத்துக்களை அறிந்தவனும் எல்லா சாஸ்த்ரங்களையும் ஆய்ந்தவனும் சிறந்தவனுமானவனே எழுத்தன் எனப்படுவான்.

                இவை தவிர ஒற்றர்களால் கொணரப் பட்ட சேதியை பரிமாறிக்கொள்ளும் வழிமுறைகளைக் கூறும் போது ஸம்ஜ்ஞாலிபி எனப்படும் ஸங்கேத லிபிகளால் பரிமாறிக் கொள்ளலாமெனும் குறிப்பு அர்த்த சாஸ்த்ரத்தில் உள்ளது. இதே குறிப்பு காமந்தகீய நீதிஸாரத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைத் தவிர பாண்டங்களில் குறியீடுகளை எழுதி ஒற்றுச் செய்தியை பரிமாறும் வழியும் அர்த்த சாஸ்த்ரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

                மேலும் கோவில் முதலானவற்றின் சுவரில் எழுதுவது பாடல் மூலமாகத் தெரிவிப்பது போன்ற ஒற்றுச் செய்திகளை பகிரும் முறைகளும் அரச முத்ரைகள் குறித்த குறிப்புகளும் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

               காமசாஸ்த்ரம் 64 கலைகளில் ஒன்றாக எழுதும் அக்ஷரகலையையும் குறிப்பிடுகிறது. இதன் ஜயமங்களா என்னும் உரை மேற்கண்ட குறிப்பைத் தருகிறது.

நாட்ய சாஸ்த்ரம் எழுத்தரையும் கணக்கரையும் உதவிக்கு வைத்து நாடகங்களின் வெற்றிகளைக் குறித்து குறிப்பெழுதி வைக்கச் சொல்கிறது.

லேக²கக³ணகஸஹாயை​: ஸித்³தே⁴​: கா⁴தா​: ஸமபி⁴லேக²யேத்|  27.23

இவ்விதம் அர்த்த, காம, நாட்ய சாஸ்த்ரங்கள் எழுத்தியல் தொடர்பான குறிப்பைத் தருகின்றன.

Please follow and like us:

One thought on “அர்த்த, காம மற்றும் நாட்ய சாஸ்த்ரங்களில் இடம்பெற்ற எழுத்தியல் குறிப்புக்கள்

  1. தமிழில் க என்ற எழுத்தே ஆங்கிலத்தில் k.g.h ஆகிய எழுத்துகளின் ஓசைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மொழியியல் நோக்கில் இது குறைபாடே.ஆனால் தமிழில் ஏன் அப்படி செய்தார்கள்? தொல்காப்பிய பாயிரம் இந்த மூன்றுக்கு ஒன்று என்ற எழுத்துமுறையைப் பெருமையாக “மயங்கா மரபின் எழுத்துமுறைகாட்டி” என்கிறது.அதாவது மூன்று க, மூன்று ச, மூன்று த, முதலான வட எழுத்துக்கள் மயக்கம்(குழப்பம்) தரக்கூடியவை என்றும் தமிழ் மரபு மயங்கா மரபு என்றும் கூறுகின்றது.அதங்கோட்டு ஆசான் என்பவர்க்கு தமிழ் எழுத்துமுறை கூறும்போது இவ்வாறு கூறப்படுகிறது. இது ஏன்? வடமொழி எழுத்துக்கள் முன்பே இருந்தன என்பது இதன்மூலம் தெரிகிறது.ஏன் தமிழில் அதுபோல் மூன்று ஓசைகளுக்கும் எழுத்து உருவாக்கப் படவில்லை.வடமொழி பார்த்து தென்மொழியை அகத்தியர் எழுத்துருவாக்கம் செய்தார் எனும்போது அவர் ஏன் தமிழில் மூன்றோசைகளுக்கும் எழுத்துருவாக்கம் செய்யவில்லை?அல்லது சிறியதில் இருந்து பெரியது உருவாகியது என்பதன்படி தமிழ் எழுத்து முறையில் இருந்து வடமொழி எழுத்துக்கள் வளர்ச்சிபெற்றனவா?ஐயம் நீக்குக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *