கண்ணபிரானும் ஜல்லிக்கட்டும் – நப்பின்னை யார்

ஏறுதழுவல் தமிழகத்தின் தொன்று தொட்ட வீரவிளையாட்டுக்களில் ஒன்றென்றும் இதில் வெற்றிபெறுபவருக்கு ஏறுடையார் பெண்ணை ஈந்தளிக்கும் வழக்கமுண்டு என்பதையும் நாமறிவோம். இந்த விளையாட்டு இந்நாளில் ஜல்லிக்கட்டு என வழங்கப்பெறுகிறது. இத்தகையதோர் வீரவிளையாட்டு கண்ணபிரானின் திவ்யசரிதையிலும காணப்பெறுகிறது. ஹரிவம்ச புராணமும் பாகவதபுராணமும் இந்தச் செய்தியைத் தருகின்றன.

கும்பகன் என்பான் நந்தகோபனுடைய மைத்துனன். அவன் பெறும் ஆவின் செல்வத்தோடு மிதிலையில் வாழ்ந்து வந்தான். அவன் யசோதைக்கு இளைய தம்பி. அவனுடைய மனைவியின் பெயர் தர்மதா என்பதாகும். அவனுக்கு ஸ்ரீதாமன் என்னும் மகனும் நீளா என்னும் மகளும் இருந்தனர். மகன் எல்லா நற்குணங்களுக்கும் மகள் எல்லா அழகிற்கும் உறைவிடமாகத் திகழ்ந்தனர். அவள் மண்ணுறையும் அரமகளிரெனத் திகழ்ந்தனள். அவளுடைய எழிலைக் கண்டு எல்லா அரசர்களும் பெண்கேட்டனர்.

இடையில் தேவாஸுரப் போரில் தோல்வியுற்ற காலநேமியின் ஏழு புதல்வர்களான அரக்கர்கள் திருமாலை எவ்வகையிலேனும் கொல்ல உறுதி பூண்டனர். திருமால் கண்ணபிரானின் வடிவில் கோகுலத்தில் வளர்வதைக் கண்டனர். அவர்கள் காளைகளின் உருவெடுத்து மிதிலையை அடைந்தனர். பகலெல்லாம் புற்களை அழித்தும் மற்றைய பசுக்களை அழித்தும் கொடுமை செய்து இரவில் கும்பகனின் கொட்டிலில் கிடந்தனர். சில ஆயர்களையும் கொன்றனர். இதனால் துயருற்ற மக்கள் மிதிலையின் அரசனான மிதிலாவர்மனின் முறையிட்டனர். அவனும் கும்பகனை அழைத்து ஏழு காளைகளையும் அடக்காவிட்டால் உறவினரோடு தண்டனை பெற வேண்டியிருக்குமென எச்சரித்தனன்.

     அன்றிரவு கொட்டிலில் அடைபட்ட காளைகளை ஆயர்களின் துணைகொண்டு அடக்க முயன்றான் கும்பகன். ஆனால் அந்தகாளைகளோ அடக்க முடியாமலிருந்ததோடு சில ஆயர்களையும் கொன்றன. கும்பகன் அதிர்ச்சி அடைந்தான். பிறகு காளைகளை அடக்குவோருக்குத் தன்மகளான நீலாவைத் தருவதாக அறிவித்தனன். அவள் அழகைக் கண்ட பல ஆயர்களும் புதல்வர்களோடு நந்தகோபனும் ஆங்கு போந்தனன்.

அன்றிரவு சில ஆயர்கள் அந்தக் காளைகளை அடக்கத் துணிந்தனர். ஆனால் தோல்வியைத் தழுவினர். கும்பகன் காளைகளை அடக்குவோருக்கு நீலாவைத் தருவதாக அறிவித்தான். அவள் அழகைக் கண்ணுற்ற சிலர் மீண்டும் முயற்சித்தனர். ஆனால் மண்ணைக் கவ்வினர்.

இதைக் கேட்ட கண்ணபிரான் எழுந்து பலராமரைப் பார்த்து இவர்கள் காலநேமியின் புதல்வர்கள், என்னால் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று கூறினார். அவர்களைக் கொன்று நீலாவைக் கைப்பிடிப்பதாகவும் கூறினார். அவர் காளைகளின் முன்னின்றார். அவரைக் கண்ட காளைகள் கொல்வதற்கு விரைந்தோடி வந்தனர். சில கணங்களிலேயே முட்டியால் அடித்து ஒரு காளையைக் கொன்றார். மற்றொன்று அடுத்த கணங்களில் வீழ்ந்தது. இவ்வாறு ஒவ்வொரு காளையாக வீழ்த்தினார்.

இறுதியில் நீலாதேவியின் கைகளைப் பற்றினார். கும்பகன் ஆயிரம் பசுக்களையும் எருமைகளையும் வழங்கினான். நந்தகோபன் அவற்றை ஏற்றுக் கொண்டு நீலா மற்றும் புதல்வர்களோடு நாடு திரும்பினான்.

இவ்விதம் இந்தக் கதை வழங்கப் பெறுகிறது.

நாம் தமிழ் இலக்கியங்களில் கண்ணபிரானின் மனைவியாக நப்பின்னை என்பாளைக் காண்கிறோம். இவள் யாரென்னும் கேள்வி சர்ச்சையாகவே உள்ளது. சிலப்பதிகாரம்

வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்

தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்

வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்

பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே

ஐயென்றா ளாயர் மகள்;”

என்று நப்பின்னை வேடமணிந்து கண்ணபிரானோடு ஆடியவளைக் குறிப்பிடுகிறது.

நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை

இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.

என்று சீவகசிந்தாமணியும் நப்பின்னையைக் குறிப்பிடுகிறது. பெரியாழ்வார்

பின்னை  மணாளனை ….என்னையும் ,

எங்கள்  குடி முழுதும்  ஆட்  கொண்ட ”

என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

“செப்பென்ன  மென்  முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த  மலர்  மார்பா”

என்றும் நப்பின்னையைப் பாடிப்பரவுகின்றனர்.

மேற்கண்ட மேற்கோள்களினின்றும் நப்பின்னை ஆயர்குடி தோன்றி கண்ணனை மணந்தவள் என்று புலனாகிறது.

மேற்கண்ட செய்திகளை ஒப்பிடுதல் மூலம் நப்பின்னை நீளாதேவியாகலாம் என்னும் அடையாளம் சரியாகத் தோன்றுகிறது. சில அறிஞர்கள் இவ்விதம் செய்த அடையாளம் பொருத்தமாகவே இருக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *