நாம் ஏற்கனவே எந்தையின் ஆலயத்தில் மூன்று நந்திகள் இருப்பதைக் கண்டோம்.
- மஹாகாளனோடு சேர்ந்த த்வாரபாலகனான நந்தி
- அதிகார நந்தி
- காளை நந்தி
நந்தி மற்றும் மஹாகாளனின் கதைகளையும் படிமங்களையும் பார்த்தோம். இப்போது அதிகார நந்தியின் கதைகளையும் இலக்கணத்தையும் பார்ப்போம்.
- கதைகள்
1.1. முற்பிறவி
கைலாயத்துக் கணங்களில் முக்யமாகத் திகழ்ந்தவன் வீரகன். அவன் மிகவும் ஆற்றலோடு எந்தையுடன் பார்வதியுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டான். திருமணத்திற்குப் பிறகு பார்வதி எந்தையிடம் பல்வேறு வடிவங்களையுடைய பூதங்களைப் பற்றிக் கேட்டாள். ஒவ்வொரு கணமாக எந்தை அறிமுகம் செய்தார். இறுதியாக இளையவனாகத் துடிப்புடன் இருக்கும் வீரகனைப் பற்றிக் கேட்டாள் அன்னை. அவனுடைய துடிப்பினால் ஈர்க்கப்பட்டவளாய் எந்தையிடம் அவனைப் போலொரு மகன் வேண்டுமெனக் கேட்டாள். அவனையே மகனாக ஏற்றுக் கொள்ளும்படி எந்தை கூறினார். அவனைத் தத்தெடுத்து அன்பை மாரியாகப் பொழிந்து வளர்த்தனள்.
ஒருமுறை அன்னையைக் கொஞ்சும் போது எந்தை அவளைச் சினமூட்டும் விதமாக வெளுத்த என் உடலில் உனது கறுத்த கரத்தைப் பார்க்கும்போது சந்தனமரத்தில் கருநிறப்பாம்பு சூழ்ந்ததைப் போலிருப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அன்னை வெகுண்டனள். பலவிதமான ஏசினாள். இறைவன் பரிதாபமாக இறைஞ்சி அவள் காலிலும் விழுந்தனன். அதை ஏற்காத பார்வதி தன் தந்தைவீடான இயமத்திற்குச் செல்ல விழைந்தனள். போகும்போது அவள் வீரகனை அழைத்து எந்தப் பெண்ணும் கைலாயத்தில் நுழையாமல் பார்க்கும் படி கூறினாள். தன் தாயின் தோழியான குஸுமமோதினியிடமும் இதையே கூறினாள்.
அவள் சென்ற பின்னர், அந்தகாஸுரனின் மகனான ஆடி என்னும் அவுணன் பாம்புரு கொண்டு உள்ளே நுழைந்து பின் பார்வதியின் வடிவெடுத்து கைலாயத்தில் நுழைந்தனன். தன் தந்தையைக் கொன்றதற்குப் பழிவாங்கவேண்டி எந்தையை அழிக்கும் முடிவோடு நெருங்கினான். பார்வதியின் வடிவில் இருந்ததால் அவனை வீரகனும் அறியக்கூடவில்லை. உள்ளே விடுத்தான். அவன் உள்ளே சென்று எந்தையிடம் உறவுக்காக வேண்டினான். எந்தை அவனுடலில் தாமரை மச்சமின்மையும் மற்றைய அறிகுறிளுமில்லாததால் அவனை அவுணனென்று உணர்ந்து தனது உறுப்பில் ரௌத்ராஸ்த்ரத்தை ஆவஹித்து உறவுகொண்டே அவனை அழித்தார்.
இதனைக் கண்ட குஸுமமோதினி வாயுதேவனிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்லியனுப்பினாள். வேறொரு பெண் கைலாயத்தில் நுழைந்ததை உணர்ந்த பார்வதி மிகுந்த கோபம் கொண்டாள். வீரகனை பூமியில் பிறக்குமாறு சபித்தாள். அந்தக் கோபத்தின்போது அவளுடைய கருவடிவம் கௌசிகி என்னும் பெயரோடு அவளை விட்டு நீங்கியது. அவள் வெண்ணிறத்தை அடைந்த பிறகு மீண்டும் கைலாயம் சென்றாள் வீரகன் கால்களில் வீழ்ந்து கதறினான். மனமிரங்கிய அவள் சிலாதருக்கு மகனாகி நந்தி என்னும் பெயரோடு மீண்டும் தவமியற்றி கைலாயம் புகலாம் என்று கூறினாள். இந்தக் கதை ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வரகண்டத்தின் கௌமாரிகா கண்டத்தில் 28 ஆம் அத்யாயத்தில் இடம்பெற்றுள்ளது. மத்ஸ்யபுராணத்திலும் இதே செய்தி காணக்கிடைக்கிறது.
ஆனால் நீலமத புராணம் வேறொரு தகவலைத் தருகிறது. இந்தப் புராணம் சிலாதருக்குப் பிறக்கும்முன்னர் நந்திகேச்வரராகவே இருந்ததைக் குறிப்பிடுகிறது.
ஆனால் லிங்கபுராணமோ மேற்கூறிய இரு செய்திகளையுமின்றி எந்தையே நந்தியாக அவதரித்ததாக்க் கூறுகிறது.
1.2. சிலாதமஹர்ஷி
பின்வரும் கதை ஸ்காந்தபுராணத்தில் காணப்பெறுகிறது. சாலங்காயனரின் மகனாக சிலாதர் என்னும் மஹர்ஷி இருந்தார். அவர் சிலைகளை – கற்களை உண்டு வந்ததனால் அவருக்கு சிலாதர் என்னும் பெயர் ஏற்பட்டது. அவருக்கு மக்கட்பேறின்மையால் அவருடைய முன்னோர்கள் நரகத்தில் இருந்தனர். ஆகவே அவர் எந்தையைக் குறித்து கடுமையான தவமியற்றினார். எந்தை அவருக்கு முன் தோன்றி புதல்வனைத் தந்தோம் ஆனால் அவன் தாயின் வயிற்றிலிருந்து பிறவாத பிள்ளையாக இருப்பான் என்று வரமளித்தார். அதன் பிறகு அவர் கற்களைத் தோண்டும்போது ஒரு மகனைக் கண்டார். (நீலமத புராணத்திலும் லிங்க புராணத்திலும் யாகசாலைக்காக உழும்போது ஸீதா – உழும் பள்ளத்திலிருந்து தோன்றியதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.) அந்த மகன் தந்தையே என்று அழைத்தபடியிருந்தான். வாயுதேவன் அந்தக் குழந்தையை சிலாதரிடம் கொடுத்து அவருடைய மகனென்று கூறினான். அவர் நந்திகரராக – ஆனந்தம் அளிப்பவராக இருந்ததால் நந்தி என்று பெயர் அளித்து வளர்த்து வந்தார். அவர் குழந்தைக்கு வேதம், ஆயுர்வேதம், தனுர்வேதம் மற்றும் காந்தர்வவேதங்களைக் கற்பித்தார்.
ஒருமுறை மைத்ராவருணர் என்னும் ரிஷிகள் சிலாதரின் குடிலுக்கு வந்தனர். அவர்கள் நந்திக்கு குறைவான ஆயுள் இருப்பதைச் சுட்டினர். சிலாதர் அதிர்ச்சி அடைந்தார். அந்த ரிஷிகள் எந்தையன்றி வேறெவரும் காப்பாற்றவல்லாரல்லர் என்று கூறினர்.
இதைக் கேட்ட நந்தி அர்புதாரண்யத்திற்குச் சென்றார். கடுந்தவமியற்றினார். ஒருகோடி முறை ருத்ரங்களை ஜபித்தார். எந்தை மகிழ்ந்து வேண்டுவன கேட்கச் சொன்னார். நந்தியோ மேலும் ஒருகோடி ருத்ர ஜபத்திற்கு அருளவேண்டுமெனக்கேட்டார். இரண்டாம் கோடி முடிவில் மூன்றாம் கோடி ஜபத்திற்கு அருளக் கேட்டார். மூன்றாம் கோடி முடிவில் எந்தை கணங்களோடும் பார்வதியோடும் தோன்றினார். தோன்றி, விஷ்ணு, ப்ரஹ்மா, ஸூர்யன், ருத்ரன் ஆகிய எந்தப் பதவி வேண்டுமானாலும் தரத்தயாராக இருப்பதாகவும கூறினார். ஆனால் நந்தியோ அவர் மீதான பக்தி நிலைப்பதைத் தவிர வேறெதுவும் வேண்டாமென்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த எந்தை தமது ஜடையிலிருந்து கங்கையை விடுத்தார். அது ஜடோதா என்னும் நதியாயிற்று. பிறகு நந்தியைப் பார்வதிக்கு அளித்து, இதோ உன் மகனென்றார். அவள் நீரைச் சொறிந்தனள். அது ஓகவதீ என்னும் நதியாயிற்று. இதைக் கண்ட நந்தி பெரும் கர்ஜனை செய்தார். அதிலிருந்து ஒரு நதி தோன்றிற்று. அது டித்கரிகா என்பதாகும். அதன்பிறகு எந்தை பலவிதமான ஆபரணங்களைத் தந்தார். அதன் ஒளியிலிருந்து ஒரு நதி தோன்றியது. அது ஸ்வர்ணோதகா என்பதாகும். அவர் கிரீடத்திலிருந்து ஜம்பூநதி என்னும் ஆறு தோன்றியது. இந்த ஐந்தாறுகள் தோன்றியதால் அவ்விதம் பஞ்சநதம் எனப்பெற்றது.
1.3. பட்டாபிஷேகம்
எந்தையும் பார்வதியும் பிறகு நந்தியின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அவர் எல்லா கணங்களுக்கும் அதிபராக முடிசூட்டப்பெற்றார். பூதகணங்கள் ஸிம்ஹாஸனம் முதலிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தன. விச்வகர்மா அவருக்கு மழுவையும் சூலத்தையும் வழங்கினார். எல்லா ஆபரணங்களையும் வழங்கினார். எல்லா தேவர்களும் புனித நீரைக் கொண்டு வந்து எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்தனர். விஷ்ணு நந்தியை ஸ்தோத்ரம் செய்தார்.
1.4. திருமணம்
அவருடைய பட்டாபிஷேகத்திற்குப் பிறகு எந்தை மருத்துக்களை அழைத்து அவர்களுடைய மகளான ஸுயசா தேவியை நந்திக்கு வழங்குமாறு கேட்டார். அவர்கள் பெரும் மகிழ்வோடு ஸம்மதித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நிகழ்ந்தேறின. கச்யபர், அத்ரி ஆகிய முனிவர்கள் சடங்குகளை மேற்கொண்டனர். நாரதர், தம்புரு, ஹாஹா, ஹூஹூ முதலியவர்கள் இசைக்கச்சேரி செய்தனர். தேவப்பெண்டிர் ஆடினர். பிறகு எந்தை நந்தியை ஏதாவது வரம் கோரச்சொல்லிக் கேட்டார். முன்பு போல பக்தியையே கோரினார் நந்தி. பார்வதி ஸுயசா தேவியை வரம் கோரச்சொல்லிக் கேட்டாள். அவளும் அதையே கோரினாள். அவர்களுக்கு எந்தை ஸ்ரீபர்வதத்தில் வைப்ராஜம் என்னும் மாளிகையை வழங்கினார்.
எல்லா கணங்களும் நந்தியைத் தமக்கு மகிழ்வு தருமாறு வேண்டினர். நந்திதேவர் பலவிதமான ஸ்தோத்ரங்கள் கூறி கணங்களைப் போற்றினார். அதன்பிறகு தம்பதியர் தம் மாளிகை போந்தனர். இவ்விதமாக இந்தச் செய்தி ஸ்காந்த, கூர்ம, லிங்க, மத்ஸ்ய மற்றும் நீலமத புராணங்களில் இடம்பெற்றுள்ளது.
அவர் கருடனை கர்வபங்கம் செய்த செய்தியும் ராவணனின் சாபத்தால் குரங்கு முகம் பெற்ற செய்தியும் கூட புராணங்களிலிருந்து பெறப்படுகின்றன.
இலக்கணம்
லிங்கபுராணத்தில் நந்தி தனது வடிவத்தைத் தானே விளக்குமாறு அமைந்துள்ளது.
मां दृष्ट्वा कालसूर्याभं जटामुकुटधारिणम् ।
त्र्यक्षं चतुर्भुजं बालं शूलटङ्कगदाधरम् ॥ १,४२.१७ ॥
वज्रिणं वज्रदंष्ट्रं च वज्रिणाराधितं शिशुम् ।
वज्रकुण्डलिनं घोरं नीरदोपमनिःस्वनम् ॥
அவர் கருஞ்சூரியனைப் போலிருந்தார். ஜடாமகுடத்தை அணிந்திருந்தார். முன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டிருந்தார். சூலம், மழு, கதை ஆகியவற்றைப் பெற்றிருந்தார். வஜ்ராயுதத்தைப் பெற்றிருந்தார். வஜ்ரத்தையொத்த பற்களும் கொண்டு வைர குண்டலங்கள் மின்ன கருமேகத்தைப் போலிருந்தார்.
அப்பைய தீக்ஷிதேந்த்ரர்களால் இயற்றப்பெற்ற சிவார்ச்சன சந்த்ரிகை மற்றைய விவரங்களைத் தருகிறது.
रक्तवर्णं त्रिणेत्रं चन्द्रकलालङ्कृतजटामकुटं मृगपरशुनमस्कारमुद्रान्वितकरचतुष्टयं बाहुमूले वेत्रं कट्यां क्षुरिकांच धारयन्तं भस्मरुद्राक्षधारिणं वानरास्यं नन्दिकेश्वरं पूजयामीति द्वारस्याभ्यन्तरदक्षिणे पार्श्वे पूजयेत्
நந்தி செந்நிறத்தோடு ஜடாமகுடத்தில் பிறைநிலவைத் தரித்திருப்பார். அவர் மான், மழு ஆகியவற்றை மேற்கரங்களிலும் கீழ்க்கரங்களில் அஞ்ஜலியும் கொண்டிருப்பார். அவர் தனது தோள்களில் தண்டமும் இடையில் வாளும் கொண்டிருப்பார். அவர் விபூதியும் ருத்ராக்ஷமும் அணிந்திருப்பார். அவர் குரங்கு முகத்தோடிருப்பார்.
श्यामवर्णामुत्पलालङ्कृतदक्षिणकरां सुयशादेवीं पूजयामीति द्वारस्याभ्यन्तरे सुयशादेवीं पूजयेत्।
ஸுயசா தேவி கையில் குவளைமலரேந்தி கதவுகளுக்கருகில் வீற்றிருப்பாள்.
சிவத்யானரத்னாவளி மற்றொரு வடிவத்தைத் தருகிறது.
दक्षिणद्वारपार्श्वस्थं संस्मरेन्नन्दिकेश्वरम् ।
अनेकरुद्रप्रमथभूतसङ्घैर्निषेवितम् ॥ ३॥
शिवधर्ममहाध्यक्षं शिवान्तः पुरपालकम् ।
चामीकराचलप्रख्यं सर्वाभरणभूषितम् ॥ ४॥
बालेन्दुमुकुटं सौम्यं चतुर्बाहुं त्रिलोचनम् ।
चन्द्रबिम्बाभवदनं हरिवक्त्रमथापि वा ॥५॥
நந்திகேச்வரரை தென்வாயிலினருகே பூஜிக்க வேண்டும். அவர் ருத்ரர்களாலும் கணங்களாலும் பூஜிக்கப்பெற்றவர். அவர் சைவதர்மங்களின் அதிகாரி. எந்தையின் அந்தப்புரத்தைக் காப்பவர். அவர் தங்க நிறத்தோடு எல்லா ஆபரணங்களையும் கொண்டிருப்பார். அவரை சந்திரனையொத்த முகத்தோடோ அல்லது குரங்கின் முகத்தோடோ அமைக்கலாம்.
उत्तरद्वारपार्श्वे तु तत्पत्नीं मरुतस्सुताम् ।
सुयशां सुव्रतामम्बापादमण्डनतत्पराम् ॥६॥
வடவாயிலருகே மருத்துக்களின் புதல்வியான ஸுயசாதேவியை அமைக்கலாம். அவளை பார்வதியின் பாதங்களை அலங்கரிப்பவளாக அமைக்கலாம்.
இவ்விதமாக நந்திகேச்வரர் மற்றும் ஸுயசா தேவியின் இலக்கணங்கள் விளக்கப்பெற்றுள்ளன. பின்வரும் படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பெற்றவை. மேற்கூறிய வடிவ இலக்கணங்கள் இந்தப் படங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். நந்திகேச்வரர் மனித முகத்தோடோ அல்லது குரங்கின் முகத்தோடோ அமைக்கப் பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு நான்கு கரங்களைக் கொண்டிருக்கிறார். மேலிரு கரங்கள் மானும் மழுவும் கொண்டிருக்க கீழிரு கரங்களும் அஞ்ஜலியாய் அமைந்துள்ளன. ஒரு படத்தில் வேத்ரத்திற்குப் பதிலாகத் தோள்மூலத்தில் வாள் அமைந்துள்ளது.
இந்தச்செய்திகள் திருவையாறு ஸ்தலபுராணத்திலும் இடம்பெற்றுள்ளன. ஐந்து ஆறுகள் என்று புராணங்களில் இடம்பெற்றுள்ளதால் ஐயாற்றோடு இந்தச்செய்திகள் இணைக்கப்பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.
நந்திகேச்வரர் எந்தையின் ஆலயத்தின் எல்லாச் செயல்களையும் மேற்பார்வை பார்ப்பதால் கையில் பிரம்போடு வீற்றிருக்கிறார்.
தயவு கூர்ந்து facebook page ஒன்று ஆரம்பித்து அங்கு ஷேர் செய்யவும். அதிகம் பேர் படிக்க ஏதுவாக இருக்கும்
நன்றி