எல்லோராவின் கின்னர சிவன்

     கீழ்க்கண்ட படத்தை ஸ்ரீ. அரவிந்த் வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து பெற்றேன். இந்தப் படம் எல்லோராவில் 21 ஆம் எண்ணிட்ட கல்மண்டகத்தில் அமைந்துள்ளது. ஈண்டு எந்தை மிகப் பயங்கரமானதோர் வடிவோடு அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் அதிபங்க நிலையில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு அஞ்சத்தக்கப் பார்வையைக் கொண்டிருக்கிறார். அவர் தம் கோரைப் பற்களோடு புன்முறுவல் பூத்தபடியிருக்கிறார். அவர்தம் காதுகளைக் கர்ண குண்டலமும் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றன. அவர் கழுத்தில் துவங்கி வெறும் எலம்புக்கூடாகத்தான் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர்தம் மேற்கரங்களில் கத்தியும் புறா போன்ற பறவையும் அமைந்திருக்கின்றன. கீழிரு கரங்களும் சிதைவுற்றிருக்கின்றன. அவர்தம் இடையை தோலினாலான முறுக்கிய இடைக்கச்சு அலங்கரிக்கிறது. அதைத் தொடர்ந்து கௌபீனம் அணிந்துள்ளார். அவர்தம் பிறப்புறுப்பின் மேலுள்ள புடைப்பு இந்த வடிவம் ஆண் என்பதை விளக்குகிறது. அவர்தம் கால்களும் சிதைவுற்றிருக்கின்றன. இடக்காலை ஒரு பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது. இடப்புறம் இரண்டு பிசாசுகளும் வலப்புறம் ஒரு தேவ்வடிவமும் மேலே ஒரு பூதகணமும் செதுக்கப்பெற்றிருக்கின்றன. மேல் வலப்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ள இரு ஆந்தைகள் இவையனைத்தும் சுடுகாட்டில் நிகழ்வதைக் காட்டுகின்றன.

kinnara

இத்தகையதோர் வடிவத்தைச் சில்பரத்னம் கின்னர சிவன் என்று குறிப்பிடுகிறது. அந்த நூல் பின்வரும் இலக்கணத்தை அளிக்கிறது.

श्मशानस्थो मौनी बहुविधपिशाचैः परिवृतः

      कपर्दी कौपीनी सुसितभसितोद्धूलिततनुः।

      त्रिशूलाग्रे कृत्वा निखिलनृपयक्ष्माह्वयहरिं

      कपालाग्नौ जुह्वद् दहतु दुरितं किन्नरशिवः।।

     கின்னர சிவன் சுடுகாட்டில் அமைந்திருப்பார். மௌனவ்ரதத்தில் வீற்றிருப்பார். அவர் பல பிசாசுகளால் சூழப்பெற்றவராக இருப்பார். அவர் ஜடை பூண்டு கோவணம் அணிந்திருப்பார். உடல்முழுவதும் திருநீறு துலங்க வீற்றிருப்பார். அவர் தமது சூலத்தில் குத்தியவாறு எலும்புருக்கியின் வடிவமான சிங்கத்தைக் கபால அக்னியில் காட்டியபடி இருப்பார். இத்தகைய வடிவுடைய கின்னர சிவன் நமது பாவங்களைப் போக்கட்டும்.

     மேற்கூறிய இலக்கணங்களில் பெரும்பாலும் எல்லோராவின் வடிவோடு பொருந்தி வருவதைக் காணலாம். ஆனால் கீழ்க்கைகளில் சூலம், சிங்கம் ஆகியவையும் மேற்கைகளில் இருக்கும் இரு பொருட்களும் இலக்கணத்திற்கும் வடிவத்திற்கும் வேறுபாடாக உள்ளன. கீழிரு கரங்களும் சிதைவுற்றிருப்பதால் சூலமிருந்திருக்கலாமென்று உய்த்துணரக்கிடக்கிறது. மேலிரு கைகளின் இலக்கணம் வேறேதேனும் நூல்களில் தேடவேண்டியுள்ளது.

     சில அறிஞர்கள் இவ்வடிவை சாமுண்டி என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்த வடிவம் ஸப்த மாதாக்களை அடுத்த அமைக்கப்பெற்றிருப்பதால் இத்தகையதோர் முடிவுக்கு வந்துள்ளனர். ஆயின் இவ்வடிவம் ஆண் வடிவம் என்பது முன்பே நிறுவப்பெற்றது. ஆகவே இவ்வடிவம் கின்னரசிவனே என்பது வெள்ளிடைமலையாகிறது. இத்தகைய வடிவம் நமது பாவங்களையும் போக்கட்டும்.

Please follow and like us:

One thought on “எல்லோராவின் கின்னர சிவன்

  1. எல்லோராவின் பல புதிர்களில் ஒன்றை தீர்த்து வைத்ததற்கு நன்றி நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *