சாளுக்ய மன்னன் இரண்டாம் புலகேசி இரண்டாம் முறை படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்தபடியே முதலாம் நரஸிம்ஹவர்மன் வாதாபி வரைப் போந்ததும் அதனைக் கைப்பற்றியமையும் நாமறிவோம். மணிமங்கலம், சூரமாரம் மற்றும் பரியளம் ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பல்லவர்களின் கை மேலோங்கியிருந்தது. பல்லவர் படை சாளுக்ய நாட்டின் இதயமாகத் திகழ்ந்த வாதாபியில் ஊடுருவி நின்றது. இதன் சாளுக்ய ஆட்சியே முன்காணாவிதமாக நிலைகுலைந்தது. ஈடில்லாப் பேரரசனான இரண்டாம் புலகேசி இறந்து பட்டனன். சீன யாத்ரிகனான ஹ்வான் ஸாங் சாளுக்ய நாட்டிற்குப் போந்தமை பொயு 641 என்பதால் மேற்கண்ட நிகழ்ச்சி 642-43-இல் நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பிறகு முதலாம் விக்ரமாதித்யன் பட்டமேற்கும் வரையில் அடுத்த பதிமூன்று வருடங்களுக்கு சாளுக்ய அரசத் திருமகள் பொலிவிழந்து நின்றனள்.
மேற்கண்ட நிகழ்வு வாதாபியிலுள்ள முதலாம் நரஸிம்ஹ பல்லவனின் கல்வெட்டாலும் உறுதிபடுகிறது. இந்தக் கல்வெட்டு முற்றிலுமாக அழிக்கப்பெற்று பகுதி மட்டுமே படிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு இண்டியன் ஆண்டிகுவரியின் ஒன்பதாந்தொகுதியில் திரு ஜே.எஃப். ஃப்ளீட் அவர்களால் முதலில் பதிப்பிக்கப் பெற்றது. பிறகு திருத்திய வடிவம் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி பதினொன்றில் முதலாம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றது.
வரி 1: | वत्सरे आत्मनो राज्यवर्षे च त्र(योदशे) |
வரி 2: | ………………सिंहेन महामल्लेन विद्विषाम् वातापिरतिमा(नेन)……………… |
வரி 3: | भारद्वाज(मलंक)रिष्णुरतुलं गोत्रं गुणैरात्मनो………………………. |
வரி 4: | ……………(त)यः क्षितिभुजामग्रेसरः पल्ल………………….. |
வரி 5: | ……………शिंहविष्णुर(धि)पः स्तम्भ़ञ्जय(श्री)………….. |
வரி 6: | ………… (मण्ड)पैर्ब्बहुमते प्रख्यात(खण्डोपले)………. |
வரி 7: | …………………स्ति शकवर्षे ष(ष्ट्य)………….. |
வரி 8: | …………………शमे………………………………….. |
வரி 9: | ………………………… |
வத்ஸரே ஆத்மனோ ராஜ்யவர்ஷே ச த்ர(யோத³ஸே²) ………………ஸிம்ʼஹேன மஹாமல்லேன வித்³விஷாம் வாதாபிரதிமா(நேன)……………… பா⁴ரத்³வாஜ(மலங்க)ரிஷ்ணுரதுலம்ʼ கோ³த்ரம்ʼ கு³ணைராத்மனோ…………………………………….(த)ய: க்ஷிதிபு⁴ஜாமக்³ரேஸர: பல்ல………………………………..ஸி²ம்ʼஹவிஷ்ணுர(தி⁴)ப: ஸ்தம்ப⁴·ஞ்ஜய(ஸ்ரீ)…………………….. (மண்ட³)பைர்ப்³ப³ஹுமதே ப்ரக்²யாத(க²ண்டோ³பலே)………………………….ஸ்தி ஸ²கவர்ஷே ஷ(ஷ்ட்ய)……………………………..ஸ²மே……………………………………………………………..
பொருள்
தன்னுடைய ஆட்சியாண்டான பதிமூன்றில் மஹாமல்லனான (நர)ஸிம்ஹனால் பெருஞ்சினத்தோடு எதிரிகளின் வாதாபி……………. இணையற்ற பாரத்வாஜ கோத்ரத்தைத் தன்னுடைய நற்குணங்களால் அலங்கரிக்கும்…………….. மன்னர்களின் முதல்வனான பல்லவன்…. (நர?)ஸிம்ஹவிஷ்ணுவான தலைவன் வெற்றி ஸ்தம்பத்தை……….. மதிப்புடைய மண்டபங்களோடு சிறப்பான கற்களோடு…… சகவருடம் அறுபது…………………….
மேற்கண்ட கல்வெட்டின் மூலம் முதலாம் நரஸிம்ஹ பல்லவன் எதிரிகளின கோநகரான வாதாபியைப் பெருஞ்சினத்தோடு கைப்பற்றி வெற்றித்தூணை நட்டமை தெளிவாகிறது. இதில் என் மனத்தை அரிக்கும் ஒரே செய்தி இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள சக வர்ஷமாகும். இதில் அறுபது என்னும் பகுதி மட்டுமே படிக்கப்பெறுமாறு அமைந்துள்ளது. இது ஐநூற்றறுபதாகத்தான் இருக்கவேண்டும் என்பது கண்கூடு. ஐநூற்றறுபது என்பதைக் கொண்டு இந்தக் கல்வெட்டின் மிகக் குறைந்த காலம் பொயு 638 என்பது தெளிவாகிறது. ஆனால் ஆய்வாளர்கள் இந்தக் கல்வெட்டின் காலம் 642-43 என்றும் இதனைக் கொண்டு முதலாம் நரஸிம்ஹனின் ஆட்சித் துவக்கம் பொயு 630 என்றும் தீர்மானித்திருக்கின்றனர். கல்வெட்டிலோ அறுபது என்னும் சொல்லே படிக்கும்படி அமைந்துள்ளது. ஆகவே நம்மால் மூன்றாவது இலக்கத்தை உய்த்துணரவியலவில்லை. அது நான்கோ ஐந்தோ என்னவாக இருக்கும் என்பதை உய்த்துணரமுடியவில்லை. ஆகவே இதை இறுதிசெய்ய முடியாததால் ஹ்வான் ஸாங்கின் வருகையைக் கொண்டு ஆய்வாளர்கள் இறுதி செய்த 642-43 என்பதையே இதன் காலமாகத் தீர்மானிக்க முடிகிறது. காரணம் அவருடைய வருகையின் போது புலகேசி உயிரோடிருந்தான் என்பதே இதற்குக் காரணமாகிறது.
மிக்க வரலாற்றுப் பயன் வாய்ந்த இந்தக் கல்வெட்டு முழுவதும் கிடையாது போனது நமது தீயூழன்றி வேறென்ன.
superb. arumaiyana thagaval.
nandri urithaguga. nalam