பாரதநாட்டில் புலித்தோல் மற்றும் மான்தோலைத்தவிர மற்றைய தோல்கள் புனிதமற்றவை என்று கருதப்பெற்றதால் எகிப்து போன்ற தேசங்களைப் போன்று அவற்றின் பயன்பாடு நம் நாட்டில் இன்றி மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.
கரும்பலகையைப் போல வரைபடங்களுக்கும் நகல் எழுதுதற்கும் தோல் பயன்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழிப்புலவரும் வாஸவதத்தம் என்னும் உரைநடைக் காப்பிய நூலை யாத்தவருமான ஸுபந்து என்பார் எழுதும் முறையில் தோலின் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார்.
विश्वं गणयतो धातुः शशिखठिनीखण्डेन तमोमषीयामे अजिन इव वियति संसारस्य अतिशून्यत्वात् शून्य बिन्दव इव विलिखिताः तारा व्यराजन्त।
உலகைப் படைத்த நான்முகன் ஆகாயமாகிய தோலில் இருளான மையைத் தடவி சந்திரனாகிய சுண்ணக்கட்டியைக் கொண்டு உலகமே சூன்யம் என்பதைக் குறிக்க எழுதிய பூஜ்யங்களைப் போல விண்மீன்கள் மிளிர்ந்தன என்பது இதன் பொருள்.
ஈண்டு ஆகாயமாகிய தோலில் எழுதிய என்ற உவமானம் தோலில் எழுதுவதைக் குறிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தேவீபுராணமும் ஓலைச்சுவடியை தோலில் சுருட்டி வைக்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறது. (चर्मणा सम्पुटीकृते)
புனித பீட்டர்ஸ்பர்க் கஷ்கர் என்னுமிடத்திலிருந்து தொகுத்த சுவடிகளில் தோலில் இந்திய எழுத்துக்களால் எழுதப்பெற்ற சில சுவடிப்பாகங்களும் உள்ளன. ராஜஸ்தானிலுள்ள ஜெய்ஸால்மீரில் உள்ள ப்ருஹஜ்ஜ்ஞானகோசம் என்னும் சுவடியகத்தில் தோலிலான சில சுவடிகள் உள்ளன.
ஸ்ரீ எஸ்.கே.சாட்டர்ஜி அவர்கள் புஸ்தம், புஸ்தகம், புஸ்திகா என்னும் நூல்களைக் குறிக்கும் வடமொழிப்பெயர்கள் தோலைக் குறிக்கும் வடமொழிச்சொற்களே என்று கருதுகிறார். அவர் கூறியது சரியானால் நமது நாட்டில் மிகப்பழங்காலந்தொட்டே தோலிலான சுவடிகள் இருப்பதை அறியமுடியும்.
இவ்விதம் நமது நாட்டில் சுவடிகளை எழுதத் தோல் பயன்பட்ட செய்தி கிடைக்கிறது.