கோப்பெருஞ்சிங்கனின் மற்றொரு ஏரிக்கல்வெட்டு

     நாம் ஏற்கனவே கோப்பெருஞ்சிங்கன் ஏரியைப் பழுதுபார்த்த கல்வெட்டைப் பார்த்தோம். அந்த ஏரி பாண்டிச்சேரிக்கருகிலுள்ள த்ரிபுவனையில் அமைந்தது. மற்றொரு கல்வெட்டு அதனைப் போன்ற ஏரி பழுதுபார்த்தலைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு திருவக்கரையிலுள்ள சந்த்ரமௌளீச்வரர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தின் தென்புற அடியில் அமைந்துள்ளது.

     இந்தக் கல்வெட்டு அரசனைக் காடவன், அவனியாளப்பிறந்தான், ஸர்வஜ்ஞன், கட்கமல்லன் மற்றும் க்ருபாணமல்லன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒழுகறையில் அமைந்த ஏரிக்கு மதகும் கட்டுவித்து அதை நிரப்ப வாயக்காலும் கல்லுவித்த செய்தியைத் தருகிறது. அந்த வாய்க்காலுக்கு த்ரிபுவனந்ருபநாதன் என்று பெயரும் வைத்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒழுகறையும் பாண்டிச்சேரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த ஊர் கல்வெட்டுக்களில் குலோத்துங்க சோழ நல்லூர் என வழங்கப்பெற்றுள்ளது.

வரி 1 சகலபுவன சக்ரவர்த்தி காடவன் அவனியாளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் ஸர்வஜ்ஞ கட்கமல்லன் ஒழுகறை
வரி 2 ஏரிக்கு மதகுஞ்செய்வித்து இவ்வேரிக்கு நீர்புகிரக்காலும் கல்லுவித்தபடி. ऒऴुकूरनगरितटाककूले विपु
வரி 3 लशिलाघटितं महाप्रणालम्। जगदवनसमुद्भवाभिधानं व्यतनुत भूमिपतिः कृपाणमल्लः।। ऒळुकूरत
வரி 4 टाकपूर्त्यै क्षितिपरिपालनसम्भवदीक्षितः। त्रिभुवननृपनाथनामधेयां बहुतरवारिवहां व्यधत्त कुल्याम्।।

சகலபுவன சக்ரவர்த்தி காடவன் அவனியாளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் ஸர்வஜ்ஞ கட்கமல்லன் ஒழுகறை ஏரிக்கு மதகுஞ்செய்வித்து இவ்வேரிக்கு நீர்புகிரக்காலும் கல்லுவித்தபடி.

கோப்பெருஞ்சிங்கன் ஸகலபுவன சக்ரவர்த்தி, காடவன், அவனியாளப்பிறந்தான், ஸர்வஜ்ஞன் (வாலறிவன்), கட்கமல்லன் (வாள்வீரன்) என்னும் பட்டங்களைத் தரித்தவன். அவன் ஒழுகறையிலுள்ள ஏரிக்கு மதகும் செய்வித்து ஏரிக்கு நீர் புகும் வண்ணம் கால்வாயும் வெட்டுவித்தான்.

 

பாவகை – ப்ரஹர்ஷிணீ

ऒऴुकूरनगरितटाककूले विपुलशिलाघटितं महाप्रणालम्।

जगदवनसमुद्भवाभिधानं व्यतनुत भूमिपतिः कृपाणमल्लः।।

          க்ருபாணமல்லனான அரசன் ஒழுகூர் நகரத்தின் ஏரியின் கரையில் பெரும் கற்களால் கட்டப்பெற்ற பெரும் மதகை எடுப்பித்தான். அதற்கு ஜகதவன ஸமுத்பவன் (அவனியாளப்பிறந்தான்) என்னும் பெயரையும் வைத்தான்.

பாவகை – ப்ரஹர்ஷிணீ

ऒळुकूरतटाकपूर्त्यै क्षितिपरिपालनसम्भवदीक्षितः।

त्रिभुवननृपनाथनामधेयां बहुतरवारिवहां व्यधत्त कुल्याम्।।

          ஒழுகூர் நகரத்தின் ஏரியை நிரப்ப அவனியாளப் பிறந்தானான அரசன் த்ரிபுவுனந்ருப நாதன் என்னும் பெயரால் நீர் நிறைந்த வாய்க்காலை வெட்டுவித்தான்.

     இவ்விதம் நமது முன்னோர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்த விதம் கல்வெட்டுக்கள் மூலம் அறியக்கிடக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *