சங்க இலக்கியத்தில் சூத, மாகத, வேதாளிகர் – சொல்விளக்கம்

     சங்க இலக்கியங்களில் பலவகையான சொற்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் சில சொற்கள் உரையாசிரியர்தம் உரைகொண்டே அறியற்பாலன. அத்தகையதோர் சொல்லாட்சி வேதாளிகர் என்பதாகும். மதுரைக்காஞ்சி பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது.

சூதர் வாழ்த்த மாகதர் நுவல

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப
(மதுரைக்காஞ்சி : 671-672)

     சூதர் வாழ்த்துக்களைக் கூறவும் மாகதர் பாடவும் வேதாளிகரும் நாழிகைக் கணக்கர் எழுப்பவும் பள்ளியெழுப்பும் முரசுகள் ஒலியெழுப்பவும் ஏறுகள் முழங்கவும் காலைப்பொழுது திகழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

     இங்கு சூதர் என்னும் சொல்லிற்கு நின்றேத்துவார் என்றும் மாகதர் என்னும் சொல்லிற்கு இருந்தேத்துவார் என்றும் உரையாசிரியர் பொருள் தருகிறார். வேதாளிகர் ஏன்பார் துறைக்கேற்ப இசைப்பார் என்றும் பொருள் தருகிறார்.

     சிலப்பதிகாரத்தின் புகார் காண்டமும் பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது.

சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்

     சூதர் மாகதர் வேதாளிகர் மற்றும் நாழிகைக் கணக்கர் ஆகியோருடன் சாந்திக் கூத்தரும் இன்னும் பலரும் சூழ்ந்திருப்பதாக சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. ஈண்டும் சூதர் மாகதர் வேதாளியருக்கு முன் கூறிய  விளக்கமே உரையாசிரியர்களால் தரப்பெற்றுள்ளது. மணிமேகலையும் இம்மூவரையும் குறிப்பிடுகிறது.

     ஆயின் இந்தச் சொற்கள் வடமொழிச் சொற்கள் என்பது வடமொழி இலக்கியங்களில் ஈடுபட்ட எவரும் உணரற்குரிய பொருளாம். ஸூதர், மாகதர் மற்றும் வைதாளிகர் ஆகியோரைப் பற்றி வடமொழி இலக்கணம், விஷ்ணுபுராணம், ராமாயணம், மஹாபாரதம், அமரகோசம் ஆகிய நூல்களில் விளக்கங்கள் காணப்பெறுகின்றன.

     இவர்களைப் பொதுவாக ஸ்துதி-பாடகர்கள் – துதிசெய்வோர் என்று வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. விஷ்ணுபுராணம் இவர்கள் யாகத்தின் போது வேனனின் உடலிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிடுகிறது.

ततोऽस्य दक्षिणं हस्तं ममन्थुश्च तदा द्विजाः।

मथ्यमाने च तत्राभूत् पृथुर्वैण्यः प्रतापवान्॥

तस्य वै जातमात्रस्य यज्ञे पैतामहे शुभे।

सूतः सूत्यां समुत्पन्नः सौत्येऽहनि महामते!॥

तस्मिन्नेव महायज्ञे जज्ञे प्राज्ञोऽथ मागधः।

प्रोक्तौ तदा मुनिवरैस्तावुभौ सूतमागधौ॥

स्तूयतामेषः नृपतिः पृथुर्वैण्यः प्रतापवान्।”

विष्णुपुराणे १ अंशे ४१ अध्यायः

மத்²யமானே ச தத்ராபூ⁴த் ப்ருʼது²ர்வைண்ய​: ப்ரதாபவான்||

தஸ்ய வை ஜாதமாத்ரஸ்ய யஜ்ஞே பைதாமஹே ஸு²பே⁴|

ஸூத​: ஸூத்யாம்ʼ ஸமுத்பன்ன​: ஸௌத்யே(அ)ஹனி மஹாமதே!||

தஸ்மின்னேவ மஹாயஜ்ஞே ஜஜ்ஞே ப்ராஜ்ஞோ(அ)த² மாக³த⁴​:|

ப்ரோக்தௌ ததா³ முனிவரைஸ்தாவுபௌ⁴ ஸூதமாக³தௌ⁴||

ஸ்தூயதாமேஷ​: ந்ருʼபதி​: ப்ருʼது²ர்வைண்ய​: ப்ரதாபவான்| “

விஷ்ணுபுராணே 1 அம்ʼஸே² 41 அத்⁴யாய​:

      இவர்களின் ஜாதி முதலிய விவரங்கள் மஹாபாரதம், மனுஸ்ம்ருதி ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றன. இவர்களுள் ஸூதர் என்பவரே புராணங்களைக் கூறுவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஸூதபௌராணிகர் என்றே இவ்வகையோரைக் குறிப்பிடுவதுண்டு. மாகதர் என்போர் வாக்யஜீவனர்கள் – பேச்சைக் கொண்டு வாழ்பவர்கள் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. வைதாளிகன் என்பான் புகழ்பாடி எழுப்புபவன் என்று மேதினி கோசம் முதலிய எல்லா நூல்களும் குறிப்பிடுகின்றன. காளிதாஸனின் நாடகங்களிலும், ரத்னாவளி நாடிகையிலும் மாக காவ்யத்திலும் வைதாளிகன் அரசனை எழுப்பும் காட்சிகளைக் காணவியலும். இத்தகைய ஸூதமாகதவைதாளிகர்கள் அயோத்தியில் நிறைந்திருப்பதாக வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகிறது.

     இவை வடசொற்கள் என்ற குறிப்பையும் வடமொழிப் பயன்பாடுகளையும் உரையாசிரியர்கள் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது.

Please follow and like us:

2 thoughts on “சங்க இலக்கியத்தில் சூத, மாகத, வேதாளிகர் – சொல்விளக்கம்

  1. தமிழ்இலக்கணம் வடசொற்களை ஒதுக்கவில்லை,ஏற்க அனுமதிக்கிறது,வட சொல்லோசையை மட்டும் தமிழாக்கி ஏற்கக்கூறுகிறது.எனவே இதுவடசொல் எனப்பிரித்துக்கூறும் மரபு எனக்குத்தெரிந்து இல்லை.மேலும் தோல் இசைக்கருவிகள் கொண்ட சிறுபாணர்,பெரும்பாணர்,பறையடிப்போர்,துடியர் போன்றோர் பாவம் நாடோடி இசைபாடும் பொருளாதாரம் இல்லா பழுமரம்தேடிப்பறக்கும் பறவைகளாக உள்ளனர். இவர்கள் இந்தியா முழுதும் இருந்தனர்,திருஞானசம்பந்தர் தாழ்த்தப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் கூடவே கோயில்களெங்கும் அழைத்து இசைக்கச்செய்தார் எனபெரியபுராணம் கூறுகிறது.முற்காலத்தில் சமணபௌத்த காலத்தில் இசைவெறுக்கப்பட்டது. அதனால் ஆதரிப்பார் இன்றி இவர்கள் உழவுத்தொழிலுக்குத் வந்தனர்.பழந்தமிழ்இசைஅழிந்தது, பிற்காலத்தில் தேவார இசைகூட தாழ்த்தப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழிவந்த பெண் ஒருவரிடமிருந்து ஓதுவார்கள் கற்று மீட்டனர் எனப்படித்துள்ளேன்.

  2. இலக்கிய ஞானமும் எடுத்துக்காட்டுகளும் அற்புதம். சங்க இலக்கியத்திற்கும் பக்தி நூல், சிலம்பு, மணிமேகலை, சொற்றொடர் தொடர்ச்சியுண்டா எனும் பல நாள் ஐயம் தீர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *