இதுவரை சுவடித்துறையில் தோலின் பயன்பாட்டைக் கண்டோம். இப்போது செங்கல், தந்தம் மற்றும் சங்கின் பயன்பாட்டைக் காண்போம்.
செங்கல்
சாஸனங்களோடான செங்கல்கள் உத்தர ப்ரதேசமாநிலத்திலிருந்தே பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவை மதுராவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. கோரக்புர் மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் கிடைத்த பொயு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கற்களில் புத்த மத ஸூத்ரங்கள் எழுதப்பெற்றுள்ளன.
காஸிபுர் மாவட்டத்திலுள்ள பிதாரியில் கிடைத்த செங்கலொன்றில் “ஸ்ரீகுமாரகுப்தஸ்ய” என்று எழுதப்பெற்றுள்ளது.
தேஹ்ராதுனிலிருந்து சீலவர்மன் என்னும் அரசனின் அச்வமேத செங்கற்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பின்வரும் சாஸனம் எழுதப்பெற்றுள்ளது.
युगेश्वरस्याश्वमेधे युगशैलमहीपतेः।
इष्टका वार्षगण्यस्य नृपतेश्शीलवर्म्मणः।।
இவை யுகசைலன் யுகேச்வரன் என்னும் பட்டங்களைப் பெற்றவனும் வ்ருஷகண கோத்ரத்தைச் சேர்ந்தவனுமான சீலவர்மன் என்னும் அரசனின் பரிவேள்விக்கான செங்கற்களாம்.
இந்தச் சாஸனம் பொயு 326-ஐச் சேர்ந்ததாக கணக்கிடப்பெற்றுள்ளது.
தந்தம்
தந்தமும் தாள்களைப் போல இழைக்கப்பெற்று எழுதப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஒரே ஒரு எடுத்துக்காட்டாக புவனேச்வரிலுள்ள ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் கீதகோவிந்தத்தின் சுவடியொன்று காணக்கிடைக்கிறது.
சங்கு
ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளத்தில் மந்த்ரங்கள் எழுதப்பெற்ற சங்குகள் கிடைத்துள்ளன.