ராஜஸிம்ஹனின் கண்டஹர்ம்யங்கள்

     ஒப்புவமையற்ற வேந்தனான ராஜஸிம்ஹனென்னும் புரவலனால் புரக்கப்பெற்ற சிற்பிகள் கல்லில் கலைவண்ணம் கண்டனர். காஞ்சி கைலாஸநாதர் கோயிலும் பனமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலும் இத்தகைய கற்கோயில் வண்ணத்தின் ஈடற்ற எடுத்துக்காட்டுக்களாய்த் திகழ்கின்றன. இந்தக் கோயில்களில் காணப்பெறும கண்டஹர்ம்யம் என்னும் சிற்பக்கலைக்கூறு வேறு கோயில்களிலும் காணப்பெறாத ஒப்புவமையற்ற ஒன்றாகும்.

     காஞ்சிக் கைலாஸநாதர் கோயில் மிச்ர விஷ்ணு சந்த அமைப்பில் அமைந்த நான்கு தளக் கோயிலாகும். இந்த விமானத்தின் நான்கு புறமும் நான்கு பத்ரசாலைகளும் மூலைகளில் நான்கு கர்ணசாலைகளும் இடம் பெற்றுள்ளன. கர்ணசாலைகளில் ஒரு சிறப்புக் கூறாக ஸன்னிதி அமைக்கப் பெற்றுள்ளது. இது ஒரு தனி ஸன்னிதியாக அமைந்து அதன் நடுவே எந்தையின் வேறுபட்ட வடிவங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. பத்ர சாலையில் அமைந்த ஸன்னிதிகளும் இவ்வண்ணமே அமைந்துள்ளன.

     இத்தகைய கர்ணங்களிலும் பத்ரங்களிலும் அமைந்துள்ள ஸன்னிதிகளும் ஷட்வர்க்கங்களைப் பெற்றுள்ளன. இந்த விமானம் ஸாந்தார அமைப்பைச் சார்ந்தது. ஆகவே இந்த ஸன்னிதிகள் வெளிச்சுவரின் நீட்சியாக அமைந்துள்ளன. இந்த ஸன்னிதிகளின் ப்ரஸ்தரத்திற்கு மேலான அமைப்புக்கள் விமானத்தின் முதல் தளத்தின் ஹார உறுப்புக்களாக அமைந்துள்ளமை வியக்கத்தக்கவொன்றாகும். இத்தகையதோர் அமைப்பு இந்த இரு கோயில்களில் மட்டுமே அமைந்துள்ளது.

     பத்ரசாலையிலுள்ள ஸன்னிதியின் சாலை வடிவமான சிகரங்கள் முதல் தளத்தின் முகபத்ரமாகவும் கர்ண ஸன்னிதியின் மேலமைந்த கூட வடிவான சிகரம் முதல் தளத்தின் கர்ணகூடமாகவும் அமைந்துள்ளன. இந்த சிகரங்களும் ஷட்வர்க்கத்தைப் பெற்றவை. இந்த அமைப்புக்கள் கீழுள்ள ஸன்னிதிகளுக்கு சிகரங்களாகவும் விமான முதல் தளத்தின் ஹாரமாகவும் அமைகின்றன.

khanda_3 copy khanda_5 copy

     இதைப்போன்றதொரு கட்டமைப்பு பனைமலை தாளகிரீச்வரர் கோயிலிலும் காணப்பெறுகிறது. ஆனால் அங்கே கர்ணத்தின் கீழான ஸன்னிதிகள் காணப்பெறவில்லை. ஆனால் சாலையிலுள்ள ஸன்னிதிகளும் அவற்றின் மேலமைப்புக்களும் காணப்பெறுகின்றன. சாலையிலுள்ள ஸன்னிதிகள் நடுவே தாராலிங்கத்தைக் கொண்டுள்ளன.

     இந்த இரு விமானங்களின் தளச்சந்தத்தைக் காணலாம். பனைமலையில் இத்தகைய எல்லா ஸன்னிதிகளுக்கும் நடுவாயில் அமைக்கப் பெற்றுள்ளது. இதே அமைப்பு காஞ்சிக் கைலாஸநாதர் கோயிலிலும் அமைந்திருக்கிறது. ஆனால் தெற்கு மற்றும் வடக்கிலான ஸன்னிதிகள் நேரான வாயிலைப் பெறாமல் கிழக்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளன.

    1

11

      இத்தகைய ஸன்னிதிகள் கண்ட ஹர்ம்யம் என்று நூல்களில் வழங்கப்பெற்றுள்ளன. இதன் பொருள் சிறு கோயில் என்பது இதன் பொருள். காமிகாகமம் நந்த்யாவர்த்தம் என்னும் கட்டிடத்தை விளக்கும்போது இத்தகைய சொல்லாட்சியைத் தருகிறது.

सालिन्दं खण्डहर्म्यं वा कूटकोष्ठकभारकम्  ३४

ஸாலிந்த³ம்ʼ க²ண்ட³ஹர்ம்யம்ʼ வா கூடகோஷ்ட²கபா⁴ரகம் 34

     இந்த கட்டிடத்திற்கு அலிந்தம் (ஸாந்தார நாழி), கண்ட ஹர்ம்யம் மற்றும் கூடம் கோஷ்டம் ஆகியவற்றை அமைக்கலாம். இத்தகைய கண்ட ஹர்ம்யங்களின் அளவையும் அந்த ஆகமம் விளக்குகிறது.

     खण्डहर्म्यसमायुक्तं समन्तात्परिकल्पयेत्  ४२

स्वव्यासार्धं तदर्धं वा कर्णकूटस्य निर्गमः

शालायामविशालेन पञ्चभागविनिष्क्रमात्  ४३

बाह्ये तु खण्डहर्म्यं स्याच्चतुर्भद्रं  प्रयोजयेत्

க²ண்ட³ஹர்ம்யஸமாயுக்தம்ʼ ஸமந்தாத்பரிகல்பயேத் 42

ஸ்வவ்யாஸார்த⁴ம்ʼ தத³ர்த⁴ம்ʼ வா கர்ணகூடஸ்ய நிர்க³ம​:

ஸா²லாயாமவிஸா²லேன பஞ்சபா⁴க³வினிஷ்க்ரமாத் 43

பா³ஹ்யே து க²ண்ட³ஹர்ம்யம்ʼ ஸ்யாச்சதுர்ப⁴த்³ரம்ʼ ப்ரயோஜயேத்

     கர்ணகூடத்திலமையும் கண்ட ஹர்ம்யம் அதன் அகலத்தில் பாதி அல்லது கால்வாசி நிர்கமத்தை – ஒழுங்கைப் பெற்றிருக்கும். சாலையில் அமையும் கண்டஹர்ம்யம் அதன் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்கு நிர்கமத்தைக் கொண்டிருக்கும்.

     மேலும் அந்த ஆகமம் கண்டஹர்ம்யத்தில் பஞ்ஜரங்களையும் வைக்கும் முறையையும் குறிப்பிடுகிறது.

अन्तरे पञ्जरान्कुर्यात्खण्डहर्म्ये विशेषतः  ९३

அந்தரே பஞ்ஜரான் குர்யாத் க²ண்ட³ஹர்ம்யே விஸே²ஷத​: 93

     இத்தகைய கண்டஹர்ம்யங்கள் மூன்று தளம் முதலிய எல்லாவற்றிலும் அமைக்கலாம்.

     மயமதமும் பத்ரகோஷ்டம் என்னும் கட்டிடத்தில் கண்டஹர்ம்யம் அமையும் அளவீடுகளைத் தருகிறது. கோயிலை ஒன்பது அம்சங்களாகப் பிரித்தால் மூன்று பங்குகள் கருவறையும் ஒரு பங்கு அலிந்தமும் ஒரு பங்கு கண்ட ஹர்ம்யமும் அமையும் என்று குறிப்பிடுகிறது. இதே அளவு ஜயாவஹம் என்னும் கட்டிடத்திற்கும் அமையும் என்றும் குறிப்பிடுகிறது. மயமதம் கண்டஹர்ம்யம் இரண்டு, நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழு தளங்களுள்ள விமானங்களில் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறது.

     இத்தகைய அமைப்புக்களைச் சுட்டுவதற்கு அங்காலயம் என்னும் சொல்லாட்சியைச் சில கட்டுரைகளில் காணநேர்ந்தது. அத்தகைய சொல்லாட்சி எந்த நூலிலும் பயன்படவில்லை. கண்டஹர்ம்யம் என்னும் சொல்லாட்சியையே பயன்படுத்த வேண்டும்.

Please follow and like us:

4 thoughts on “ராஜஸிம்ஹனின் கண்டஹர்ம்யங்கள்

  1. மிகவும் தெளிவான எளியநடையில்
    கூறியிருக்கின்றிர்கள்.பயனுள்ள. செய்தி

  2. வெகு விவரமான விளக்கவுரையும் படங்களும். மிகவும் பயனுள்ளது. பாராட்டூக்கள். மிக்க நன்றி!

  3. அதிக ச்மஸ்க்ருத பதங்களை உபயோகித்து விளக்கியுள்ளீர்கள். அதிகமானோருக்குப் புரியும் படியாக, அந்தந்த ச்மஸ்க்ருத வார்த்திகளின் தமிழ் அல்லது ஆங்கில அர்த்தத்தையும் உடனுக்குடன் கீழேயே சேர்த்தால், நல்லதொரு பாட நூலாக அமையும். For temple architecture students. Good work.

  4. அதிக ச்மஸ்க்ருத பதங்களை உபயோகித்து விளக்கியுள்ளீர்கள். அதிகமானோருக்குப் புரியும் படியாக, அந்தந்த ச்மஸ்க்ருத வார்த்தைகளின் தமிழ் அல்லது ஆங்கில அர்த்தத்தையும் உடனுக்குடன் கீழேயே சேர்த்தால், நல்லதொரு பாட நூலாக அமையும். For temple architecture students. Good work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *