எதிரெதிர் பேரரசுகளின் இரு அந்தணத் தளபதிகள்

பதினோராம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தக்காணத்தில் கோலோச்சிய இரு பெரும் பேரரசுகள் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த சோழர்களும் கல்யாணியைக் கொண்ட சாளுக்யர்களுமேயாம். மற்றைய அரசர்கள் இவ்விரு பேரரசுகளின் பின்னரே அணிவகுத்து நின்றனர். இவ்விரு அரசுகளுக்குமான மோதலைத் துவக்கி வைத்தது ராஜராஜப் பெருந்தகையேயாம். முதலாம் ராஜராஜன் கல்யாணி சாளுக்யர்களின் வேந்தனான ஸத்யாச்ரயனை (997-1007 CE) வென்கண்டான். அவனைத் தொடர்ந்து வந்த அரசர்களில் முதலாம் ராஜேந்த்ரன் துவங்கி வீரராஜேந்த்ரன் வரையில் வந்த மன்னர்கள் மேலைச் சாளுக்யர்களோடு மோதினர். இந்தப் போர்வரிசை முதலாம் குலோத்துங்கனோடு ஆறாம் விக்ரமாதித்யன் (1076-1126 CE) உடன்படிக்கை செய்த வரையில் நீடித்தது.

இதற்கிடையில் ராஜாதிராஜசோழன் மேலைச் சாளுக்யரோடு மும்முறை போரிட்ட செய்தி கல்வெட்டுகள் மூலம் அறியக்கிடக்கிறது. இறுதிப்போரான கொப்பத்துப் போரில் இறந்து பட்டான். முதற்போர் அவனுடைய தந்தையான முதல் ராஜேந்த்ரனின் காலத்தில் நிகழ்ந்தது. இரண்டாம் சோழ-சாளுக்ய போர் பொயு 1046 அளவில் அவனால் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் இறுதிப்போர் கொப்பத்தில் பொயு 1054-இல் நிகழ்ந்தேறியது.

இவனுடைய தளபதியாகச் செயல்பட்டவன் அப்பிமையனான ராஜேந்த்ர சோழ ப்ரஹ்மாதிராஜன் ஆவான். ப்ரஹ்மாதிராஜன் என்னும் விருதுப் பெயர் அவன் அந்தணன் என்பதைக் குறியாநிற்கிறது. இவன் முதலாம் ராஜேந்த்ரன் காலந்தொட்டே சோழர்தம் தொண்டாற்றினான் என்பதும் அறியக்கிடக்கிறது. இவன் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ராஜாதிராஜனின் ப்ரதிநிதியாக நிர்வஹித்தான். இந்தப் பகுதி மஹாராஜவாடி 7000 என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெறுகிறது. இவன் பல போர்களில் பங்குகொண்டவன் என்பது இவனுடைய விருதான தண்டநாயகன் என்பதால் பெறப்படுகிறது.

ராஜாதிராஜனுடன் போரில் ஈடுபட்ட சாளுக்ய வேந்தன் ஆஹவமல்லனான முதலாம் ஸோமேச்வரன் ஆவான். இவன் பொயு 1043  முதல் 1068 வரை ஆண்டவன். துங்கபத்ரையில் ஜலஸமாதி அடைந்தவனும் இவனே. இவனுடைய படைத்தலைமையேற்றவன் நாகவர்மன் என்னும் அந்தணனாகும். இவன் அவனுக்குத் தலைமை அதிகாரியாக இருந்தான். இவனுக்குப் பின்வரும் விருதுகளும் வழங்கப்பெற்றிருந்தன.

  1. விந்த்யாதிப மல்ல சிரச்சேதனன்
  2. சக்ரகூட காலகூடன்
  3. தாராவர்ஷ தர்போத்பாடனன்
  4. மாரஸிம்ஹ மத மர்த்தனன்

மேற்கண்ட விருதுப் பெயர்களிலிருந்து இவன் வீரத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்தமை அறியப்பெறுகிறது.

மேற்கூறிய இரு அந்தணத் தளபதிகளும் நேரடியாக மோதினர் என்பதற்கு நேரடியான சான்றுகள் இல்லையெனினும் சமகாலத்தைச் சேர்ந்த தளபதிகள் என்பதால் நேரடியாக மோதியிருப்பர் என்பது உய்த்துணரக் கிடக்கிறது.

Please follow and like us:

One thought on “எதிரெதிர் பேரரசுகளின் இரு அந்தணத் தளபதிகள்

  1. அப்பிமையன் ஆன ராசேந்திரசோழப்பிரம்மாதிராசன் தான் கல்கி குறிப்பிடும் அநிருத்தப்பிரம்மராயர் அப்படித்தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *