முதலாம் பராந்தகனின் இறுதி ஆட்சியாண்டு

     விஜயாலயனில் துவங்கிய முற்காலசோழர்வரிசையில் முதலாம் பராந்தகனே அதிக ஆட்சியாண்டுகளைக் கொண்டவன். (முதலாம் குலோத்துங்கன் சாளுக்ய வழியைச் சேர்ந்தவன்.) அவனுடைய ஆட்சியின் துவக்க ஆண்டை திரு. ஸேதுராமன் அவர்கள் 906 டிஸம்பர் 27 இலிருந்து 907 ஏப்ரல் 3க்குள்ளாக நிர்ணயித்திருக்கிறார். (Early cholas, pg pg 7). அவனுடைய இறுதி ஆட்சியாண்டு சர்ச்சைக்குரியதாகிறது. அவனுடைய கல்வெட்டுக்கள் 46 ஆம் ஆட்சியாண்டோடு திருக்கண்டியூர் (SII V, No570), திருச்சோற்றுத்துறை (Ins 135 of 1931) ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இதுவரை 47 ஆம் ஆட்சியாண்டோடு கூடிய கல்வெட்டு கிடைக்கவில்லை. புங்கனூரிலுள்ள வடமலதின்னேயில் ஒரே ஒரு கல்வெட்டு 48 ஆம்ஆட்சியாண்டோடு கிடைக்கிறது. (Ins 200 of ARE 1931). இந்தக் கல்வெட்டு கன்னடத்திலானது. இந்தக் கல்வட்டு “மதுர கொண்ட கோப்பரகேசரி நால்வத்தண்டாகெ” என்று ஆண்டைக் குறிப்பிடுகிறது. மதுரை கொண்ட கோப்பரகேசரியின் நாற்பத்தெட்டாவது ஆண்டு என்பது இதன் பொருள். மதுரை கொண்டகோப்பரகேசரி முதலாம் பராந்தகனே என்பது திண்ணம். ஆகவே இதன் காலம் பொயு 954-55 ஆக இருக்க வேண்டும்.

     ஆனால் இங்கே கேள்வியென்னவென்றால் ராஷ்ட்ரகூடவேந்தனான மூன்றாம் க்ருஷ்ணனான கன்னர தேவன் பொயு 949 இல் தொண்டை மண்டலத்தை ஆக்ரமித்து பராந்தகனின் மகனும் அடுத்த வாரிசுமான மூவடி ராஜாதித்யனையும் கொன்றான். அவனுடைய கல்வெட்டுக்கள் ஸித்தலிங்க மடம் முதலிய இடங்களில் 5-ஆம் ஆட்சியாண்டு முதல் அதாவது பொயு 944 முதல் காணப்பெறுகின்றன. சோழர்களின் கல்வெட்டுக்கள் பராந்தகனின் 41 ஆம் ஆட்சியாண்டு வரை அதாவது பொயு 947-48 வரை காணப்பெற்றாலும் கூட அதன் பிறகு காணப்பெறவில்லை. புங்கனூர் கல்வெட்டு மட்டுமே 48 ஆம் ஆட்சியாண்டைக் கொண்டிருக்கிறது. ஆகவே இதனை இறுதியாண்டாக ஏற்பதில் சிக்கல் எழுகிறது.

     ஸ்ரீ. ஏ.எஸ். ராமநாத ஐயர் அவர்கள் (EI XXV pp35 ff) இதனைத் தீர்க்கும் முகமாக தெற்கில் வீரபாண்ட்யனுடன் ஏற்பட்ட போரில் பராந்தகன் மடிந்திருக்கலாம். வீரபாண்டியன் சோழன் தலைகொண்ட என்று பொயு 953-54-இல் குறிப்பிடுவது பராந்தகனை வென்றதையேயாகும். ஆகவே வடமலதின்னேயில் கிடைத்த கல்வெட்டுக்கான காரணம், தென்னகத்தில் பராந்தகன் இறந்து பட்ட செய்தி வடமூலையிலுள்ள பகுதிக்கு சென்று சேராமலிருந்திருக்கலாம். ஆகவேதான் அவர்கள் இத்தகைய கல்வெட்டைச் செதுக்கினர் என்று குறிப்பிடுகிறார்.

     ஸ்ரீ. கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரிகள் (The Colas, Page 139) மேற்கண்ட கூற்றை ஆராயந்து பின்வரும் யோசனையை வழங்குகிறார். இதைப் போலவே மற்றொரு சரியான முடிவாக கன்னர தேவனின் ஊடுருவலை எதிர்த்த அவ்வூர் மக்கள் பராந்தகனையே மன்னனாக ஏற்றமையால் இத்தகையதோர் கல்வெட்டு எழுந்திருக்கலாம் என்பதாகக் குறிப்பிடுகிறார்.

     மேற்கூறிய இரு கருத்துக்களுமே பகுதி சரியாக அமைவதாகத் தோன்றுகிறது. ஆனால் ஐயரவர்கள் கூற்றான வீரபாண்டியன் பராந்தகனின் தலையைக் கொய்து சோழன் தலைகொண்ட பாண்டியன் என்னும் விருதினைப் பெற்றான் என்ற கூற்று பொருந்தாததாகத் தோன்றுகிறது. ஏனென்றால் அவன் பராந்தகன் தலையைக் கொய்திருந்தால் நேரடியாக பராந்தகன் தலைகொண்ட வீரபாண்டியன் என்றே தன்னை அறிவித்திருப்பான். அவன் தலையை வெட்டிய ஆதித்ய கரிகாலனும் பார்த்திவேந்த்ராதி வர்மனும் வீரபாண்டியன் தலைகொண்ட என்று குறிப்பிட்டதைப்போலவே வீரபாண்டியனும் குறிப்பிட்டிருப்பான். ஆனால் வீரபாண்டியனோ சோழன் தலைகொண்ட என்று மட்டுமே குறிப்பிடுகிறான். ஆகவே வீரபாண்டியன் வெட்டிய தலை பராந்தகனுடையதல்ல, சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவொரு இளவரசன் எனக்கோடல் தவறாகாது. ஸ்ரீ. வேங்கடராமய்யா (EI XXVIII Pg 90) வீரபாண்டியன் வெட்டிய தலை பராந்தகனின் மகனான உத்தமசீலியினுடையதென்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு நேரடியான தெளிவான சான்றில்லை.

     ஸ்ரீ. கே.ஏ. நீலகண்ட சாஸ்த்ரிகளின் கூற்று பகுதி சரியாகத் தோன்றுகிறது. உள்ளூர்வாசிகள் கன்னரதேவனின் ஆளுமையை ஏற்காமல் இருந்திருக்க வேண்டும்.

     ஆனால் இங்கே விடை காணாத கேள்வி பராந்தகன் 48 ஆம் ஆட்சியாண்டில் உயிரோடிருந்தானா இல்லையா என்பதுதான்.

     என்னுடைய கருத்து, பராந்தகனின் 46 ஆம் ஆட்சியாண்டிற்கு பிறகு 47 ஆம் ஆட்சியாண்டோடான கல்வெட்டு ஒன்று கூட சோழமண்டலத்திலேயே கிடைக்காதிருப்பதால் பராந்தகன் 46-ஆம் ஆட்சியாண்டின் இறுதியில் சிவகதி அடைந்திருக்க வேண்டும் என்பதாகும். வடமலதின்னேயிலுள்ள மக்கள் பராந்தகன் இறந்ததை அறியாமலும் தங்களை ஆள்பவனே எவரென்று தெரியாமலும் கூட பராந்தகனின் 48-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைச் செதுக்கியிருக்க வேண்டும்.

     ஆகவே முதலாம் பராந்தகனின் ஆட்சிக்காலம் பொயு 906-07 முதல் 952-53 என்றும் இறுதி ஆட்சியாண்டு 46 எனவும் முடிவாகிறது.

Please follow and like us:

2 thoughts on “முதலாம் பராந்தகனின் இறுதி ஆட்சியாண்டு

  1. என்ன தெளிவு!பணிசிறக்க வாழ்த்துக்கள்,நன்றிகள்.முதலாம் குலோத்துங்கன் முதலாம் குந்தவைவழி வந்தவனா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *