வடமொழி நாடகநூல்களில் சுவடியியற் குறிப்புகள்

        வடமொழியில் நாடக இலக்கியங்களுக்கென்று தனியிடம் உண்டு. அத்தகைய நூல்களிலும் சுவடியியற் குறிப்புகள் காணப்படுகின்றன. பாஸன் என்னும் கவிஞன் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனுடைய அவிமாரகம் என்னும் நாடகத்தில் புத்தகத்தைப் பற்றிய குறிப்புளது.  அந்நாடகத்தில் விதூஷகனின் வசனம்

विदूषकः भवति, इदमक्षरं नाम पुस्तके नास्ति।

        விதூஷக​: ப⁴வதி, இதமக்ஷரம்ʼ நாம புஸ்தகே நாஸ்தி

        இவ்வசனத்தின் பொருள். சேடியே இந்த எழுத்து புத்தகத்தில் இல்லையே. என்பது. இதன் மூலம் புத்தகங்களைப் பற்றிய குறிப்பு இந்நாடகத்தினின்று கிடைக்கிறது.

        மேலும் ப்ரதிஜ்ஞா யௌகந்தராயணம் என்னும் நாடகத்தில் எழுத்தனைப் பற்றியக் குறிப்புள்ளது. அதன் முதல் காட்சியிலேயே லேகக மாம் அபவஹதி என்றும் த்வர்யதாம் லேகக என்றும் எழுத்தனைப் பற்றிய இரு குறிப்புகள் உள்ளன

        இவை தவிர அபிஷேக நாடகத்திலும் புத்தகங்களைப் பற்றிய குறிப்புள்ளது. மேலும் வாஸவதத்த நாடகத்தில் பலகையில் எழுதுதற்கான குறிப்பில்

      हृदयफलके सङ्कल्पधूलिकया चित्रितमिव।

ஹ்ருʼதயபலகே ஸங்கல்பதூ⁴லிகயா சித்ரிதமிவ

        என்று இதயப் பலகையில் எண்ணமெனும் எழுத்தாணி கொண்டு எழுதுவதாகச் சொல்லும் இந்த உவமானம் பலகையில் எழுதுதல் தொடர்பான குறிப்பாக உள்ளது.

காளிதாஸனின் நாடகங்களிலும் இத்தகைய குறிப்புகளுள்ளன. காளிதாஸன் இயற்றிய விக்ரமோர்வசியத்தில்

       भुजङ्गनिर्मोक इव भूर्जपत्रगतोयमक्षरविन्यासः

பு⁴ஜங்கனிர்மோக இவ பூ⁴ர்ஜபத்ரகதோயமக்ஷரவின்யாஸ​:

        இதன் பொருள், பாம்பின் தோல் போன்ற பூர்ஜபத்ரத்தில் எழுத்துக்களின் அமைப்பு இருந்தது என்னும் இக்குறிப்பின் மூலம் பூர்ஜபத்ரங்களில் எழுதும் வழக்கத்திற்கான குறிப்பை அறியலாம். மேலும் உலகப் புகழ் பெற்ற அபிஞான சாகுந்தலம் என்னும் நாடகத்திலும்

एतस्मिन् शुकोदरसुकुमारे नलिनीपत्रे पत्रच्छेदभक्त्या नखैः निक्षिप्तवर्णं कुरु।

ஏதஸ்மின் ஸுகோதரஸுகுமாரே நலினீபத்ரே பத்ரச்சேதப⁴க்த்யா நகை​: நிக்ஷிப்தவர்ணம்ʼ குரு

        இதன் பொருளாவது, கிளியின் வயிறு போன்று மிருதுவான இந்த தாமரையிலையில் நகங்களால் எழுத்துக்களை எழுது என்று சகுந்தலைக்குத் தோழி கூறுகிறாள். காதல் கடிதம் எழுதும் நேரம் இது தொடர்பான இடத்தில் இடம்பெற்றுள்ள இக்குறிப்பின் மூலம் தாமரையிலையில் நகத்தால் எழுதும் வழக்கத்தினை அறியலாம்.  மேலும் அதே நாடகத்தில்

      अमात्यो विज्ञापयति अर्थजातस्य गणना बहुलतया एकमेवं पौरकार्यं प्रत्यवीक्षितम्।

அமாத்யோ விஜ்ஞாபயதி அர்தஜாதஸ்ய கணனா பஹுலதயா ஏகமேவம்ʼ பௌரகார்யம்ʼ ப்ரத்யவீக்ஷிதம்

        என்னும் குறிப்புளது. இதன் பொருளாவது அமைச்சரின் கூற்றாவது, பொருட்களின் எண்ணிக்கை செய்து நகரகார்யம் சரிபார்த்து எழுதியாயிற்று. என்று இதன் மூலம் எழுதுதலுக்குண்டான குறிப்பும் எண்ணிக்கை செய்து எழுதும் பழக்கத்தின் குறிப்பும் விளங்கும்.

     பொயு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸுபந்து தமது வாஸவ தத்தத்தில் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

      विश्वं गणयतो धातुः शशिखटिनीकान्तेन तमोमष्या अजिन इव वियति संसारस्यातिशून्यत्वात् शून्यबिन्दव इव विलिखिताः तारा व्यराजन्त।

விஸ்வம்ʼ கணயதோ தா⁴து​: ஸஸிகடினீகாந்தேன தமோமஷ்யா அஜின இவ வியதி ஸம்ʼஸாரஸ்யாதிஸூன்யத்வாத் ஸூன்யபிந்தவ இவ விலிகிதா​: தாரா வ்யராஜந்த

        உலகைப் படைத்த நான்முகனின் தோலில் எழுதப் பட்டது போல ஆகாயத்தில் புள்ளிகள் போன்று நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. இக்குறிப்பின் மூலம் தோலில் எழுதும் வழக்கம் தெற்றென விளங்குகிறது.

மேலும் மாலதி மாதவத்திலும்

      अरुणधातुवर्त्त्या फलकेषु लिखन्तीं

அருணதா⁴துவர்த்த்யா பலகேஷு லிகந்தீம்ʼ

        என்று செந்தாது தூளிகையால் பலகைகளில் எழுதுபவள் என்னும் குறிப்புள்ளது. மேலும் சாகுந்தலநாடகத்திலும் தூரிகையை கொண்டுவரச் சொல்லும் குறிப்பு தூரிகையின் பயன்பாட்டை விளக்குவதாக உள்ளது. மேலும் முத்ராராக்ஷஸ நாடகத்திலும் மை தொடர்பான குறிப்புளது.

      मषीभाजनं पत्रं चोपनय। மஷீபா⁴ஜனம்ʼ பத்ரம்ʼ சோபனய

        இதன் பொருள், மைக்கூட்டையும் ஏட்டையும் கொண்டு வா என்பதாகும். இதன் மூலம் மையின் பழமையை அறியலாம்.

மேலும் ம்ருச்ச கடிக நாடகத்தில் மைகுடிகைகளுக்கான குறிப்பும் உள்ளது

      मेषराशिप्रविष्टेव मषीघुटिका

மேஷராஸிப்ரவிஷ்டேவ மஷீகு⁴டிகா

        மேஷராசி புகுந்தது போல மை குடிகை என்ற இந்தக் குறிப்பின் மூலம் மாத்திரைகள் போன்றும் மை தயாரிக்கப் பட்டது விளங்குகிறது.

இவ்விதம் வடமொழி நாடகங்களில் சுவடியியற் குறிப்புக்கள் விளங்குகின்றன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *