பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள்

     பாரதத்தின் எழுத்தியலின் பழமைக்கான சான்றுகளை வேத, வேதாங்க, இதிஹாஸ, புராண, தர்ம, அர்த்த, காம சாஸ்த்ரங்களினின்றும் வடமொழிக்காப்பியங்களிலிருந்தும் இதுகாறும் பார்த்தோம். பொதுயுகத்தின் முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டாரும் கூட தத்தம் குறிப்புக்களில் பண்டைய எழுத்தியலைப் பதிவு செய்துள்ளனர். அதுபற்றி காண்போம்.

  1. கிரேக்க எழுத்தர்கள்

     கிரேக்க எழுத்தர்களான நியர்கோஸ், மெகஸ்தனிஸ் மற்றும் கர்டியஸ் ஆகியோரின் குறிப்புக்கள் பொயுமு 326-லிருந்தே கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பண்டைய காலத்தில் பாரதத்தில் இருந்த நூல்களைப் பற்றியும் நூல்களை எழுதப் பயன்படுத்திய பொருட்களைப் பற்றியும் நிறுவ உதவுகின்றன.

     நியர்கோஸ் பண்டைய பாரதத்தில் பஞ்சையும் கிழிந்த துணிகளையும் கொண்டு காகிதம் தயாரிக்கும் முறை இருந்ததைக் குறிப்பிடுகிறார். இதை சீனாவுக்கு முன்னமேயே பாரதம் காகிதம் தயாரிதத்தற்குச் சான்றாகக் குறிப்பிடவியலும்.

     கர்டியஸ் என்பார் மரப்பட்டையின் உட்பகுதி எழுதுவதற்குப் பயன்பட்டதைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்ட மரப்பட்டை பூர்ஜபத்ரமாக இருக்கவேண்டும். பாடலிபுத்திரத்தில் தங்கிய மெகஸ்தனிஸ் ஓய்வுவிடுதிகள் இரண்டுக்கும் இடையில் தூரத்தைக் குறிக்கும் மைல் கற்கள் வைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் பஞ்சாங்கங்களும் தர்ம சாஸ்த்ர நூல்களும் இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  1. சீனக் கலைக்களஞ்சியம்

     பொயு 668-இல் பௌத்த நூல்களான த்ரிபிடக நூல்களிலிருந்து தொகுக்கப்பெற்ற கலைக்களஞ்சியம் ஃப-வான்-ஷு-லின் என்பதாகும். இந்த நூல் சீனாவில் எழுதப்பெற்றது. இந்த நூல் மூன்று விதமான எழுத்துமுறைகளைக் குறிப்பிடுகிறது.

  1. ஃபான் அல்லது ப்ரஹ்மனால் கண்டறியப்பெற்ற ப்ராஹ்மீ. இடமிருந்து வலமாக எழுதப்பெறுவது.
  2. கியா-லு கண்டறிந்த கரோஷ்டி, வலமிருந்து இடமாக எழுதப்பெறுவது.
  3. ஸாங்கிச் என்பார் கண்டறிந்த சீனலிபி, மேலிருந்து கீழாக எழுதப்பெறுவது.

இந்தக் கலைக்களஞ்சியம் முதலிரண்டு வரிவடிவங்கள் பாரதத்திலும் இறுதி வரிவடிவம் சீனத்திலும் தோன்றியதாகக் குறிப்பிடுகிறது.

இந்தக் கலைக்களஞ்சியம் ப்ரஹ்மனால் தோற்றுவிக்கப்பெற்றதாக ப்ராஹ்மி லிபியைக் குறிப்பிடுவது முக்கியமான குறிப்பாகும்.

மற்றைய யாத்ரிகர்கள்

     பொயு ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு யாத்ரிகராக வந்த யுவான் சுவாங் பாரதத்தில் எழுத்துமுறை மிகப் பண்டைய காலத்திலிருந்தே புழக்கத்திலிருப்பதைக் குறிப்பிடுகிறார். அவர் காச்மீரத்திலுள்ள நூலகத்திலிருந்து இருபது எழுத்தர்களைக் கொண்டு 657 நூல்களைப் ப்ரதி எடுத்திருக்கிறார்.

     ஏழாம் நூற்றாண்டில் நாளந்தாவில் தங்கிய இட்ஸிங் என்னும் வேறொரு யாத்ரிகர் ஐந்து லக்ஷம் ச்லோகங்களைக் கொண்ட நானூறு நூல்களைப் ப்ரதி எடுத்ததாகக் குறிப்பிடுகிறார். இத்தகையதோர் பெரும் நூற்தொகுப்பு சில நூற்றாண்டுகளில் வந்திருக்காது என்பது உய்த்துணரக் கிடக்கிறது.

     இவ்விதம் வெளிநாட்டார் நமது பண்டைய எழுத்தியலைப் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.

Please follow and like us:

One thought on “பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள்

  1. இப்பொழுதுதான் புறிகிறது.ஐராவதம் மகாதேவன் தமிழ் எழுத்துமுறைக்கு ஏன் பிராமி என்று பெயரிட்டார் என்று தமிழுக்கு என்று தனித்த எழுத்துமுறை இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *