ஒரு கோயிற் கட்டிடத்தில் தூணுக்கு மேலே உள்ள அங்கங்கள் உத்தரம், வாஜனம், வலபி மற்றும் கபோதம் என்று நாம் அறிவோம். இந்த உறுப்புக்கள் இணைந்த தொகுதிக்கே ப்ரஸ்தர வர்க்கம் என்று பெயர். இவற்றுள் வலபி என்பது மிக இன்றியமையாத பகுதியாகும். இந்தப் பகுதியில்தான் பூதவரி, அன்னவரி. சிங்கவரி முதலியவை இடம்பெறும். இதன் மறுபெயர்களை மானஸாரம் பின்வருமாறு தருகிறது.
गोपानं च वितानं च वलभी मत्तवारणम्
विधानं च लुपं चैवमेते पर्यायवाचकाः ।। मानसारः 16. १०
கோபானம், விதானம், வலபீ, மத்தவாரணம் மற்றும் லுபம் ஆகியவை இதன் மறுபெயர்களாம். மத்தவாரணம் என்பது வலபியின் மறுபெயர்களில் ஒன்றாக்க் கூறப்பெற்றிருக்கிறது. இந்தப் பகுதி மதம் கொண்ட யானையின் நெற்றிப் பகுதியை ஒத்திருப்பதால் இத்தகைய பெயரோடு அழைக்கப் பெறுகிறது.
பரதரின் நாட்ய சாஸ்த்ரமும் மத்தவாரணத்தின் அளவுகளை விளக்குகிறது. அரங்கத்தின் அளவுகளை விளக்கும்போது அதன் அங்கமான மத்தவாரணத்தின் அளவுகளையும் இந்த நூல் விளக்குகிறது.
रङ्गपीठस्य पार्श्वे तु कर्तव्या मत्तवारणी ॥ ६३॥
चतुस्तम्भसमायुक्ता रङ्गपीठप्रमाणतः ।
अध्यर्धहस्तोत्सेधेन कर्तव्या मत्तवारणी ॥ ६४॥
மத்தவாரணியை அரங்கத்தின் பக்கத்தில் அமைக்கவேண்டும். மத்தவாரணி நான்கு தூண்களைக் கொண்டமையும். ரங்கபீடத்தின் அளவையே கொண்டிருக்கும். மத்தவாரணியின் உயரம் ஒன்றரை முழமாகும். இதற்கான உரையான அபிநவபாரதி மத்தவாரணியின் நீளம் எட்டு முழங்களெனவும் அதை சதுரமாக அமைக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. நாட்ய சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயம் மத்தவாரணியைக் காக்கவேண்டி சிலரை அதற்காக நியமித்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
स्थापिता मत्तवारण्यां विद्युद्दैत्यनिषूदनी ९०
அவுணர்களை ஒழிக்கும் மின்னல் தேவதை மத்தவாரணியைக் காக்க நியமிக்கப்பெற்றாள். மூன்றாம் அத்யாயம் மத்தவாரணியைப் பூஜிக்கும் முறையைக் குறிப்பிடுகிறது.
ஸமராங்கணஸூத்ரதாரமும் பலவிதமான கட்டிடங்களை விளக்கும்போது மத்தவாரணியையும் பலவிதமான அமைப்புகளோடு அமைக்கும் விதத்தைக் குறிப்பிடுகிறது.
இத்தகையதோர் மத்தவாரணியை எல்லோராவின் 32 ஆம் எண்ணுள்ள குடைவரையில் காணவியலும். இது முக மண்டபத்தின் மீதமைந்துள்ளது. இந்த அமைப்பைக் குறிப்பிடும் விதத்தில் மிக அழகான யானைகளின் தொகுதி வரிசையாக இதன் மீது அமைக்கப் பெற்றுள்ளது. இதன் நடுவே மிதுனம் – இணையர் இடம் பெற்றுள்ளனர். இதன் மீது கக்ஷாஸனம் அமைக்கப் பெற்றுள்ளது. இந்த மத்தவாரணீ ஒன்றரை முழத்தோடு நாட்யசாஸ்த்ரத்தில் கூறப்பெற்ற அளவோடுள்ளதைக் காணவியல்கிறது.