இதுவரையில் பனையோலை, காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் என்னும் மூன்று முக்கிய எழுதுபடுபொருட்களைக் கண்டோம். இன்னும் இரு எழுதுபடு பொருட்கள் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத் என்பவையே அவை.
ஸாஞ்சிபாத்
அகில் மரமே அஸ்ஸாமில் ஸாஞ்சி என்றழைக்கப் படுகிறது. அதன் மரப்பட்டை ஸாஞ்சிபாத் என வழங்கப்பெறுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் மட்டுமே வழக்கிலிருந்தது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் தமது ஹர்ஷசரிதத்தில் இதைப் பற்றிய குறிப்பைத் தருகிறார்.
अगरुवल्कलकल्पितसञ्चयानि च सुभाषिताभाञ्जि पुस्तकानि।
நல்லுரைகளை அகில்பட்டையில் எழுதி வைத்ததனால் அவை செம்பழுப்பு நிறத்தை அடைந்ததாக இந்தக் குறிப்பு கூறுகிறது.
பௌத்த நூலான ஆர்யமஞ்ஜுஸ்ரீமூலகல்பம் என்னும் நூலும் அகில்மரப்பட்டையில் மந்த்ரங்களையும் யந்த்ரங்களையும் எழுதும் முறையைக் குறிப்பிடுகிறது.
இத்தகைய அகிற்மரப்பட்டைச் சுவடிகள் அஸ்ஸாமில் மட்டும் கிடைத்துள்ளன. குவாஹாடி பல்கலைக்கழகச் சுவடியகம், நாராயண கையெழுத்துப் ப்ரதி ஆய்வகம், சாமரியா ஸர்கா மற்றும் காமரூப அனுஸந்தான ஸமிதி ஆகியவற்றில் இத்தகைய சுவடிகள் காணப்பெறுகின்றன.
இவை அனைத்தும் 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்பெறுகின்றன. ஜெய்பூர் அரசரின் தொகுப்பில் மஹாபாரதத்தின் சில பர்வங்கள் அகிற்பட்டையில் எழுதப்பெற்றவையாகக் காணப்பெறுகின்றன.
தூலிபாத்
தூலிபாத் என்பது அஸ்ஸாமில் கையால் செய்யப்பெறும் ஒருவகைக் காகிதமாகும். இதில் எழுதப்பெற்ற சில சுவடிகள் குவாஹாடி பல்கலைக்கழகச் சுவடியகத்தில் காணப்பெறுகின்றன.