ஏகபாதமூர்த்தியும் பல்லவர் குடவரைகளும்

     இருபத்தைந்து மாஹேச்வர மூர்த்தங்களில் ஏகபாதமூர்த்தியும் ஒன்றாகக் கருதப்பெற்றுள்ளது. உலகனைத்தயும் ஒடுக்குங்காலை நான்முகனையும் மாலையும் தம்முள் ஒடுக்கும்போது காட்டிய வடிவமிது. இந்த வடிவத்தின் இலக்கணமாவது.

ரக்தவர்ண​: த்ரிணேத்ரஸ்²ச வரதா³ப⁴யஹஸ்தக​:|

க்ருʼஷ்ணாபரஸு²ஸம்ʼயுக்தோ ஜடாமகுடமண்டி³த​:||

ருʼஜ்வாக³தஸ்ததை²கேன பாதே³னாபி ஸமன்வித​:|

த³க்ஷிணோத்தரயோஸ்²சைவ பார்ஸ்²வயோருப⁴யோரபி||

கடிப்ரதே³ஸா²தூ³ர்த்⁴வந்து ப்³ரஹ்மவிஷ்ணவர்த⁴காயயுக்|

க்ருʼதாஞ்ஜலிபுடௌ ஏகபாத³யுக்தௌ ச வா மதௌ|

(உத்தர காமிகாகமம்)

     இந்த வடிவம் செந்நிறம் கொண்டு மூன்று விழிகளுடன் இருக்கும். வரதம், அபயம், மான் மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பார். நேராக நின்றபடி ஒரே காலில் நிற்பார். இரு புறங்களிலும் இடுப்புப் பகுதியிலிருந்து அரையுடலுடனும் நான்முகனும் மாலும் கைகூப்பியபடி ஒற்றைக் காலுடன் ஒருங்கியிருப்பர்.

 ekapadamurthy

     இந்த வடிவம் த்ரிமூர்த்தி என்று வழங்கப்பெறுகிறது. இந்த வடிவில் மும்மூர்த்திகளும் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இந்த வடிவத்தைக் கூறும் அத்யாயமே த்ரிமூர்த்தி ஸ்தாபனமூர்த்தி என்றே வழங்கப்பெறுகிறது. இத்தகைய ஏகபாதமூர்த்திகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் வேறொரு சிறப்புச் செய்தியும் ஆகமத்திலிருந்து கிடைக்கிறது. இந்த வடிவத்தை நிறுவ மற்றைய பாங்குகளையும் ஆகமம் எடுத்தியம்புகிறது.

அத²வா ஸி²வலிங்க³ஸ்ய பார்ஸ்²வயோ​: நதக³தௌ து தௌ|

          அல்லது சிவலிங்கத்தின் இருபுறத்திலும் வணங்கிய தலைகளுடன் அவர்களை அமைக்கலாம்.

அத²வா தௌ ப்ருʼத²க்ஸ்தா²ப்யா​: வேகவிஷ்டரமாஸ்தி²தௌ||

          அல்லது அவர்களை ஒரே மேடையில் தனியாகவும் அமைக்கலாம்.

அத²வா மத்⁴யமே லிங்க³ம்ʼ ப்ருʼத²கா³லயஸம்ʼஸ்தி²தம்|

தஸ்ய ஸவ்யேபி அஸவ்யே ச ப்³ரஹ்மவிஷ்ணூ ததா² மதௌ||

          அல்லது நடுவில் தனியாலயம் வைத்து லிங்கத்திருமேனியை எழுந்தருள்விக்கலாம். அதன் வலதிடது புறங்களில் அயனையும் மாலையும் அமைக்கலாம்.

ப்ருʼத²க்³தா⁴மஸ்தி²தா வா ஏகதா⁴மஸ்தா² வா த்ரிமூர்தய​:|

ஸம்ʼஸ்²லிஷ்டதா⁴மயுக்தா வா ப்³ரஹ்மவிஷ்ணுஸி²வா மதா​:|

பூர்வாஸ்யா​: பஸ்²சிமாஸ்யா வா பரிவாராதி³ஸம்ʼயுதா​:|

பி⁴ன்னப்ராகாரகா³ வாபி ஏகப்ராகாரஸம்ʼஸ்தி²தா​:|

ந்ருʼத்தமூர்த்யாதி³தே³வா வா ஸ்தா²பனீயாஸ்து மத்⁴யமே|

     அவர்கள் தனித்தனி ஆலயங்களில் இருந்தபடியோ அல்லது ஒரே ஆலயத்தில் அமைந்தபடியோ மும்மூர்த்திகளாகத் திகழ்வர். ஒன்றுக்கொன்று ஒட்டிய அடுத்தடுத்த ஆலயங்களிலும் மும்மூர்த்திகளை அமைக்கலாம். அவர்களை கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ அமைக்கலாம். ஒரே திருச்சுற்றிலோ அல்லது வெவ்வேறு திருச்சுற்றுக்களிலோ அமைக்கலாம். நடுவில் ஆடல்வல்லான் முதலிய மூர்த்தங்களையும் அமைக்கலாம்.

     மேற்கூறிய செய்திகளை மனத்தில் வைத்து, பல்லவர்தம் குடவரைகளை ஆயமுடியும். மஹேந்த்ர பல்லவரின் மண்டகப்பட்டு குடவரை மூன்று திருமுன்களைக் கொண்டது. அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. இதன் கல்வெட்டும் இந்தக் குடவரையை ப்ரஹ்மவிஷ்ணு மஹேச்வர லக்ஷிதாயதனம் என்றே குறிப்பிடுகிறது. மேற்கூறிய ஏகபாதமூர்த்திக்குக் கூறிய இலக்கணத்திற்கு இது எடுத்துக்காட்டாய் அமைவதைக் காணலாம். மற்றைய குடவரைகளையும் இந்தக் கருத்தாக்கத்தைக் கொண்டு ஆராயலாம். மாமண்டூர் முதலிய சில குடவரைகளில் அதிகமாக இருக்கும் திருமுன்கள் பரிவார தெய்வங்களுக்காகவேண்டும்.

lakshi

  கட்டுமானத் தளிகளில் தலைசிறந்து விளங்கும் காஞ்சிக் கைலாயநாதர் கோயில் கூட இத்தகைய கருத்தாக்கத்திலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸிம்ஹேச்வரம் மற்றும் மஹேந்த்ர வர்மேச்வரம் ஆகிய இருகோயில்களுக்குமே மாளிகைச்சுற்றில் இருபுறமும் ப்ரஹ்மவிஷ்ணுக்கள் அமைக்கப் பெற்றிருப்பது அறியற்பாலது.

brahma_1 vishnu_1

     இவையனைத்தும் ஏகபாதமூர்த்தியின் எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன.

படங்கள் – சிர. அரவிந்த் வெங்கட்ராமன்

Please follow and like us:

One thought on “ஏகபாதமூர்த்தியும் பல்லவர் குடவரைகளும்

  1. மயிலை சீனி வேங்கடசாமிக்குப் பிறகு தாங்களே நானறிந்தவரை இதனை அழகாக விளக்குகிறீர்,நன்றி கலைகள்தான் நம்மை எவ்வாறு மயக்கி தன்வயமாக்கி விடுகின்றன.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *