இந்தக் கல்வெட்டு திருவள்ளூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள சிவன்வாசல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வைகுண்டநாதருக்கான ஒரு பழைய கோயிலில் படிக்கட்டாக இருந்த கல்லிலிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது.
இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் மிகப்பழைய க்ரந்த லிபியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் திரு. என்.வெங்கட ரமணையா என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. அவர் இதை ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதினார். இந்தக் கல்வெட்டு பல்லவகுலத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மனை வர்ணிக்கிறது. அவன் தசாச்வமேதம் மற்றும் பஹுஸுவர்ண்ணம் ஆகிய வேள்விகளைப் புரிந்தவன் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டைப் பதிப்பித்தவர் இதனை ஏழாம் நூற்றாண்டினதாகக் கருதியதால் இது பல்லவகுலத்தின் கிளை வம்சத்தைச் சேர்ந்த மன்னவனுடையதாகக் கருதினார். ஆனால் பின்னர் அறிஞர்கள் இதனை மீளாய்வு செய்து இதனை ஆறாம் நூற்றாண்டின் மூன்றாம் காற்பகுதியாகக் குறித்தனர். ஆகவே இதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் அரசன் ஸிம்ஹவிஷ்ணுவின் தந்தையான மூன்றாம் ஸிம்ஹவர்மனாக வேண்டும் எனவும் கருதுகின்றனர். பிற்கால பல்லவர்களைப் பொறுத்தவரை இதுவரை கிடைத்த செப்பேடுகளில் மூன்றாம் ஸிம்ஹவர்மனின் பள்ளங்கோயில் செப்பேடே மிகப்பழமையானதொன்றாகும். இது க்ரந்த லிபியிலும் வடமொழியிலும் அமைந்தது. ஆனால் இந்தச் செப்பேட்டின் எழுத்தமைதி பிற்காலத்தியதென்பதால் இது பிற்காலத்திய படியாக வேண்டுமென்பது அறிஞர் கருத்து. எது எப்படியாயினும் மூன்றாம்ஸிம்ஹவர்மனின் காலத்தில் க்ரந்த லிபி புழங்கியிருக்க வேண்டும், அதைத்தான் பிற்காலத்தில் படியெடுத்திருப்பர் என்று கருதுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இப்போது குறிப்பிடப்பெறும் கல்வெட்டு மூன்றாம் ஸிம்ஹவர்மனின் ஸமகாலத்தைச் சேர்ந்தது. ஆகவே இதுதான் தமிழகத்தில் கிடைத்த க்ரந்த லிபியிலான கல்வெட்டில் முதன் முதலானதாகக் கொள்ளலாம். இந்தக் கல்வெட்டில் தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லையாயினும் இதுதான் க்ரந்த லிபியில் முதல் கல்வெட்டு என்பதனால் இது இன்றியமையாததாகிறது. இதுவரை மஹேந்த்ர பல்லவன்தான் க்ரந்த லிபியின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் இந்தக் கல்வெட்டு இந்த எண்ணத்தை மாற்றத் தூண்டுகிறது.
வரிகள்
முதல் பக்கம்
வரி 1 | ताशेषप्रजाविपल्लवाना |
வரி 2 | म् पल्लवानामन्वये विष्व |
வரி 3 | क्सेन इव वृष्णीनाम |
வரி 4 | नुमानुग्रहमतिशय….. |
இரண்டாம் பக்கம்
வரி 1 | विजयस्यायमेव महासैन्य |
வரி 2 | द्विपो दशाश्वमेधबहुसुवर्ण्ण |
வரி 3 | क्रतुयाजि देवः श्रीसिंह |
வரி 4 | वर्म्मा प्रताप इव मूर्त्तिमान् |
வரி 5 | …………………………………. |
வரி 6 | …………………….वनमण्ड |
மூன்றாம் பக்கம்
வரி 1 | सुप्रणीतदण्डेन |
வரி 2 | पुनरिदं द्विजन्मसु वि… |
வரி 3 | …..सर्वस्वप्रतिपि |
வரி 4 | …………ली……. |
ताशेषप्रजाविपल्लवानाम् पल्लवानामन्वये विष्वक्सेन इव वृष्णीनामनुमानुग्रहमतिशय….. विजयस्यायमेव महासैन्यद्विपो दशाश्वमेधबहुसुवर्ण्णक्रतुयाजि देवः श्रीसिंहवर्म्मा प्रताप इव मूर्त्तिमान् ……………………………………वनमण्ड सुप्रणीतदण्डेन पुनरिदं द्विजन्मसु वि… …..सर्वस्वप्रतिपि …………ली…….
மக்களின் அனைத்துத் துயர்களையும் நீக்கும் பல்லவர்களின் குலத்தில் வ்ருஷ்ணி குலத்தில் விஷ்வக்ஸேனரைப் போல சிறந்த அருளை…… வெற்றிக்கு பெரும்படைக்கு யானையைப் போன்றவனும் தசாச்வமேதம், பஹுஸுவர்ண்ணம் ஆகிய வேள்விகளைப் புரிந்தவனும் வலிமையே வடிவெடுத்தவனைப் போன்றவனுமாகிய ஸ்ரீஸிம்ஹவர்ம தேவன் பிறந்தான்….. மிகச்சிறந்த முறையில் தண்டனை வழங்கிக் காக்கும் அவனால் அந்தணர்களுக்காக இது மீண்டும்………… எல்லாவற்றையும் வழங்க முன்வரும்…………………..
இந்தக் கல்வெட்டு முடிவுபெறாமலும் சிதைந்தும் இருந்தாலும் கூட இது தமிழகக் கல்வெட்டுக்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
விபல்லவானாம் என்பதை “விபத் லவானாம்” என்று பதம் பிரிக்கவேண்டுமா? எங்கோ படித்த நினைவு. இங்கே சொல்விளையாடல் “விபல்லவானாம் பல்லவானாம்” பற்றி ஓரிரு வார்த்தை தாருங்கள்