இதுகாறும் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோஹங்கள் எழுதுபடு பொருட்களாக எவ்வாறு பயன்பட்டனவென்று கண்டோம். இனி மீதமிருக்கும் உலோஹங்கள் வெண்கலம், இரும்பு மற்றும் ஈயமாகும்.
- வெண்கலம்
மணி தயாரிக்கப் பயன்படும் இந்த உலோஹம் அரிதாக கருவிகள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் உருவாக்கப்பெற்ற மணிகளில் சில அதைக் கொடுத்தவரின் பெயரோடு காணப்பெறுகின்றன. பெஷாவரில் கிடைத்த வெண்கலத்தாலான மனிதத் தலையில் சுற்றிலும் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன.
- இரும்பு
இந்த உலோஹம் பொதுப்பயன்பாட்டிலும் விலைகுறைவாகவும் இருந்தாலும் கூட எளிதில் துருபிடிக்கும் தன்மையால் எழுதுதற்கு அதிகமாகப் பயன்படுத்தவில்லை. மூன்று இடங்களில் இரும்பினாலான தூண்களில் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன.
- குதுப் மினாரின் அருகிலுள்ள துருப்பிடிக்காத மெஹ்ருலி இரும்புத்தூண். இந்தத் தூணில் சந்த்ரன் என்னும் அரசனின் எழுத்துப்பொறிப்புக்கள் காணப்பெறுகின்றன.
2. தார் நகரிலுள்ள இரும்புத்தூணில் நாகரி மற்றும் பெர்ஷியன் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இந்த எழுத்துக்கள் அக்பரின் காலத்தைச் சேர்ந்தது.
3.ராஜஸ்தானிலுள்ள அசலேச்வரர் கோயிலிலுள்ள இரும்புத்தூணின் உச்சியில் 15-ஆம் நூற்றாண்டு எழுத்துப்பொறிப்புக்கள் காணப்பெறுகின்றன.
ஈயம்.
ஈயத்தில் எழுதபெற்றதாகக் கிடைக்கும் ஒரே எழுத்துப் பொறிப்பு ப்ரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருப்பதாக அறியப்பெறுகிறது.
இவ்விதம் உலோஹஙகளில் எழுதப்பெற்றதாகக் கிடைக்கின்றன.