எழுதுபடு பொருட்கள் – பனையோலை

     பண்டைய இந்தியாவில் எழுதப்பயன்படுத்தப்பெற்ற பொருட்களில் மிகப் பழமையான பொருளாக பனையோலையே அறியப்பெறுகிறது. பத்ரம் என்னும் சொல் தாளபத்ரம் எனப்பெறும் பனையோலையையே குறிப்பதாகவே அறிஞர் கருதுவர். பத்ரம் என்னும் சொல் பூர்ஜபத்ரம் என்னும் சொல்லில் பயன்பட்டு வந்தாலும் கூட பூர்ஜமரத்தின் பட்டையே பயன்படுத்தப் பெறுவதால் பனையோலைக்கே பழமையான பயன்பாடு இருப்பது தெரியவருகிறது. பௌத்தநூல்களும் பர்ணம் என்னும் இலையைக் குறிக்கும் சொல்லின் பாகத வடிவான பன்னம் என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. அதன் பிறகு பத்ரம் என்னும் சொல் மற்றைய பொருட்களான பூர்ஜபத்ரம் தாம்ர பத்ரம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம்.

                பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜைன நூலான ராயபஸேணிய ஸுத்தம் கூறும் பலவிதமான சொல்லாட்சிகள் பனையோலைக்கே பொருந்தி வருகின்றன.

பனைமரவகைகள்

     நம்முடைய பண்டைய நூல்களில் கரதாளம் மற்றும் ஸ்ரீதாளம் என்னும் இருவிதமான பனைகளைக் குறிப்பிடுகின்றன. இவை தமிழில் தாளிப்பனை மற்றும் நுங்குப்பனை என வழங்கப்பெறுகின்றன. கரதாளம் என்பதன் ஓலைகள் குறுகியதாக தடிமனாக சற்றே மஞ்சளாக இருக்கும். ஸ்ரீதாளம் என்பது அகலமாக மெல்லியதாக சிறிது செம்பட்டை நிறத்தோடிருக்கும்.

     பனைகளின் தாவரவியற்பெயர்கள் 1. Corypha umbraculifera 2. Corypha Faliera and 3. Borassus Flabellifera என்பனவாகும். இவற்றுள் கரதாளம் போராஸிஸ் என்றும் ஸ்ரீதாளம் கோரிஃபா என்றும் அடையாளம் கண்டுள்ளனர்.

செய்முறை     

      நன்கு முதிர்ந்த ஓலைகள் நன்கு உணர்த்தப் பெற்று பிறகு நீரில் கொதிக்கவைக்கப்பெறுகின்றன. பிறகு மீண்டும் நிழலில் உலர்த்தப் பெறுகின்றன. அதன்பிறகு அவற்றின் மேற்பரப்பை வழுவழுப்பான கற்களைக் கொண்டு தேய்த்து சமன் செய்வர். அதன்பிறகு தேவையான அளவு வெட்டியெடுப்பர்.

     அவற்றின் நடுவே இருபகுதியின் மையப்புறத்தில் இரு துளைகளிடப்பெறும். இது தொடர்பாக ஒரு கர்ணபரம்பரையாக வடமொழிச்செய்யுள் ஒன்றும் கிடைக்கிறது.

     आयामेन चतुर्भागं त्रिभागं पुनरेव च।

      उभयोः सूत्रमध्येन तथा कुर्याच्छिद्रलक्षणम्।।

      இதன் பொருள் – ஓலையளவிற்கான நூலையெடுத்து அதனை நான்காக மடிக்கவேண்டும். அதன் பிறகு நீட்டி மூன்றாக மடிக்கவேண்டும். அதன் இருமடிப்புக்களுக்கிடையே துளையிடவேண்டும்.

     ஓலைகளின் இருபுறத்திலும் இரு சிறு மரப்பலகைகளை வைத்து, ஓலைகளில் துளையிட்ட இடத்தில் துளையிட்டு ஓலைகளின் இருபுறமும் வைப்பர். ஒரு பஞ்சினாலான கயிறு அந்தத் துளைகள் வழியே பலகைகளின் ஊடேயும் பாயும். அந்தக் கயிற்றை வைத்தே சுவடிக்கட்டை கட்டுவர். இந்தக் கயிறு ஏடுகளின் இடம் மாறாமலும் காக்கும்.

     பனையோலைகளின் நீளங்கள் 4 செமீ முதல் 90 செமீ வரை கிடைக்கின்றன. அகலம் 2.5 செமீ முதல் 8 செமீ வரையாகக் கிடைக்கிறது.

     ஏடுகளில் எழுத்துக்கள் எழுத்தாணி கொண்டு எழுதப்பெறும். ஓலைகளில் மையைக் கொண்டு எழுதப்பெற்ற சில சுவடிகளும் கிடைத்துள்ளன.

     ஓலைச்சுவடிகள் பொயுமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டிலிருப்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பௌத்த ஜாதக நூல்களும் ஜைன ஸுத்தங்களும் ஓலைச்சுவடிகளுக்கான பயன்பாட்டைத் தெரிவிக்கின்றன. அர்த்தசாஸ்த்ரமும் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறது.

     ஓலைச்சுவடிகள் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் கூட வெகுவாகப் பயன்பாட்டிலிருந்தன. அண்மையில் பயன்பாட்டில் இருந்த சுவடிகள் கூட கிடைத்துள்ளன.

சில பழைய ஓலைச்சுவடிகள்

1.மிகப்பழைய ஓலைச்சுவடி துர்ஃபான் தொகுப்பிலுள்ளது. இந்தச் சுவடி அச்வகோஷர் என்பவரின் நாடகமான ஸாரீபுத்தப்பகரணம் என்னும் நூலின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன்காலம் பொயு இரண்டாம் நூற்றாண்டாகும்.

turfan

2.காட்ஃப்ரே தொகுப்பில் கஷ்கரிலிருந்து கிடைத்த சுவடி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப் பெற்றுள்ளது.

3.ஜப்பானிலுள்ள ஹோரி உஸி என்னும் பௌத்த மடாலயம் ப்ரஜ்ஞா பாரமித ஹ்ருதய ஸூத்ரம் மற்றும் உஷ்ணீஷ விஜயதாரிணி என்னும் இரு பௌத்த நூல்களின் சுவடிகளைக் கொண்டுள்ளன. இதன் காலம் 6-ஆம் நூற்றாண்டாகும். இவை மத்திய இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை என்பது உய்த்துணரக் கிடக்கிறது.

hori uzi

4. காத்மாண்டுவிலுள்ள தர்பார் நூலகத்திலுள்ள ஸ்காந்த புராணத்தின் ஓலைச்சுவடி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

5.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பரமேச்வர தந்த்ரத்தின் சுவடி 858 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

6.புணேயிலுள்ள பண்டார்க்கர் கீழைச் சுவடியகத்தில் உபமிதி பாவப்ரகாசம் என்னும் சுவடி பொயு905 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

7.முத்பித்ரியிலுள்ள ஜைனச் சுவடித்தொகுப்பு தவலச் சுவடிகளைக் கொண்டுள்ளது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

8.மைசூரிலுள்ள கீழைச்சுவடியகம் அமரகோசத்தின் குறிப்புரைச் சுவடியைக் கொண்டுள்ளது. இதன் காலம் 1130 ஆகும்.

சில சிறப்பு சுவடிகள்

  1. மிக நீளமான ஓலைச்சுவடி

மைசூரிலுள்ள கீழைச்சுவடியகத்தின் இரு சுவடிகள் 120 செமீ நீளத்தில் மிக நீளமான சுவடியாக அமைந்துள்ளன.

  1. மிகக் குறுகிய சுவடி

அதே சுவடியகத்திலுள்ள தேவீ பாகவதத்தின் சுவடி 4செமிக்கு 2 செமி என்னும் குறுகிய அளவில் அமைந்துள்ளது.

  1. சென்னையிலுள்ள கீழைச்சுவடியகத்தில் பனையோலைகள் சிவலிங்கத்தின் வடிவில் வெட்டப்பெற்றுத் தொகுக்கப்பெற்றுள்ளன.

sivalinga

4.திருவனந்தபுரத்திலுள்ள கேரளபல்கலைக்கழகத்தின் கீழைச்சுவடியகத்திலுள்ள சுவடி சிறு சிறு வளையங்களாக ஆக்கப்பெற்று ஜபமாலை போலத் தொகுக்கப்பெற்றுள்ளன.

rosary

இவ்விதம் பனையோலைச் சுவடிகளின் பயன்பாடுகள் பண்டைநாள் முதல் காணப்பெறுகின்றன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *