சுவடிகளுக்கான எழுது படு பொருட்கள் – பூர்ஜபத்ரம்

இதுவரை சுவடிகளுக்கான எழுதுபடு பொருளாக பனையோலை பயன்பட்டதைப் பார்த்தோம். இரண்டாவது முக்கியமான எழுதுபடுபொருள் பூர்ஜபத்ரமாகும். இது ஆங்கிலத்தில் Birch bark என்று வழங்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Baetula utiles அல்லது Baetula bhoj-patra. இந்த மரம் ஹிமாலயச்சாரலில் 30000 அடி உயரத்தில் வளரும். இந்த மரம் வடநாட்டில் லேகன் என்றும் வழங்கப்பெறுகிறது.

தயாரிப்பு முறை

     இந்த மரப்பட்டையின் உட்பகுதி பலவிதமான ஏடுகளைக் கொண்டிருக்கும், அத்தகைய வெண்மை அல்லது செந்நிறமுள்ள ஏடுகள் தனித்தனியாகக் கவனமாகப் பிரித்து எடுக்கப்பெறும். அவற்றைப் பிரித்த பின்னர் அவை எண்ணெயில் தேய்க்கப்பெற்று பிறகு மிக ம்ருதுவான கற்களால் சமன் செய்யப்பெறும். அதன்பிறகு அவ்வேடுகள் தேவையான அளவிற்கு இரட்டிப்பான அளவில் வெட்டியெடுக்கப்பெற்று இரண்டாக மடித்து வைத்து எழுதப் பயன்படுத்தப்பெறும்.

     பொதுவாக இந்த ஏடுகள் தைக்கப்பெற்றிருக்காது. ஒட்டியுமிருக்காது. தனித்தனி ஏடுகளாகவே பயன்படுத்தப்பெறும். தைக்கப்பெற்ற ஏடுகளும் சில கிடைத்துள்ளன. இருபுறமும் பலகைகள் வைக்கப்பெற்று கட்டப்பெறும்.

     ஏடுகள் மைகொண்டு எழுதப்பெறும். அதிலிருக்கும் வரிகளுக்கு நேராக எழுதப்பெறும்.

 

இலக்கியங்களில் குறிப்பு

     அர்த்தசாஸ்த்ரம் பூர்ஜபத்ரத்தை பனையோலைகளோடு குறிப்பிடுகிறது. (தாட-தாடீ-பூர்ஜானாம் பத்ரம்.) அமரகோசம் இதன் மறுபெயர்களைத் தருகிறது.

          भूर्जपत्रे भुजो भूर्जो मृदुत्वक् चर्मिचर्मिणौ।

     புஜம், பூர்ஜம், ம்ருதுத்வக், சர்மி, சர்மிணம் ஆகியவை பூர்ஜத்தின் பெயர்களாம். குமார ஸம்பவமும் ஹிமாலயத்தில் இருந்த பூர்ஜபத்ரங்கள் வித்யாதரப் பெண்களுக்கு காதற்கடிதம் எழுதப்பயன்பட்டன என்று குறிப்பிடுகிறார்.

भूर्जत्वचः कुञ्जरबिन्दुशोणाः

      व्रजन्ति विद्याधरसुन्दरीणाम्

      अनङ्गलेखक्रिययोपयोगम्।।

     விக்ரமோர்வசீயத்தில் விதூஷகனின் வசனம் மூலமாகவும் பூர்ஜபத்ரத்தின் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார் காளிதாஸன்.

     காகிதத்தின் பயன்பாடு பல்கிய பின்னர் பூர்ஜபத்ரம் தனதிடத்தை இழந்தது. காலத்தினால் அது வழக்கொழிந்தது. தந்த்ர சாஸ்த்ரங்கள் பூர்ஜபத்ரம் மிகவும் புனிதமானதென்றும் மந்த்ரங்களை எழுதப்பயன்படுத்தத் தக்கதென்றும் குறிப்பிடுகின்றன.

சில சிறப்புச் சுவடிகள்

     மிகவும் புகழ்வாய்ந்த கரோஷ்டி லிபியிலும் ப்ராக்ருத மொழியிலும் எழுதப்பெற்ற தம்மபாதத்தின் சுவடியே இந்த வகைப் பொருளில் கிடைத்த மிகப்பழைய சுவடியாகும். கோடான் என்னும் இடத்தில் கிடைத்த இந்தச் சுவடியின் காலம் பொயு 2-3 ஆக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.

kharosthi_script

     ஸம்யுக்தாகம ஸூத்ரத்தின் சுவடியொன்று பொயு நான்காம் நூற்றாண்டாக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.

     போவர் என்பவரின் தொகுப்பில் 56 ஏடுகளுள்ள சுவடியொன்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இதன் காலம் பொயு 425 ஆகும்.

bower

பக்ஷாலியின் தொகுப்பிலும் உள்ள ஒரு சுவடி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகச் சிலராலும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக சிலராலும் கருதப்பெற்றிருக்கிறது.

     போட்லியன் நூலகத்திலுள்ள ஒரு பூர்ஜ பத்ர சுவடி 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்பெறுகிறது. தேசிய ஆவணக்காப்பகத்திலுள்ள பைஷஜ்ய குரு வைடூர்ய ப்ரபா ஸூத்ரத்தின் ஒரு சுவடி 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக்க் கருதப்பெறுகிறது. ஜெர்மனிலுள்ள நூலகங்களில் அதர்வவேதம் உட்பட மூன்று சுவடிகள் உள்ளன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *