இந்திய படிமவியலில் இறைவனின் திருவுருவங்களின் கைகளை அலங்கரிக்கும் ஆயுதங்கள் அந்தந்த இறையுருவத்தின் குணத்தின் அடையாளமே என்பதை அறிவோம். அவ்விதம் குமரக்கடவுளுக்கும் இந்த்ரனுக்கும் அமைக்கப்படும் இரு ஆயுதங்கள் வஜ்ரமும் சக்தியும். இவ்விரு ஆயுதங்களின் வடிவத்தைப் பொறுத்தவரை சிறு குழப்பம் காணப்பெறுகிறது. சக்தி என்னும் சொல்லைக் கேட்டவுடன் நம் மனது சூலத்தைப் போன்ற ஆயுதத்தை உருவகம் செய்கிறது. வஜ்ரம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் தண்டாயுதத்தைப் போன்ற கற்பனை எழுகிறது.
ஆனால் நூல்களும் கிடைக்கும் படிமங்களும் மேற்கண்ட கற்பனைக்கு முற்றிலும் மாறுபாடாக அமைந்துள்ளன. குமரக்கடவுளின் படிமங்களில் மேற்கண்ட இரு ஆயுதங்களும் அமைந்துள்ளன. ஆனால் இந்த்ரனின் வடிவை ஆய்வதன் மூலம் ஒரு முடிவை எட்டமுடியும். காஞ்சிபுரம் கைலாயநாதர் ஆலயத்திலுள்ள சிற்பத்தொகுதியொன்று இந்த்ரனைக் கொண்டுள்ளது. இந்தச் சிற்பத்திலிருந்து இந்த்ரனை அடையாளம் காணவியல்கிறது. இந்தக் கற்பலகை ஜலந்தரனின் உருவாக்கத்தைக் குறிக்கிறது. இந்த்ரன் எந்தையைக் காண கைலை சென்றானாம். அங்கே எந்தை ருத்ரர்களின் வடிவோடு விளையாடிக் கொண்டிருந்தாராம். பல கேள்விகள் கேட்டும் பயனின்றி சினந்த இந்த்ரன் அவரைத் தாக்க வஜ்ராயுதத்தை ஓங்கினானாம். நான்முகன் இந்த்ரனிடம் உண்மையைக் கூறித் தடுத்தாராம். இந்தக் கதைதான் இங்கே சிற்பத்தில் காட்டப்பெற்றிருக்கிறது.
இங்கே இந்த்ரன் கையில் ஓங்கிய ஆயுதத்தைக் கவனித்தால் உண்மை புலப்படுகிறது. இந்த வஜ்ராயுதம் இரு சூலங்களை இருபுறமும் பொருத்தியதாக அமைந்துள்ளது. ஆகவே வஜ்ரம் என்பது இருபுறமும் சூலத்தைப் பொருத்திய ஆயுதம் என்பது தெளிவாகிறது. சக்தி என்பது மூன்று வைர வடிவப் பட்டைகளைக் கொண்டதாகும்.
அபராஜித ப்ருச்சா என்னும் சிற்பநூலும் வஜ்ரத்தின் இலக்கணத்தைத் தருகிறது.
वज्रं शूलद्वयं दीर्घमेकविंशतिशूलतः।
இருபத்தோரு அங்குலத்தோடு இருபுறமும் சூலத்தைப் பொருத்திய ஆயுதமே வஜ்ரமாகும் என்பது மேற்கண்டதன் பொருள்.
பௌத்தர்களின் வஜ்ரமும் வஜ்ரம் பதித்த மணிகளும் கூட வஜ்ராயுதத்தைக் கண்டறிய உதவியாக உள்ளன.
தமிழகத்தில் குமரக் கடவுளுக்கு வைக்கப்பெறும் சக்திவேல் சக்தியையும் வேலையும் கலந்ததாக உருவாக்கப்பெற்றிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
முதல்படத்தில் வச்சிரம் என் கண்ணுக்குப் புலப்படவில்லை.இரண்டாம் படத்தில் இடதுகீழ்ப்பறம் உள்ளவடிவமே முருகன் வேலாகியுள்ளதாகத்தெரிகிறது.இரண்டாம்படம்,சக்திவடிவமா?,நன்றி!
மிக அருமையான விளக்கம் சார்..நன்றி