ஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் பல்லவபரம்பரையின் காலவரையறை – மீளாய்வு

     பல்லவர்தம் சாஸன காலம் தொடர்பாக பல்வேறுவிதமான கணக்கீடுகள்  இருப்பதை நாமறிவோம். பிராக்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர்களைக் காட்டிலும் ஸம்ஸ்க்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர் வழியைப்பற்றித்தான் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பெற்றுள்ளன. மூன்றாம் ஸிம்ஹவர்மன் மற்றும் ஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் மன்னர்தம் கொடிவழியைப் பற்றி பல்லவர் வரலாற்றை ஆராயும் எல்லா ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் பின்னர் பட்டியலிடப்பெற்றுள்ளன.

அரசன் பெயர் ஆர். கோபாலன் ஆர். ஸீவெல் டிஸி. ஸர்க்கார் கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் எஸ்.ஆர்.பாலஸுப்ரஹ்மண்யம் கே.ஏ.நீலகண்டசாஸ்த்ரி கே.வி.ஸுப்ரஹ்மண்ய ஐயர் டி.வி.மஹாலிங்கம்
ஸிம்ஹவர்மன் III 550-575 550-560 586-610
ஸிம்ஹவிஷ்ணு 575-600 575-600 550-80 560-80 586-610
மஹேந்த்ரன் I 600-30 600-30 580-630 580-630 610-30
நரஸிம்ஹன் I 630-60 630-68 630-68 630-68 630-68
மஹேந்த்ரன் II 668-70 668-72 668-70 668-69
பரமேச்வரன் I 660-80 670-90 672-700 670-700 669-91
நரஸிம்ஹன் II 680-700 690-715 700-28 700-28 690-728
மஹேந்த்ரன் III 720-28 720-28
பரமேச்வரன் II 700-710 715-17 728-31 728-31 728-31
நந்தி II 710-75 717-79 731-96 732-96 731-96 705-70 731-96
தந்தி 775-826 779-830 796-847 769-846 788-836 796-847 770-821 796-846
நந்தி III 826-49 830-54 847-72 846-59 835-60 846-69 821-844 846-69
கம்பவர்மன் 948-80 878-910 870-912
அபராஜிதன் 875-83 880-98 885-903 879-97 885-903 870-88 869-913
ந்ருபதுங்கன் 849-75 854-80 872-913 859-99 855-96 859-99 844-70 869-913
நந்தி IV 904-26

     இத்தகைய கணக்கீடுகளுக்குப் பிறகு பல்வேறு கல்வெட்டுக்களும் நடுகற்கும் கிடைக்கப்பெற்று எல்லா அரசர்களின் இறுதி ஆட்சியாண்டு மாற்றம் பெற்றது. அந்த பட்டியலாவது.

அரசன் பெயர் இறுதி ஆட்சியாண்டு கல்வெட்டு
ஸிம்ஹவர்மன் III 6 பள்ளங்கோயில் செப்பேடு
ஸிம்ஹவிஷ்ணு 33 நரசிங்கநல்லூர்
மஹேந்த்ரன் I 39 சாத்தனூர்
நரஸிம்ஹன் I 13 பாதாமி
மஹேந்த்ரன் III 11 பெரிய கோளப்பாடி
பரமேச்வரன் I 17 சேலம்
நரஸிம்ஹன் II 30 சாத்தனூர்
மஹேந்த்ரன் III
பரமேச்வரன் II 3 திருவதிகை
நந்திவர்மன் II 65 மஹாபலிபுரம்
தந்தி வர்மன் 51 திருச்சானூர்
நந்திவர்மன் III 22 திருப்பாலைத்துறை
கம்பவர்மன் 32 கொடுங்காலூர்
அபராஜிதன் 18 திருத்தணி
ந்ருபதுங்கன் 41 மடவலம்

மேற்கண்ட தகவல்களைக் கொண்டு இரண்டாம் நரஸிம்ஹனான ராஜஸிம்ஹனின் காலம் வரை அரசர்களின் ஆட்சிக்காலம் பின்வருமாறு மாற்றியமைக்கப்பெற்றுள்ளது.

அரசனின் பெயர் ஆட்சிக்காலம்
ஸிம்ஹவர்மன் III 550-556
ஸிம்ஹவிஷ்ணு 556-590
மஹேந்த்ரன் I 590-629/30
நரஸிம்ஹன் I 630-668
மஹேந்த்ரன் III 668-670
பரமேச்வரன் I 670-700
நரஸிம்ஹன் II 700-730
மஹேந்த்ரன் III 721-728
பரமேச்வரன் II 728-731

இரண்டாம் பரமேச்வரனுக்குப் பிறகு முக்கிய கொடிவழியில் பொருத்தமான வாரிசு இல்லாது போனதால் நந்திவர்மன் முக்கிய கொடிவழிக்குத்தேர்ந்தெடுக்கப்பெற்றான். இதன் பிறகுதான் கொடிவழியில் பிரச்சினை ஆரம்பமாகிறது. இரண்டாம் நந்திவர்மனில் துவங்கி அபராஜிதன்/ந்ருபதுங்கன் வரையிலான ஆட்சிக்காலத்தின் மொத்த கூட்டுத்தொகை 179 வருடங்களாகும். அபராஜிதனோ ஆதித்ய சோழனால் 890-இல் கொல்லப்பெற்றான். ஆகவே இவர்களின் ஆட்சிக்காலத்திற்கான கணக்கீட்டைப் பார்த்தால் 890 இலிருந்து 731 ஐக் கழித்தால் கிடைக்கும் 159 வருடங்களாகும். இங்கே இருபது வருடங்களுக்கான இடைவெளியை மேற்கண்ட ஆட்சிக்காலத்திலேயே இட்டு நிரப்ப வேண்டும். இப்போது நாம் கம்பவர்மன், அபராஜிதவர்மன் மற்றும் ந்ருபதுங்கவர்மனின் ஆட்சித்துவக்க காலத்தைக் காணவேண்டும்.

நம்மிடம் இரு முக்கிய தகவல்கள் உள்ளன. அபராஜிதனின் வேளஞ்சேரி செப்பேடு அவன் சிற்றாற்றூரில் ஒரு சோழனை வெற்றிகண்டதைக் குறிப்பிடுகிறது. (Tiruttaṇi and Velañceri plates page 7) அண்மையிற் கிடைத்த திருவிந்தளூர் செப்பேடு விஜயாலயன் கம்பவர்மனோடு போரிட்டு அவனைக் கலங்கடித்ததைக் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு தகவல்களையும் பார்ப்போம்.  வேளஞ்சேரிச்செப்பேட்டைப் பதிப்பித்த முனைவர் நாகஸ்வாமி அவர்கள் அபராஜிதனோடு போரிட்ட சோழவேந்தன் முதலாம் ஆதித்யனே என்று முடிவு செய்துள்ளார். அவர் இத்தகைய முடிவுக்கு வர காரணம் இந்தப் போர் அபராஜிதன் மன்னனான பின்னர் நிகழ்ந்ததாக கொண்டதாகும். அபராஜிதன் ஆட்சிக்கு வந்தபின்னர் கோலோச்சிய சோழ மன்னன் முதலாம் ஆதித்யன் என்பதனால் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் அந்தச் செப்பேடு அபராஜிதன் தன்னுடைய செவ்விளமைப் பருவத்திலேயே வெற்றியைப் பெற்றதாகக் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. (பால்யே) இவ்விரண்டு தகவல்களையும் ஒப்பு நோக்குவதன் மூலம் ஒரு முடிவுக்கு வர முடியும். சிற்றாற்றூரில் நிகழ்ந்த போர் அபராஜிதனுக்கும் விஜயாலயனுக்கும் நிகழ்ந்ததாக வேண்டும். அபராஜிதன் அப்போது முடிசூடாமலிருந்ததால் விஜயாலயன் கம்பவர்மனையே கலங்கடித்ததாகச் சோழர் செப்பேடு குறிப்பிட்டாதல் வேண்டும். சோழர் செப்பேடு விஜயாலயன் வென்றதாகக் குறிப்பிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆகவே சிற்றாற்றூரில் விஜயாலயனும் அபராஜிதனும் பொருத அவருள் அபராஜிதனே வென்றனனாதல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தியாவது, செப்பேட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள வரிசையைக் கொண்டு சிற்றாற்றூரில் நிகழ்ந்த போர் விஜயாலயன் தஞ்சாவூரைக் கைப்பற்றுவதற்கு முன்னமேயே நிகழ்ந்ததாதல் வேண்டும் என்பதே. கம்பவர்மனுடனான போருக்குப் பின்னரே விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியது குறிப்பிடப்பெற்றுள்ளது. விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றிய செயலை பொயு 850க்கு பிறகு கொண்டுசெல்லவியலாது. ஆகவே கம்பவர்மன் முடிசூடிய ஆண்டு 848 அல்லது அல்லது சற்று முன்னமோ ஆதல் வேண்டும்.

ந்ருபதுங்கனின் திருச்சென்னம்பூண்டி கல்வெட்டு அவனுடைய 22 ஆம் ஆட்சியாண்டைத்தருகிறது. அந்தக் கல்வெட்டிலுள்ள வானியல் குறிப்புக்கள் பொயு 867க்கும் பொயு 881க்கும் பொருந்தி வருகின்றன. இரண்டாம் கணக்கை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர்கள் துவக்க ஆட்சியாண்டு பொயு 859 எனக் கணக்கிட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட முடிவுகளின் படி ந்ருபதுங்கனின் துவக்க ஆட்சியாண்டு 845 எனவும் கல்வெட்டின் காலம் 867 எனவும் துணியவியல்கிறது. திருவடி மற்றும் அம்பாஸமுத்ரத்தில் கிடைத்த கல்வெட்டுக்களின் அடிப்படையில் ந்ருபதுங்கனின் 18-ஆம் ஆட்சியாண்டும் இரண்டாம் வரகுணனின் 16 ஆம் ஆட்சியாண்டும் ஸமகாலம் என்னும் கருத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். (Kanchipuram through the ages, pg 48). இரண்டு கல்வெட்டுகளிலும் இதற்கு நேரடியான சான்றுகள் இல்லையாதலால் இந்தக் கருத்துப் புறந்தள்ளத்தக்கது.

கே.வி.ஸௌந்தரராஜன் அவர்களின் கூற்றுப்படி தந்திவர்மன் ராஷ்ட்ரகூடவேந்தனான் இரண்டாம் கோவிந்தனுக்கு (பொயு 773-780) எதிராக அவனுடைய தம்பியான ஸ்தம்பனுடன் இணைந்து செயல்பட்டான் எனவும் உள்நாட்டு கலகமும் தோன்றியது என்றும் பெறப்படுகிறது. இந்தக் கூற்றின் படி தந்திவர்மன் 773க்கு முன்னரே இளவரசனாகவேனும் பட்டமேற்றிருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கிடைக்கிறது. ஆகவே தந்திவர்மன் பட்டமேற்ற காலத்தை பொயு 771 எனவும் தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மனின் துவக்க ஆண்டாக பொயு 822 எனவும் கொள்ளவியலும்.

இப்போது மேற்கண்ட தகவல்களின் படி பல்லவமல்லனில் துவங்கும் அரசர்களின் ஆட்சிக்காலமாவது.

நந்திவர்மன் II 731-796
தந்தி வர்மன் 771-822
நந்திவர்மன் III 822-845
கம்பவர்மன் 848-880
அபராஜிதன் 872-890
ந்ருபதுங்கன் 845-886

மேற்கண்ட காலக்கணக்கீட்டின் மூலம் ஆதித்யசோழனின் தொண்டைமண்டலகைப்பற்றலுக்குப் பின்னர் பல்லவ வேந்தர்கள் என்னவாயினர் என்னும் கேள்விக்கு விடை கிடைக்கிறது எனக் கருதுகிறேன். மேற்கண்ட காலக்கணக்கீட்டில் இருக்கும் ஒரு குறை முதலாம் ராஜேந்த்ரனின் கரந்தைச் செப்பேட்டில் குறிப்பிடப்பெறும பராந்தகனால் வெல்லப்பெற்ற பல்லவவேந்தன் யாரென்பதை அறியவியலாமையேயாகும். கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் அவன் சென்னிவாய்க்கால் கல்வெட்டால் அறியப்பெறும் நான்காம் நந்திவர்மன் என முடிவு செய்துள்ளார். முனைவர். நாகஸ்வாமி அவர்களோ ந்ருபதுங்கனின் இறுதியாட்சியாண்டு 906 என்பதாகக் கொண்டு பராந்தகன் ந்ருபதுங்கனை வென்று பட்டமேற்றதாகக் கொண்டுள்ளார்.

ஆனால் கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் குறிப்பிடும் நான்காம் நந்திவர்மனை ஏற்கவியலாது என்று கருதுகிறேன். ஒரே ஒரு கல்வெட்டு அதுவும் இருபத்துமூன்றாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுவது, இத்தகைய கல்வெட்டைக் கொண்டு அத்தகையதோர் மன்னனை ஏற்படு சரிவர பொருந்தவில்லை. இந்தக் கல்வெட்டுத் தவறானதாகவேண்டும். இந்தக் கல்வெட்டை மறுபடி எடுக்கும்போது ஏற்பட்ட தவறுகளே அதில் இருப்பவை. முனைவர் நாகஸ்வாமியின் கருத்தையும் மேற்குறிப்பிட்ட காலக்கணக்கைக் கொண்டு ஏற்க முடியாது. ஆகவே பராந்தகன் வென்றதாகக் குறிப்பிடும் பல்லவ வேந்தன் அவன் ஆதித்யன் கீழாக இருந்த போது வென்ற அபராஜிதன் அல்லது ந்ருபதுங்கனாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆகவே ஆதித்யசோழன் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிய பின்னர் பல்லவ வேந்தர் எவரும் இல்லை என்னும் முடிவு இறுதியாகிறது. பல்லவர் கொடிவழிவந்தவர்கள் அனைவரும் சோழர்காலத்திலும் பிற்கால பாண்டியர் காலத்திலும் அதிகாரிகளாகப் பணியாற்றியமை பல்வேறு கல்வெட்டுக்களால் அறியக்கிடைக்கிறது..

இவ்விதம் ராஜஸிம்ஹனுக்குப் பின்னான பல்லவர் காலக்கணக்கீட்டை இந்தக் கட்டுரை வாயிலாக பணிவோடு ஸமர்ப்பிக்கிறேன்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *