ஸ்ரீபீடம் சார்த்திய ஸ்தபதி

     பொதுவாகத் திருக்கோயில்களில் சிற்பம் முதலியவற்றை உருவாக்கும் ஸ்தபதிகள் தம் வேலை முடிந்த பிறகு ஸன்மானத்தோடு தகுந்த மரியாதை செய்து அனுப்பப் பெறுவர். அதன் பிறகு ப்ரதிஷ்டை முதலியவற்றை சிவாசார்யர்களும் பட்டாசார்யர்களும் மேற்கொள்வர். ஆனால் கல்வெட்டொன்று கோயிலில் உடையாரின் ஸ்ரீபீடம் சுதையினாலேயே இருந்ததனால் காசளித்து கல்லினால் ஸ்ரீபீடம் உருவாக்கச் செய்து அதைப் பொருத்தமுடியாமல் ஏதோ காரணத்தினால் சைவாசார்யர்கள் திண்டாட ஸ்தபதியே பொருத்திய செய்தியைத் தெரிவிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு உடையார்கோயில் கரவந்தீச்வரர் கோயிலின் வட சுவரில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு 1902 ஆமாண்டு தொல்லியல் துறையறிக்கையில் 408 எண்ணாகக் கணக்கிடப்பெற்று தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 1041-ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப் பெற்றது. இதன் வரிகளாவன

1. ஸ்வஸ்திஸ்ரீ தண்டீச்சுரன் ஓலை சாகரஞ் சூழ்
2. வைய்யகத்து கண்டிச்சுரன் கரும..
3. ம் ஆராய்மின் பண்டே அறஞ்
4. செய்தான் செய்தான் அறங்கா
5. த்தான் பாதந் திறம்பாமல் சென்னி
6. மேல் வைத்து ஆதி தண்டேஸ்வரன்
7. ஆதேசம். நாயனார் திருக்கிளா உடை
8. யார் உலகுடைய பெருமாளுக்
9. கு நன்றாகப் பூஜை கொண்டருளுகிற நா
10. யனார் சுதையாலே பீடமாய் இருந்த
11. மையில் த்ரிபுவன சக்ரவர்த்தி மதுரையும் ஈ
12. ழமும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட
13. ருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யா
14. ண்டு பதினெட்டாவது மார்கழி மாஸ வரை
15. யும் ஸ்ரீபீடஞ்சார்த்தாதே எழுந்தருளி இருக்கை
16. யாலும் ஆட்டாண்டு தோறும் பசுங்கூட்டா
17. லே ஜீர்ண்ணோத்தாரம் பண்ண வேண்டுகையா
18. லும் இருன்தவாறே இக்கோயில் பற்று
19. பிடித்த மணலூர் வாதூல் ஆராவமுது மாதேவரான விக்கிரமசோழ
20. ப்பிரம்ம மாராயர்க்கு இக்கோயில் சைவாசாரியம் செய்வார்கள் ஸ்ரீ சதாசிவபட்டர் பலநாளும் நிர்மா
21. லிய சாங்கரியமாய் இராநின்றதெந்று அறிவித்தமையில் இவ்விக்கிரமசோழ
22. ப்பிரம மாராயர் தேவர் ஸ்ரீவாமதேவற்கும் உலகுடைய நாயநார்க்கும் விண்
23. ணப்பஞ்செய்து திருவிள்ளமாய் சைவசக்கரவர்த்திகளும் சைவாசா
24. ரியம் செய்வார்கள் கைய்யோலையும் கணித சக்கரவர்த்திகளும் கு
25. லோத்துங்க சோழ கணிதாதிராயரும் இட்ட நாளிலும் குரத்தாலும் சிலையா
26. லே சிபிடம் சாத்துக எந்று திருவிள்ளமானமையில் இச்சிபிடத்துக்கு உடலா
27. க விக்கிரமசோழபிரம மாராயர் சாக்கில் நிந்றும் ஆயிரம் காசு தந்து
28. இக்காசு நீக்கி வேண்டுவது சீபண்டாரத்தே இட்டு செய்க எந்று சொந்நமை
29. யில் நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையில்நிந்றும் சிலை கொண்டு வந்து
30. சாத்திராத்தம்மானபடியே ஸ்ரீபீடம் செய்து சாத்த புக்கமையில் ஆசாரியர்
31. கள் நிலைநிந்று சாத்தமாட்டாமையில் கோயில் காணி உடைய த
32. ச்சாசாரியும் நித்த விநோத வளநாட்டு கிழாற்கூற்றத்து நி
33. வரம்பூர் உடையாந் தேவந்னான உதயதிவாகர ஆசாரியன் நாந் சா
34. த்துகிறேன் என்றமையில் தானத்தாரும் உனக்கு வேண்டும் சிறப்பு தனது
35. சிபிடம் சார்த்தினபடிக்கு இறையிலியாக நிலமும் தருகிறோமென்றும் வே
36. ண்டிக் கொண்டமையில் இவனும் இவன் மக்களனைவருமாக இச்சிபிடம் ஒரு
37. விரோதமின்றியே சாத்தி விட்டமையில் இவனுக்கு இறைஇலியாக ஊறிபடி அரை
38. மாநிலமிட பண்ணுகவென்று கோயில் பற்று பிடித்த பிள்ளை விக்கிரமசோழ பிரம
39. மாராயர் ஓலை வந்தமையில் இவனுக்கு இறையிலியாக விட்ட புதத்தூர் ஆன திரிபுவனமாதேவிச்சதுப்
40. பேதி மங்கலத்து பொன் கொண்டு பொலிசைக்கு பொலியூட்டூர்க்கிழிறையிலி இவ்வூர் பிடாகைவ் வீரசோழநல்லூரில் கவுச
41. லைவதிக்கு மேற்கு கங்கைகொண்ட சோழவாய்க்காலுக்கு வடக்கு அஞ்சாங்கண்ணாற்று மூன்றாம் சதுரத்து மேற்கடைய மருகலூருடையாந் பற்றான
42. ஊற்படி நிலம் அரைமா இந்நிலம் அரைமாவும் மாத்தால் முப்பதின் கலமாக வந்த நெல்லு பெறக்கடவந் ஆகவும் பெறு
43. மடத்து கோயில் தரவின்றியிலே கையிடு குடுத்து கொண்டவன் ஆகவும் இக்கையிடே குடிமக்களுக்கு சிலவாவுவதாகவும் இப்படி சந்திராதி
44. த்தவற் செல்வதாகவும் கல்லும் வெட்டிக் கொழ்க இவனுக்கும் வன் வற்கத்தாற்கும் இப்படி பெறுவார்கள் கோ
45. யில்கணக்கு ஸ்ரீபூதி உடையான் திருக்கிளாவுடையாந் மகன் திருவாய்குலமுடையானான பிள்ளைவேளான் எழுத்து..

இந்தக் கல்வெட்டின் பொருள்

மங்கலம். ஆதி சண்டேச்வரரின் சாசனம் இது. அவர் கடல்சூழ்ந்த வையகத்தின் செயல்களுக்குத் தலைவர்.

திருக்கிளார் உடையாரின் திருக்கோயிலில் உலகுடைய பெருமாளுக்கு உடல் நன்றாக பூஜை கொண்டருளும் எம்பிரானுக்கு பீடம் சுதையால் இருந்தமையினால் த்ரிபுவன சக்ரவர்த்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட குலோத்துங்கனான மூன்றாம் குலோத்துங்கனின் பதினெட்டாவது ஆட்சியாண்டில் அதாவது பொயு 1196-இல் மார்கழி மாதம் வரை ஸ்ரீபீடம் சார்த்தாது இருந்தது. அதனால் திருக்கோயிலை பழுதுபார்த்து இக்கோயிலின் பற்றுடைய மணலூரைச் சேர்ந்த வாதூல ஆராமுது மாதேவர் எனப்பெறும் விக்கிரமசோழ பிரம மாராயரிடம் கோயிலில் சைவாசாரியராக இருந்த ஸ்ரீ சதாசிவ பட்டர் கல்லும் சுதையுமான ஸங்கரமாக இருப்பதைத் தெரிவித்தார்.

     சைவாசார்யர்களில் மூத்தோரும் சைவாசார்யர்களும் நாள் கணிக்கும் கணிதசக்ரவர்த்திகளும் கல்லினால் ஸ்ரீபீடம் சார்த்தச்சொல்லி திருவுள்ளமானது. இதற்காக விக்கிரமசோழ பிரமமாராயர் தன் பற்றில் ஆயிரம் காசு தந்தார். இந்தக் காசின்றி கோயிலின் ஸ்ரீபண்டாரத்திலிருந்து வேண்டுவன எடுத்து செய்யவேண்டுமெனப் பணித்தனர். நொடியூர் பட்டணத்தைச் சேர்ந்த கிள்ளியூர் மலையில் இருந்து கல் கொண்டு வந்து ஸ்ரீபீடத்தைச் செதுக்கினர். ஆனால் அந்தப் பீடத்தை சைவாசார்யர்கள் சாத்தமுடியாமல் ஆனார்கள்.

     ஆகவே கோயிலின் தச்சாசாரியும் நித்த வினோத வளநாட்டு கிழாற் கூற்றத்து நீர்வரம்பூரைச்சேர்ந்த உடையான் தேவன் என்னும் பெயருடையவனுமான உதயதிவாகர ஆசாரியன் தான் சார்த்துவதாகக் கூறினார். கோயில் தானத்தாரும் அதனை ஒப்புக் கொண்டு அவ்விதம சார்த்துவதானால் சிறப்பும் வரிநீக்கிய நிலமும் தருவதாகக் கூறினர். அதனைக்கேட்ட ஸ்தபதி தானும் தன பிள்ளைகளும் கூடி ஒரு துயருமின்றி ஸ்ரீபீடத்தைச்சார்த்தினர். அதனால் அவருக்கு வரிநீக்கிய நிலமாக முன்பு கூறியபடி அரைமா நிலம் தருமாறு கோயில் பற்றுடைய விக்கிரமசோழபிரம மாராயர் ஓலை அனுப்பினார். அதைக் கண்ட ஊர் மக்கள் புதத்தூர் என்னும் த்ரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தின் பொன்னைக் கொண்டு அதனை பொலிசை-வட்டியால் உட்கிடையூரான வீரசோழ நல்லூரில் நிலத்தை அளித்தனர். இதன் எல்லைகளா கவுசலையென்னும் வாய்க்காலுக்கு மேற்கும்கங்கை கொண்ட சோழ வாய்க்காலுக்கு வடக்கும் அமைந்த அஞ்சாம் கண்ணாற்றின் மூன்றாம் சதுரத்தில் மேற்கும் மருகலூருடையானுடைய பற்றான ஊரில் அடங்கிய நிலமான அரை மா அளவுள்ள நிலத்தை வழங்கினர். இந்த நிலத்தின் வருவாயான முப்பது கலம் நெல்லையும் வழங்கினர். இதைப் பெறும் கோயிலின் மாற்றுக் கொடுத்துக் கொண்டவனாகவும் அறிவித்தனர். அவ்விதம் வழங்கப்பெற்ற கையீடே குடிமக்களுக்குச் செலவாகவும் அறிவித்தனர். இத்தகைய தானம் சூரியனும் சந்திரனும் உள்ளவரை நீடிப்பதாகவும் இதைக் கல்லிலும் வெட்டிக் கொள்ளவும் அனுமதி அளித்தனர்.

     இந்தத் தானத்தை அந்த ஸ்தபதியும் அவருடைய வர்க்கத்தாரும் இவ்விதமே பெறுவார்கள் என்றும் ஆணை பிறப்பிக்கப் பெற்றது. இதற்கு கோயில் கணக்கான ஸ்ரீபூதி உடையான் திருக்கிளாவுடையான் மகனான திருவாய் குலமுடையானான பிள்ளை வேளான் கையெழுத்திட்டான்.

     இவ்விதம் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டினால் ஸ்தபதியொருவர் ஸ்ரீபீடம் சார்த்திய பெருமை தெரிய வருகிறது.  இங்கு ஸ்ரீபீடம் சார்த்தமுடியாமற்போனதற்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை. தெய்வச் செயலா அல்லது கல்லின் எடையா காரணம் எதுவென்று தெரியவில்லை..

Please follow and like us:

One thought on “ஸ்ரீபீடம் சார்த்திய ஸ்தபதி

  1. “ஸ்தபதி தானும் தன் பிள்ளைகளும் கூடி ஒரு துயருமின்றி ஸ்டீபீடத்தைச் சார்த்தினர்” என்பதுகொண்டு நம்பிக்கை சார்ந்தது என நினைக்கிறேன்.அதுபோல் சில இடங்களில் நடந்துள்ளது,திருப்பனந்தாள் சிவலிங்கம் நேராகவில்லை என ஒருநாயன்மார் கழுத்தில் கயறிட்டு இழுத்துள்ளார்.எங்கள் ஊரில் சைவப்பிள்ளை ஒருவர் கோயில்வேலை துவங்கியபின் இறந்தார்.இப்போதான் சுமார் 30 வருடங்கள் கழித்து அந்தவேலை முடிந்து உடையார்பாளையம் சமீந்தாரெல்லாம் வந்து குடமுழுக்கு செய்தனர்.இதுபோல் ஏதேனும் தடங்கள் ஏற்படடவே சார்த்த அஞ்சியிருப்பர்.

Leave a Reply to இரமேஷ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *