சிந்து சமவெளி முத்திரைகளில் வேதக் கதைகள்

     எனது மானஸிக குருவும் இணையற்ற அறிஞருமான முனைவர். எஸ். சங்கரநாராயண சாஸ்த்ரிகள் மொஹஞ்சதாரோவில் கிடைத்த சிந்து சமவெளி முத்திரையொன்றை மிகவும் அற்புதமாக அடையாளம் கண்டார். அவருடைய அடையாளம் “An Indua Seal with Soma sacrificial theme” என்னும் தலைப்பில் வெளியானது. அந்த முத்திரையில் கொம்புள்ள தாய்த்தவதை அல்லது ஒரு மர தேவதை வழக்கமான முறையிலன்றி பொறிக்கப்பெற்றுள்ளார். அவரை மற்றொரு பெண்தெய்வம் வணங்குவதைப் போலுள்ளது. அந்த தெய்வம் முழங்காலிட்டு மற்றொரு ஆடும் மாடும் கலந்ததைப் போன்றதும் மனிதமுகமுடையதுமான கலப்பு விலங்கினோடு இயைந்ததாயுள்ளது. அந்த விலங்கு இன்னதென்று அறியவொண்ணாவிடினும் சிறுதெய்வத்தைப் போலுள்ளது. மேலும் அந்த முத்திரையின் கீழ்ப்பகுதியில் ஏழு உருவங்கள் காணப்பெறுகின்றன. அவர்கள் பூஜகர்களைப் போலவும் போற்றுபவர்களைப் போலும் காணப்பெறுகின்றனர். அவர்களைப் பார்த்தால் ஏழு கன்னியர்களைப் போல காணப்பெறுகிறது. அவர்கள் ஏதோ சடங்கு தொடர்பான ஆடலில் இருப்பதைப் போலவும் தெரிகிறது. அந்த முத்திரையைக் காண்போம்.

 

முத்திரையில் ஸோமயாகம்

முத்திரையில் ஸோமயாகம்

கோட்டோவியம்

கோட்டோவியம்

     சாஸ்த்ரியார் மேலும் இந்த முத்திரையைப் பற்றிய மற்றைய அறிஞர்களான புத்த ப்ரகாஷ் மற்றும் முனைவர் எஸ். ராவ் அவர்களின் கருத்துக்களையும் ஆய்ந்துள்ளார். அவர்கள் இதிலுள்ள தெய்வங்களை அஸ்ய வாமஸ்ய என்னும் ரிக்வேத மந்த்ரத்தில் வருபவர்களாகவும் அக்னியை வழிபடும் பக்தனாகவும் அடையாளம் கண்டுள்ளனர்.

     அவர்களது அடையாளத்தில் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார் சாஸ்த்ரியார். அதிலுள்ள அக்னி குண்டத்தைப் பற்றியும் அதில் கோம்ருகத்தைப் போன்ற விலங்கைப் பற்றியும் அவர்கள் எந்தக் குறிப்பையும் தராததைப் பற்றியும் கேட்கிறார்.

     மேற்கொண்டு சாஸ்த்ரியார் பின்வரும் வேதக்கதையைக் குறிப்பிட்டு அந்த முத்திரையை கதையோடு ஒப்பிட்டுள்ளார். அந்தக் கதையாவது

     முன்பு தேவர்கள் பூவுலகிலிருந்தனர். ஸோமக் கொடியோ மூன்றாம் ஸ்வர்க்கத்திலிருந்தது. தேவர்கள் அந்தக் கொடியைக் கொண்டு வந்து ஸோமயாகம் செய்ய விழைந்திருந்தனர். ஆகவே அவர்கள் கத்ரூ ஸுபர்ணி என்னும் இரு பெண்டிரை அழைத்தனர். இவ்விருவரில் இரண்டாமவள் சந்தஸ்ஸுகளைப் பெற்றிருந்தாள். அவர்களுக்கிடையே முன்பு அழகுப்போட்டியிருந்தது. அதில் கத்ரு வென்றனள். ஆகவே ஸுபர்ணி அவளுக்கு அடிமையாயிருந்தாள். வென்ற கத்ரு தோற்ற ஸுபர்ணியைப் பார்த்து ஸ்வர்க்கத்திலிருந்து ஸோமலதையைக் கொண்டு வருவதாக இருந்தால் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாகக் கூறினாள். அவளும் தன் மகள்களாகிய சந்தஸ்ஸுகளை அழைத்து ஸோமலதையைக் கொண்டு வருமாறு கூறினாள். அவளுடைய மூத்த புதல்விகளான ஜகதீ மற்றும் த்ருஷ்டுப் ஆகியவை முயன்று பார்த்தும் தோல்வியையெய்தின. அதன் பிறகு இளையவளான காயத்ரி ஒரு ஒளிரும் ஆட்டோடு சென்று ஸோமலதையைக் கொண்டு வந்தாள். அவள் ஸோமலதையைக் கொண்டு வந்ததனால் யாகங்களில் காயத்ரியே முதலிடம் பெற்றாள். பாவகைகளிலும் அவளே முன்னவளானாள்.

     காயத்ரி ஸோமலதையைக் கொண்டுவரும் போது விச்வாவஸு என்னும் கந்தர்வன் அதனைக் கவர்ந்தனன். அந்தக் கொடி கந்தர்வர்களிடம் மூன்று நாட்கள் தங்கியிருந்தது. திறமைவாய்ந்த தேவர்கள் கந்தர்வர்களிடமிருந்து கொடியை மீட்க திட்டம் தீட்டினர். கந்தர்வர்கள் பெண்களென்றால் மயங்குவர் என்பதனால் வாக் தேவதையை ஒரு வயதுப் பெண்குழந்தையாக மாற்றி அனுப்பி வைத்தனர். அவளுடைய மழலையில் மயங்கி கந்தர்வர்கள் நின்றதனால் அவர்களால் ஸோமக்கொடியைக் காப்பாற்றவியலவில்லை. அப்போது வாக் தேவதை ரோஹிதம் எனப்பெறும் ஒருவகை மானின் உருவெடுத்து கந்தர்வர்களிடமிருந்து ஓட்டம் பிடித்தாள். அவளை மீண்டும் பிடிப்பதற்காக கந்தர்வர்கள் அவளுடன் பேச்சுக் கொடுத்தனர். அப்போது தேவர்கள் வீணை போன்றதொரு தந்தி வாத்தியத்தை உருவாக்கி மீட்டிக் கொண்டே பாடினர். அதனைக் கேட்டு மயங்கிய வாக்தேவதை கந்தர்வர்களை விடுத்து தேவர்பக்கலில் வந்தாள். இதனால்தான் இன்றும் கூட பெண்கள் இசையோடு பாடுபவர்களிடம் பெண்கள் மயங்குகின்றனர். தேவர்கள் ஸோமக்கொடியை ஒருவயதுள்ள பசுவைக் கொண்டு மீட்டதனால் ஸோமயாகத்தைச் செய்பவர் ஒரு வயதுள்ள பசுவைக் கொடுத்தே ஸோமலதையை வாங்க வேண்டும்.

     இந்தக் கதை பிற்கால வேதகாலத்தில் மிகவும் ப்ரஸித்தமாக இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் இது காடகம் (XXIII, 10), கபிஷ்டலம் (III.vii.3-4) மற்றும் தைத்திரீய ஸம்ஹிதை (VI.1.6) களிலும் சதபதப்ராஹ்மணத்திலும் ((III.ii.4)) இடம்பெற்றுள்ளது. இந்தக் கதைகளில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒன்றுக்கொன்று நிறைவிடுவதாய் உள்ளன.

      மேற்கண்ட வேதக்கதையைக் கொண்டு சாஸ்த்ரியார் பின்வரும் அடையாளங்களைச் செய்துள்ளார்.

  1. இந்த முத்திரையில் காணப்பெறும் கொடி ஸோமக்கொடியேயாகும். அதைத்தான் கந்தர்வர்கள் கொண்டு சென்று தேவர்கள் மீட்டெடுத்தனர். அது அரசமரம் அல்ல. ரிக்வேதத்தில் அரசமரம் என்னும் பொருள் கொள்ளும் அச்வத்த என்னும் சொல்லிற்கு உரையாசிரியர்கள் ஸோமலதை என்றே கூறுவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
  2. அதில் காணப்பெறும் பெண்தெய்வம் காயத்ரியேயாவாள். அவள் தலையிலிருக்கும் த்ரிசூலம் அவள் த்ரிபதா – மூன்று பாதங்களைக் கொண்டவள் என்பதைக் குறிப்பதாகலாம்.
  3. அதன் நடுவிலிருக்கும் ஆண் உருவம் ஸோமராஜனாகலாம். ஸோமராஜனே ஸோமலதையின் தெய்வமாவார்.
  4. அதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வேதகுண்டம் இதன்மூலம் நிறுவப்பெற்றுள்ளது.
  5. அந்த முத்திரையின் அடியில் இருக்கும் ஏழு உருவங்கள் ஆணாக இருந்தால் யாகத்திலிருக்கும் ஏழு ரித்விக்குகளோ அல்லது பெண்ணாக இருந்தால் காயத்ரியின் ஏழு ஸஹோதரிகளான த்ரிஷ்டுப், ஜகதி, அனுஷ்டுப், பங்க்தி, ப்ருஹதி, உஷ்ணிக் மற்றும் ககுத் ஆகலாம்.
  6. மானைப் போன்றதொரு பசுவின்கன்று ரோஹிதத்தின் வடிவிலான வாக்தேவதையாகலாம். அதற்கு மனித முகம் கொடுக்கப்பெற்றது அதற்கு பேசும் திறன் உண்டு என்பதைக் காட்டுவதாக இருக்கலாம்.
  7. சற்றே சிதைந்து பட்ட பகுதி வீணை போன்ற வாத்தியமாகலாம்.

மேலே எழுதப்பெற்ற இருவரிகள் த்ரிதச ஸார: என்பதாகப் படிக்கவியல்கிறது. இது மேற்கண்ட செய்திக்கு வலு சேர்க்கிறது. மேற்கொண்டு சாஸ்த்ரியார் தமது முடிவுரையாக ஒருவேளை வேத ஆர்யர்களும் ஆர்யரற்றோரும் இருபிரிவாக இருந்திருந்தாலும் கூட அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கே கூறப்பெற்றுள்ள இந்தக் கதைதான் புராணகாலத்தில் கருடனின் கதையாக மாற்றப்பெற்றுள்ளது என்பது அறியத்தக்கது. காயத்ரி கருடனாக உருவாக்கம் பெற்றுள்ளது. கத்ரு மற்றும் ஸுபர்ணி என்னும் பெயர்களும் அவ்விதமே வந்துள்ளது. ஸோமலதை அமுதமாக மாறியுள்ளது. வேங்கநாத தேசிகரின் கருடனைப் பற்றிய ஸ்தோத்ரங்கள் ஈண்டு குறிப்பிடத்தக்கன.

இத்தகையதோர் மூதறிஞரின் பெயரைக் கொண்ட நான் அறிவற்றவனாயினும் கூட ஏன் வாளாவிருக்க வேண்டும். எதையேனும் சொல்லத் துணிய வேண்டாமா.. என் பங்கிற்கு மேலுமொரு முத்திரையை வேதக்கதையோடு ஒப்பிட துணிகிறேன்.

seal 2

இந்த முத்திரையில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். பெண்வடிவம் தனது மறைவான பாகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைக் கொண்டு அந்தப் பெண்வடிவம் உறவுக்காக ஏங்கி நிற்பது தெளிவாகிறது. இந்தக் கருத்தாக்கம் ரிக்வேதத்தின் யம-யமி ஸம்வாதத்தைக் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. அந்தப் பகுதியில் யமி உறவுக்காக வேண்ட யமன் நிராகரிக்கும் செய்தி இடம்பெற்றுள்ளது.

இவற்றைக் கொண்டு சிந்து சமவெளி முத்திரைகளை வேதக்கதைகளைக் கொண்டும் ஆயவேண்டும் என்ற கருத்தாக்கம் வலுப்பெறுகிறது.

படங்கள் – இணையச்சுடுகை

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *