லால்குடி மஹாகாள மூர்த்தி

பின்வரும் அரிய சிற்பத்தை இணையத்தில் காணநேர்ந்தது. இந்தச் சிற்பம் லால்குடி ஸப்தரிஷீச்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தச் சிற்பம் ஜடாபாரத்தைக் கொண்டுள்ளது. அதன் நடுவே ஒரு கபாலமும் அமைந்துள்ளது. தலையில் லலாடபட்டம் அழகுற அமைந்துள்ளது. சிறு கோரைப்பற்கள் அமைந்திருந்தாலும் கூட இதன் புன்னகை மயக்குகிறது. ஒரு சிறிய கண்டிகையும் அதனையொட்டி ருத்ராக்ஷமாலையும் மார்பை அலங்கரிக்கின்றன. முப்புரிநூல் உபவீதமாக குறுக்கே அமைந்துள்ளது. நெற்றிக்கண் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் சந்தனத்தால் மறைந்துள்ளது. நாகவடிவிலான கேயூரம் புயங்களை அலங்கரிக்கிறது. மேலிரு கைகளிலும முத்தலைச் சூலமும் கட்வாங்கமும் அமைந்துள்ளன. கீழ் வலக்கையில் அமைந்துள்ள வடிவம் தெளிவாக இல்லை. வீணைபோன்றதாக தெரிகிறது. கீழிடக்கை தொடை மீதமர்ந்துள்ளது. உருக்குலைந்துள்ளது. இவர் உதரபந்தம் பூண்டு ஸுகாஸனத்தில் அமர்ந்திருக்கிறார். பத்மபீடத்தில் அமைந்துள்ளார்.

மஹாகாளர்

மஹாகாளர்

இத்தகைய வடிவம் லலிதோபாக்யானம் முதலிய நூல்களில் மஹாகாளர் என்று கூறப்பெற்றிருக்கிறது. அந்த நூலில் இவருடன் மஹாகாளியும் வீற்றிருப்பதாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதனைப் போன்றதொரு வடிவம் மஹாகாளியுடன் வீற்றிருக்கும் கோலத்தை காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலிலுள்ள ரிஷபேச்வரர் திருமுன்னில் லிங்கத்தின் பின்புறம் அமைந்திருக்கக் காணலாம். இந்தத் திருமுன் கட்டிடக்கலையின் அடிப்படையில் ராஜஸிம்ஹ பல்லவனின் காலத்ததாக நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது.

mahakala_kanchi copy

இந்தச் சிற்பத்தைக் கொண்டு ரிஷபேச்வரர் திருமுன் காபாலிகர்களின் வழிபாட்டிடமாக கூறப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

2 thoughts on “லால்குடி மஹாகாள மூர்த்தி

  1. அருமையில் அருமை,நன்றி காள என்பதன் பொருள் யாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *