பொதுவாக பெருமழை பொழிந்து ஏரிகள் நிரம்பிய பின்னர் மடையுடைந்து நீர்பெருகி வெள்ளமாகும். அத்தகைய ஏரிமடைகளை உடனே அடைத்தல் நலம். இப்படி அடைப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பாராது ஊரிலுள்ள ஊர்ப்பெருமகன்களே முன்னின்று அடைத்தால் விரைவிலும் நடக்கும். பயனும் அளிக்கும். அத்தகையதோர் நிகழ்ச்சி மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதிநாலாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்தேறியது. இது காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள ஸோமங்கலம் என்னுமூரில் நிகழ்ந்தது. அவ்வூரிலுள்ள ஸோமநாதேச்வரர் கோயிலிலுள்ள மண்டபத்தின் கீழைச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு ஆவணமாக அமைந்துள்ளது. இவ்வூரின் மறுபெயர் பஞ்சநதி வாண சதுர்வேதி மங்கலம் என்பதாம். இவ்வூரிலிருந்த திருச்சுரகண்ணப்பன் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் என்பான் இந்த அறச்செயலை மேற்கொண்டான்.
வரி 1. |
ஸ்வஸ்திஸ்ரீ. திருவாய்க்கேழ்வி முன்னாக த்ரிபுவனச்சக்ரவர்த்திகள் மதுரையிமீழமும் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௰௪ஆவது மகரநாயற்று பூர்வ்வபக்ஷத்து வியாழக்கிழமையும் பூசமும் ப்ரதமையுமான வன்று ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க்கோட்டமான குலோத்துங்கசோழவளநாட்டுக் குன்றத்தூர்நாட்டு சோமங்கலமான பஞ்சநதிவாணச்சதுர்வேதிமங்கலத்து ஏரி இத்தேவர்க்கு பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாக உடைந்த இது திருச்சுரக்கண்ணப்பந் திருவேகம்பமுடை |
வரி 2 |
யான் காமன் கண்டவானவன் இம்மடை ஏழும் அடைப்பித்து பதின்மூன்றாவதும் ஏரி நிறைந்து இரண்டிடத்தில் உடைந்ததுவும் அடைப்பித்து இவ்வேரி பதிநாலாவது தைம்மாஸத்து திருச்சுரகண்ணப்பந் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் பக்கல் இவ்வூர் மஹாஸபையோம் பொலியூட்டாகக் கைக்கொண்ட பழங்காசு ௪௰ இப்பழங்காசு நாற்பதுக்கும் பலிசையால் பன்னிருபிடி பரப்புப்பட அளவில் குழிக்கோலால் நாற்பது குழி ஆண்டுகள்தோறும் கல்லிக் கரைசெய்யக்க |
வரி 3 |
………………….. கரைக்குப் புறவாலே கல்லிக்கரை செய்யக்கடவோமாகவும் இப்படி சந்த்ராதித்தவரை கல்லிக் கரை செய்யக்கடவோமாகவும் இப்படி ஸம்மதித்து இப்பழங்காசு நாற்பதும் பொலியூட்டாகக் கைக்கொண்டோம். இவ்வூர் மஹாஸபையோம் இதுக்கு அனுசிதம் நினைத்தார் க்ராமத்ரோஹிகளுமாய் க்ராமத்துக்கு அஹிதம் பண்ணநினைத்தார் புக்க நரகம் புகக்கடவர்களுமாகவும் ஹிமஸேது பரியந்தஞ்செய்தார் செய்த பாபப்படக்கடவராகவும் இப்படி ஸம்மதித்து சிலாலேகை…… |
மதுரையும் ஈழமும் கொண்ட குலோத்துங்கனின் பதிநாலாவது ஆட்சியாண்டில் தைமாதம் பூர்வபக்ஷ வியாழக்கிழமையும் பூச விண்மீனும் தலைப்பிறையும் கூடிய நாளில் அதாவது பொயு 1192 ஆமாண்டு ஜனவரி எட்டாம் தேதி திருவாய்க்கேள்வி என்னும் அதிகாரியின் முன்னாக இந்த ஆணை பிறப்பிக்கப்பெற்றது.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்தின் புலியூர்கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டில் உள்ள குன்றத்தூர் நாட்டில் விளங்கும் சோமங்கலம் என்னும் பெயர்படைத்த பஞ்சநதிவாணச் சதுர்வேதிமங்கலத்தில் உள்ள ஏரி குலோத்துங்கனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் பெருமழை பொழிந்து ஏழுமடைகளும் ஒரே நாளில் உடைந்தன. திருச்சுரகண்ணப்பன் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் என்பவன் அவற்றை அடைத்தான். பிறகும் பதிமூன்றாம் ஆட்சியாண்டிலும் இரு மடைகளும் அடைத்தான். அதன் பிறகு பதிநாலாம் ஆட்சியாண்டில் ஏரி நிலைநின்ற பிறகு மடைகளை அடைக்கவும் கரைகளை திடமாக்கவும் நாற்பது பழங்காசுகளை அவ்வூர் ஸபைக்கு அளித்தான். அதன் வட்டியைக் கொண்டு பன்னிருபிடி அளவிற்கு குழிக்கோலால் நாற்பது குழி அளவிற்கு ஆண்டுதோறும் வெட்டி கரைசெய்ய சந்த்ராதித்யவரை ஸம்மதித்தனர் ஸபையினர். இதற்குக் கெடுதல் நினைவோர் க்ராமத்ரோஹிகள் எனவும் வைத்தனர்.
இவ்விதம் ஊரிலுள்ள செல்வந்தர் முன்வந்து வெள்ளநிவாரணப்பணிகளை மேற்கொண்டால் ஏன் துயரம் ஏற்படப்போகிறது. யாராவது முன்வருவார்களா….