சோழர்தம் ராஜகுருமார்களும் அகோரசிவாசார்ய பத்ததியும்

இந்திய வரலாற்றில் பலவிதமான ராஜகுருமார்களைப் பற்றிய தரவுகள் கிடைக்கின்றன. சைவமதத்தின் அடியவர்களான சோழவேந்தர்களும் தத்தமது அறச்செயல்களுக்கு வழிகாட்டியாக நியமித்தனர். அத்தகைய ராஜகுருமார்கள் அவர்தமது கல்வெட்டுக்களிலிருந்து வெளிச்சத்துக்கு வருகின்றனர். இத்தகைய ஆசார்யர்களது இலக்கணம் தர்ம மற்றும் அர்த்த சாஸ்த்ரங்களில் சிறப்பாக விளக்கப்பெற்றிருக்கிறது. பின்வரும் பட்டியல் சோழவரசர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள்.

மன்னர் ஆசார்யர் காலம் கல்வெட்டு
ராஜராஜன் I ஈசான சிவர் பொயு 1000 தஞ்சாவூர்
ராஜேந்த்ரன் I சர்வசிவர் பொயு 1020 தஞ்சாவூர்
குலோத்துங்கன் I ஸ்ரீகண்டசிவர் பொயு 1120 திருமங்கலக்குடி
விக்ரமன் ஸ்ரீகண்டசிவர் பொயு 1121 திருமங்கலக்குடி
குலோத்துங்கன் II த்யான சிவர் பொயு 1150 சிதம்பரம்
ராஜாதிராஜன் II உமாபதி சிவர் பொயு 1170 ஆர்ப்பாக்கம்
குலோத்துங்கன் III ஈச்வர சிவர் பொயு 1200 த்ரிபுவனம்

இப்படி ராஜகுருமார்கள் கல்வெட்டுக்களால் அறியப்பெறுகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பெற்ற மர்யாதையும் ஆச்சர்யப்படத்தக்கது. அவர்கள் தமது குருமார்களைச் சிவபெருமானாகவே கண்டனர். முதலாம் ராஜேந்த்ரனின் எசாலச்செப்பேடு இதைச் சிறப்பாக விவரிக்கிறது.

उक्तं किं बहुभिः स्फुटस्तुतिपदैः राजेन्द्रचोलस्य यत्

सर्वाम्भोनिधिमेखला वसुमती भर्तुः श्रीभूपतेः।

यः प्रत्यक्षमहेश्वरो गुरुरयं राजावलीमौलिभिः

सद्रत्नाभरणैः विचित्रितपदद्वन्द्वो बुधानां निधिः।।

பல சொல்லி என்ன, கடலை இடையணியாகக் கொண்ட நிலமகளின் கொழுநனும் திருவுடைய வேந்தனுமான ராஜேந்த்ர சோழன் தெளிவான ஸ்தோத்ரங்களால் அரசர்களின் தொகுதியின் மகுடங்களால் சிறந்த ரத்னங்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்களால் அழகிய திருவடிகளையுடையவரும் அறிஞர்களின் நிதியுமான குருவை நேரில் வந்த சிவபெருமானாகவே எண்ணி ஸ்துதித்தான்.

சிறந்த தத்துவ ஜ்ஞானியும் க்ரியாக்ரமத்யோதிகையென்னும் அகோரசிவாசார்யபத்ததியை எழுதியவருமான அகோரசிவாசார்யார் பொயு 1156 இல் இந்த நூலை எழுதினார். அகோரசிவாசார்யார் காஞ்சியில் வாழ்ந்து வந்தார். அவர் சோழவரசர்களுக்கு ஆசார்யர்களாகத் திகழ்ந்த தமது முன்னோர்களைப் பற்றிய பட்டியலைத் தருகிறார்.

ततो ब्रह्मशिवाचार्यः तपस्वी लाटपुङ्गवः।

ततो मूर्तिशिवः तादृक् विजयाख्यपुरे स्थितः।।

मायापुर्यां गृही तज्जः स्थितस्सर्वात्मदेशिकः।

तच्छिष्यो गौडवृषभः श्रीकण्ठशिवदेशिकः।।

श्रीमद्दभ्रसभानाथदिदृक्षातो गतस्सुधीः।

श्रीविक्रमादिचोलेशाः स्वगुरूत्वे न्यवेशयन्।

ततो ध्यानशिवश्श्रीमान् अभवत् गौडपुङ्गवः।।

अष्टाविंशतितन्त्राणां व्याख्याननिपुणो गुरुः।

चोलेश्वरोऽपि भूत्वा यः सभेशं समपूजयत्।।

இந்தப் பகுதி அந்த நூலின் அறிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சோழப்பரம்பரையின் தொடர்பைத் தருகிறது. ப்ரஹ்மசிவம் என்பவர் லாட தேசத்தைச் சேர்ந்தவர். அவர் மூர்த்திசிவத்தைப் பெற்றெடுத்தார். அவர் விஜயபுரத்தில் வாழ்ந்தார். மாயாபுரியில் மணம் புரிந்தார். அவர் ஸர்வாத்மதேசிகர் என்பாரைப் பெற்றெடுத்தார். அவருடைய சீடரான ஸ்ரீகண்டசிவம் என்பார் கௌடதேசத்தைச்சேர்ந்தவர். அவர் சிற்றம்பலநாதனைக் கண்ணாரக் காண்பதற்காக சிதம்பரம் போந்தார். அவரை விக்ரமசோழன் முதலியோர் ராஜகுருவாக நியமித்து போற்றினர். அதன் பிறகு தோன்றிய த்யானசிவர் கௌடதேசத்தைச் சேர்ந்தவர். அவர் இருபத்தெட்டு ஆகமங்களுக்கும் உரையெழுதியவர். அவர் சோழவரசராகி சிற்றம்பலநாதரைப் பூஜித்தார்.

அகோரசிவாசார்யார் இரண்டாம் ராஜாதிராஜனுக்கு அரசகுருவாக இல்லாமல் போனாலும் கூட அவர் அரசகுருவாக இருந்த தம்முடைய முன்னோர்களை நினைவு கூருகிறார். சிவாத்வைதத்திற்கு அடிகோலிய ஸ்ரீகண்ட சிவமென்பார் விக்ரமசோழனுக்குக் குருவாகத் திகழ்ந்தமை கல்வெட்டுக்களாலும் அறியப்பெறுகிறது. ஆனால் அந்த செய்யுட்களின் கடைசி வரி அவர் சோழவரசராகத் திகழ்ந்து நடராஜரைப் பூஜித்தமை விளக்கமுடியாததாக இருக்கிறது. இதற்குத் தகுதியான விளக்கம். அவரே அரசரைப் போல நாட்டை வழிகாட்டி வந்தார் எனக்கோடலேயாகும்.

இவ்விதம் கல்வெட்டுக்களில் காணப்பெறும் சோழவரசர்களின் ஆசார்ய பரம்பரை நூல்களிலும் காணப்பெறுகிறது.

Please follow and like us:

3 thoughts on “சோழர்தம் ராஜகுருமார்களும் அகோரசிவாசார்ய பத்ததியும்

  1. அருமைய தகவல் ஐயா

  2. Ji.
    In my five novels, three novels had the participance of Agora Sivachariyar. He was Acharya for Virarajendra, Kulottunga1 and there were many reference on him in telugu land
    Dhivakar

  3. ஐயா என் போன்ற எளியவர்களுக்குப் புரியும் வண்ணம் லாடதேசம்,கௌடதேசம் இவை இப்பொழுது எந்தெந்தப் பகுதி எனச்சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *