நமது பாரதநாட்டில் ஆண்களைப் போல பெண்பாற்புலவர்களும் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். சங்கத்தமிழ் கொஞ்சிய தங்கக் காலத்திலும் காமக்கண்ணியார், வெள்ளிவீதியார் போன்ற பல பெண்பாற்புலவர்களைக் காணமுடியும். பிற்காலத்திலும் அவ்வையார், ஆண்டாள் போன்ற கவிஞர்களும் தமிழன்னைக்குப் பாமுடி சூட்டினர். இன்றளவும் இத்தகைய பெண்பாற்புலவர்களின் கொடி பட்டொளி வீசத்தான் செய்கிறது.
அதைப்போலவே வடமொழியிலும் பண்டைக்காலந்தொட்டே பல பெண்பாற் கவிஞர்களும் ரிஷிகளும் இருந்தனர். அத்தகைய பெண் ரிஷிகளை ரிஷிகா என்று குறிப்பிடுவர். வேதங்களில் இருபத்தேழு ரிஷிகாக்களைப் பற்றிய குறிப்புள்ளது. விச்வவாரா, கோஷா, அபாலா, லோபாமுத்ரா, ரோமசா, இந்த்ராணீ, சரவதீ, ஸூர்யா, யமீ, ஊர்வசீ, வாக் ஆகியோர் முக்யமானவர்கள். கார்க்கி மைத்ரேயி என்னும் இரு பெண்ரிஷிகளின் கேள்வியும் அவற்றுக்கான பதிலும் வேதாந்தத்திற்கே இன்றியமையாததாகத் திகழ்கின்றன.
அதன்பிறகான இதிஹாஸபுராணங்களிலும் பல பெண்களும் பெரும் அறிஞர்களாகத் திகழ்ந்தனர். தாழ்குலம் என்று கருதப்பெறும் அருந்ததி அறிவில் ஈடுயிணையற்றுத் திகழ்ந்தாள். ஸீதையன்னையோ ஸந்த்யாவந்தனம் போன்ற வேத கர்மாக்களைச் செய்து வந்ததை வால்மீகி ராமாயணத்தின் மூலம் அறியமுடிகிறது.
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர்கள் மண்டனமிச்ரரோடு வாது புரிந்த போது இருவருக்கும் இடையே நடுவராக வீற்றிருந்தது உபயபாரதி என்னும் பெண்ணே என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அதனைப் போலவே வடமொழிக்காப்பியங்களிலும் பெண்பாற் புலவர்களின் கொடை அளப்பரியது. ஆயினும் அத்தகைய பெண்பாற் புலவர்களில் பலர் இயற்றிய சில செய்யுட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில புலவர்கள் இயற்றிய காப்பியங்களே முழுமையாக்க் கிடைத்துள்ளன. வடமொழியில் காப்பியங்களிலுள்ள நீதிச்செய்யுட்களைத் திரட்டிய பல நூல்கள் வந்துள்ளன. அத்தகைய நூல்களில் இத்தகைய பெண்பாற்புலவர்களின் பெயர்களும் அவர்தம் ஒன்றிரண்டு செய்யுட்களும் கிடைத்துள்ளன. அவர்களைப் பற்றிய மற்றைய தகவல்கள் அதிகமாகக் கிடைக்காவிடினும் அவர்தம் பெயரும் சிற்சிலரின் வாழிடமும் கிடைத்துள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பெறும் பெண்பாற்கவிஞர்கள்
வ.எண் | பெயர் | வ.எண் | பெயர் |
1 | பாவதேவீ | 2 | சாண்டால வித்யா |
3 | சந்த்ரகாந்தா பிக்ஷுணீ | 4 | சின்னம்மா |
5 | கந்ததீபிகா | 6 | கௌரீ |
7 | இந்துலேகா | 8 | ஜகனசபலா |
9 | கேரளீ | 10 | குடலா |
11 | லக்ஷ்மீ | 12 | லகிமா தேவீ |
13 | மதாலஸா | 14 | மதுரவாணீ |
15 | மதிரேக்ஷணா | 16 | மாருலா |
17 | மோரிகா | 18 | நாகம்மா |
19 | பத்மாவதீ | 20 | பல்கு ஹஸ்தினீ |
21 | ரஸவதீ ப்ரியம்வதா | 22 | ஸரஸ்வதீ |
23 | சீலா பட்டாரிகா | 24 | ஸீதா |
25 | ஸுபத்ரா | 26 | த்ரிபுவன ஸரஸ்வதீ |
27 | வித்யாவதீ | 28 | விஜ்ஜா – விஜ்ஜிகா |
29 | விகடநிதம்பா | 30 | ப்ரபுதேவீ |
31 | வைஜயந்தீ | 32 | விஜயாங்கா |
33 | காமலீலா | 34 | கனகவல்லீ |
35 | லலிதாங்கீ | 36 | மதுராங்கீ |
37 | ஸுநந்தா | 38 | விமலாங்கீ |
39 | தேவ குமாரிகா | 40 | கங்கா தேவீ |
41 | லக்ஷ்மீ ராஜ்ஞீ | 42 | மதுரவாணீ |
43 | ராமபத்ரா | 44 | திருமலாம்பா |
45 | ஸுந்தர வல்லீ | 46 | பாலாம்பிகா |
47 | ஹனுமாம்பா | 48 | ஜ்ஞான ஸுந்தரீ |
49 | ராதாப்ரியா | 50 | த்ரிவேணீ |
51 | அனஸூயா | 52 | வாமாக்ஷீ |
53 | ஸ்ரீதேவீ |
ஆகியோராவர். இவர்களுள் சிலரைப் பற்றிய குறிப்புக்களும் கிடைக்கின்றன.
தொகுப்பு நூல்களுள் சார்ங்கதர பத்ததி பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆகவே அதில் குறிப்பிடப் பெற்றிருப்பவர்கள் அதற்கு முற்பட்டவர்கள். ஸதுக்தி கர்ணாம்ருதம் பதிமூன்றாம் நூற்றாண்டையும் வல்லப தேவர் பதினைந்தாம் நூற்றாண்டையும் சேர்ந்தவர்கள். ஸூக்தி முக்தாவளி பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
- விஜ்ஜிகா
மிக்கப் புகழ் பெற்ற இவர் சாளுக்ய மன்னர் இரண்டாம் புலகேசியின் மருமகளாவார். அவர் மகன் சந்த்ராதித்யனின் மனைவியான இவர் ஐந்து வருடங்கள் வரை சாளுக்யப் பேரரசைக் கோலோச்சியவர். இவரைப் பற்றிய பதிவை ஏற்கனவே பதித்திருந்தேன். இவருக்கும் பல்லவர்களின் தண்டிக்கும் இடையேயான கவிதைப் போர் மிகவும் சுவையானது. அரசியின் செருக்கும் கவிஞரின் பெருமையும் இயைந்த இந்தப் பெண்மணியின் கூற்றில் அவையிரண்டும் செறிந்திருக்கும். இவரைப் போற்றிய கவிஞர்கள்
ஸரஸ்வதீவ கார்ணாடீ விஜயாங்கா ஜயத்யஸௌ|
யா வித³ர்ப⁴கி³ராம்ʼ வாஸ: காலிதா³ஸாத³னந்தரம்||
கர்ணாடகத்தைச் சேர்ந்த விஜயா என்னுமிந்தக் கவிஞர் வெல்கிறார். இவர் காளிதாஸனுக்குப் பிறகு விதர்ப ரீதியின் வாழிடமாகத் திகழ்கிறார் என்று புகழ்ந்தனர்.
- த்ரிபுவன ஸரஸ்வதீ
இந்தப் புலவர் ராஜசேகரர் என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு கவிஞர் இயற்றிய கர்ப்பூர மஞ்ஜரி என்னும் நாடகத்தில் குறிப்பிடப்பெற்றவர். ஆகவே அதற்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது. இவரியற்றிய ஒரு செய்யுள் கிடைத்துள்ளது.
பாதும்ʼ த்ரிலோகீம்ʼ ஹரிரம்பு³ராஸௌ²
ப்ரமத்²யமானே கமலாம்ʼ ஸமீக்ஷ்ய|
அஜ்ஞாதஹஸ்தச்யுதபோ⁴கி³னேத்ர:
குர்வன் வ்ருʼதா² பா³ஹுக³தாக³தானி||
மூவுலகையும் காப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்போது அதில் தோன்றிய திருமகளைக் கண்டு அவள் அழகில் மயங்கிய திருமால் தன் கையில் கயிறு இருப்பது போல பாவித்துக் கொண்டு வெறும் கைகளைக் கடைவதைப் போல முன்னும் பின்னும் இழுத்தாராம்.
இப்படி ஒரு செய்யுள் இந்தப் புலவரால் இயற்றப்பெற்றதாகக் கிடைத்துள்ளது.
- ரஸவதீ ப்ரியம் வதா
இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். இவளால் ச்யாமா ரஹஸ்யம் என்னும் பக்திச்சுவைகொண்ட நூல் இயற்றப்பெற்றது. இவருடைய காலம் சரியாகத் தெரியவில்லை. ஆண்டாளைப் போன்று கண்ணனின் அழகில் ஈடுபட்டு அவனை வர்ணித்தப் புலவர் இவர்.
- கேரளீ
இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் கலைமகளைப் பற்றிய இயற்றிய ச்லோகங்களில் ஒன்று வேணீதத்தர் என்பார் தொகுத்த நல்லுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
யஸ்யா: ஸ்வரூபமகி²லம்ʼ ஜ்ஞாதும்ʼ ப்³ரஹ்மாத³யோபி ந ஹி ஸ²க்தா:|
காமக³வீ ஸுகவீனாம்ʼ ஸா ஜயதி ஸரஸ்வதீ தே³வீ||
எந்தத் தேவியின் வடிவம் முழுவதையும் அறிந்து கொள்ள நான்முகன் முதலியோர் கூட திறனற்றவர்களோ, அத்தகைய கவிஞர்களுக்குக் காமதேனுவான கலைமகள் வெல்கிறாள் என்பது இதன் பொருள்.
- வித்யாவதீ
இவர் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர். இவர் மதுரையின் அன்னை மீனாக்ஷியைப் பற்றி ஒரு ஸ்தோத்ரம் இயற்றியிருக்கிறார்.
- சின்னம்மா
இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர். சார்ங்கதரபத்ததி என்னும் நீதிநூற்றிரட்டில் இவருடைய செய்யுள் இடம்பெற்றுள்ளது.
கல்பாந்தே ஸ²மிதத்ரிவிக்ரமமஹாகங்காலத³ண்ட³:
ஸ்பு²ரச்சே²ஷஸ்யூதன்ருʼஸிம்ʼஹபாணினக²ரப்ரேதாதி³கோலாமிஷ:|
விஸ்²வைகார்ணவதானிதாந்தமுதி³தௌ தௌ மத்ஸ்யகூர்மாவுபௌ⁴
கர்ஷன் தீ⁴வரதாம்ʼ க³தோஸ்யது மஹாமோஹம்ʼ மஹாபை⁴ரவ:||
மஹாபைரவர் வெல்கிறார். அவர் ஊழிக்காலத்தின் முடிவில் ஓங்கி உலகளந்தபிரானின் கங்காளத்தை – எலும்புக்கூட்டை அடக்கியவர். ஆதிசேஷனாலான கயிற்றால் நரஸிம்ஹரின் நகங்களையும் வராஹரின் மாம்ஸத்தையும் அடக்கியவர். உலகெல்லாம் நீரில் மூழ்கியபோது தோன்றிய மச்ச கூர்மங்களை இழுக்கும் செம்படவரைப் போன்றவர்.
இத்தகைய பைரவ ஸ்தோத்ரம் இவரால் இயற்றப்பெற்றிருக்கிறது. இவருடைய காலம் பத்தாம் நூற்றாண்டையொட்டி அமைந்திருக்கலாம்.
- சந்த்ரகாந்தா பிக்ஷுணீ
இவர் ஒரு பௌத்தத் துறவி. இவர் இயற்றிய அவலோகிதேச்வர ஸ்தோத்ரம் என்னும் நூல் கிடைத்துள்ளது. இதில் அவர் அவலோகிதேச்வரின் அழகு முதலியவற்றை எழிலுற வர்ணித்துள்ளார்.
- இந்துலேகா
இவருடைய ஒரு செய்யுள் வல்லபதேவர் என்பார் தொகுத்த நூலில் இடம்பெற்றுள்ளது. அந்தச் செய்யுளில் மாலையில் கதிரவன் மறைந்த பின்னர் நெருப்பிடம் அவருடைய வெம்மையை விட்டுச் செல்கிறான் என்று கூறுகிறார்களே தோழி, அதுவல்ல அவன் பிரிவாற்றாத காதலியின் இதயத்திலல்லவா வெம்மையை விடுகிறான் என்று பிரிவாற்றாத தலைவி கூறுவதைப் போல அமைந்துள்ளது.
- சாண்டால வித்யா
இவர் விக்ரமாதித்யனின் அவையில் இருந்ததாகச் செவிவழிச் செய்தியுண்டு. இவர் இயற்றிய செய்யுட்களில் ஒன்று ஸதுக்தி கர்ணாம்ருதம் என்னும் நூலில் தொகுக்கப்பெற்றுள்ளது.
இரவை வர்ணிக்கும் அந்தச் செய்யுளில் நாள் முடியும்போது உலகமே பாற்கடலில் ஓய்வெடுக்க விழுவதாகவும் அதனால் எழுந்த நுரைகளே விண்மீன்களாகத் திகழ்வதாகவும் அந்தப் பாலை எடுத்து நிலவு பொழிவதாகவும் அதை அருந்த அல்லி மலர்கள் தலையுயர்த்திக் காத்திருப்பதாகவும் எழிலுற வர்ணிக்கிறார் இவர்.
- பல்கு ஹஸ்தினீ
இவர் எழுதிய ஒரு செய்யுள் சார்ங்கதர பத்ததியில் இடம்பெற்றுள்ளது. அந்தச் செய்யுளில் நிலவை வர்ணிக்கும் இவர் இது மூவுலகாகிய கொடியில் பூத்த மலரா இல்லை இரவுப்பெண்ணின் முகமா அல்லது கோள்களாகிய மரத்தின் துளிரா, மாலைப்பெண்ணின் கீழ்த்தட்டில் காதலன் கிள்ளிய வடுவா, இருளைக் கிழிக்கும் வானின் கொம்பா காமனின் வில்லா இந்த இளம்பிறை வடிவம் என்று வர்ணிக்கிறார்.
- மதிரேக்ஷணா
இவருடைய செய்யுளொன்று ஸுபாஷித ஸார ஸமுச்சயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்யுள் காதலர்கள் கூடிய பின்னர் திரிவதை வண்டையும் தாமரை மலரையும் வைத்து உருவகமாக வர்ணிக்கிறார்.
- மோரிகா
இவருடைய பல செய்யுட்கள் சார்ங்கதர பத்ததி போன்ற திரட்டு நூல்களில் காணப்பெறுகின்றன. ஒரு செய்யுளில் வ்யாபார நிமித்தம் நாடுவிட்டுச் செல்லும் தலைவனின் மனநிலையை வர்ணிக்கிறார். நான் சென்று வருகிறேன் என்று கூற முற்படும் தலைவன் நான் என்று கூறியவுடனேயே தலைவியின் கண்களில் நீர் முட்டி நிற்கிறதே. பிறகெப்படி மீதியைக் கூறுவான். அதைக் கண்டபின்னரும் செல்வத்தைத் தேட ஆசை ஒழியவில்லையே என்று பொருமுவதாக அமைத்துள்ளார்.
- மாருலா
இவரின் இரு செய்யுட்கள் ஸூக்திமுக்தாவளியிலும் சார்ங்கதர பத்ததியிலும் காணப்பெறுகின்றன. ஒரு செய்யுள் பெற்றோருக்கு முன்னர் தலைவனிடம் தனது விரஹத்தைக் கூறவியலாத தலைவியின் நிலையை வர்ணிக்கிறார். தோழி தலைவியைப் பார்த்து, கண்களைவிட்டு நீங்கிய கண்ணீரைத் தடுக்க வல்லாய், ஆனால் இரவெல்லாம் நீ அழுத கண்ணீரால் நனைந்த உன்னுடைய படுக்கை இப்போது வெயிலில் காய்கிறதே, அதோ உன் நிலையைக் கூறாதா என்று கேட்பதாக அமைத்துள்ளார்.
இரண்டாம் செய்யுள் வேறிடம் சென்று வீடுதிரும்பிய தலைவனிடம் தலைவி தன்னுடைய வேதனையைச் சொல்வதை வர்ணிக்கிறார். இளைத்துவிட்டீர்களே – கேள்வி, என்னுடலே அப்படித்தானே – பதில். கருத்து விட்டீர்களே – சமையல் வேலைக்கல்லவா சென்றிருந்தேன். என்னை நினைத்துப் பார்த்தாயா இல்லை இல்லை இல்லவே இல்லை அல்லவா என்று மார்பில் வீழ்ந்து அழுகிறாள் என்று தலைவன் கூறுவதைப் போல அமைத்திருக்கிறார்.
- பாவக தேவீ
இவருடைய பல செய்யுட்கள் ஸதுக்தி கர்ணாம்ருதம் போன்ற பல திரட்டு நூல்களில் காணப்பெறுகின்றன. காதலித்த இருவர் மணந்த பின்னர் சில காலம் கழித்து காதற்காலத்தைப் போல இப்போது இருவருக்கும் நெருக்கமில்லையே என்று புலம்புவதைப் போல இந்தச் செய்யுளை அமைத்திருக்கிறார். முதலில் இருவரின் உடலும் ஒன்றாகத்தான் இருந்தன. பிறகு நீ காதலன் நான் காதலி என்று தோன்றியது. இப்போது நீ கணவன் நான் மனைவி என்று தோன்றுகிறதே, விரைவில் செல்லாத உயிரின் பலனல்லவா இது என்று தலைவி கேட்பதைப் போல அமைத்திருக்கிறார். காதலிக்கும் போதே உயிர் பிரிந்திருந்தால் இத்தகைய சிறு வேறுபாடும் தோன்றியிருக்காதல்லவா என்று கேட்கிறாள் தலைவி
- பத்மாவதீ
இவருடையவும் பல செய்யுட்கள் தொகுப்பு நூல்களில் காணப்பெறுகின்றன. இவர் குர்ஜர தேசத்தின் பெண்களின் வனப்பையும் இயற்கையையும் வர்ணித்துள்ளார். ஆகவே அந்தத் தேசத்தைச் சேர்ந்தவராதல் கூடும். குர்ஜர தேசத்துப் பெண்களின் தோளாகிய கொடிகள் காதற்கடலில் தோன்றிய கற்பகக் கொடிகளா இல்லை தாமரைத்தண்டுகளா இல்லை கொங்கைகளாகிய மலையிற் பிறந்த சந்தனக்கொடிகளா இல்லை காமனின் பாசங்களா இல்லை அழகமுதக் கடலின் பவளக்கொடிகளா இல்லை என்னவென்று சொல்வேன் தோழா என்று தலைவன் வர்ணிப்பதைப் போல அமைத்துள்ளார் இவர்.
- கௌரீ
ஸூக்தி ஸுந்தரம், பத்யவேணீ முதலிய நூல்களில் இவருடைய செய்யுட்கள் காணப்பெறுகின்றன. ஒரு செய்யுளில் நீராடி எழும் பெண்ணை வர்ணிக்கும் முகமாக தாமரைக்கண்ணியான இவள் நீரில் ஆடி எழும்போது தன் அழகினால் அலைமகளை எழுந்து வருவதைப் போலிருக்கிறாளே என்று வர்ணிக்கிறார்.
- ஸரஸ்வதீ
இவரின் பல செய்யுட்கள் சார்ங்க தேவ பத்ததி போன்ற நூல்களில் தொகுக்கப் பெற்றுள்ளன. ஒரு செய்யுளில் தாழம்பூவை வர்ணிப்பதைப் போல பெரியோரின் குணத்தைக் கூறுகிறார். தாழம்பூவின் இலைகளில் முட்கள், தேனும் இருக்குமா தெரியவில்லை, மகரந்தத் தூள்கள் இருளையே உருவாக்குகின்றன. இத்தனை இருந்தும் வண்டு அதை நாடுகிறதே என்று கூறுகிறார்.
- ஸீதா
இவருடைய ஒரு செய்யுள் வாமனர், ராஜசேகரர் போன்ற பல அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பெற்றிருக்கின்றன. நிலவே, இங்கே ராஹு இல்லை, ரோஹிணியும் வானில் இருக்கிறாள், ஏன் அஞ்சுகிறாய், அது சரி, கூடலில் கைதேர்ந்த தலைவியிடத்தில் தலைவனின் மனம் நடுங்கத்தானே செய்யும் என்று கேட்பதைப் போல அந்தச் செய்யுள் அமைந்திருக்கிறது.
- லகிமாதேவி
இவர் பதினான்காம் நூற்றாண்டில் மிதிலையை ஆண்ட சிவஸிம்ஹனின் மனைவி. இவர் பெரும் புகழ் பெற்ற புலவர். இவருடைய பல செய்யுட்களை இன்றளவும் மிதிலையின் மக்கள் கூறுவர்.
இவருடைய ஒரு செய்யுளில் பன்னிரெண்டு ராசிகளையும் பெண்ணின் அங்கங்களை வர்ணிக்கப் பயன்படுத்தி, விருஷபத்தின் அறிவு கொண்ட மேஷம் மூன்றாமிடத்திற்குப் போகாதா என்று காலத்தைக் குறிப்பிட்டுத் தலைவன் விரைவிற் திரும்புவானோ என்று கேட்பதைப் போல அமைத்துள்ளார்.
- சீலா பட்டாரிகா
இவருடைய பல செய்யுட்கள் பல நூல்களிலும் எடுத்தாளப் பெற்றுள்ளன. ராஜசேகரர் முதற்கொண்டு பலரும் இவருடைய கருத்துக்களை மேற்கோளாகக் காட்டுகின்றனர். தலைவனிடம் தூது சென்ற தூதி அவனோடு கூட அதைச் சினத்தோடுச் சுட்டிக்காட்டும் தலைவியின் கூற்றாக பல செய்யுட்களை இவர் இயற்றியுள்ளார்.
- விகடநிதம்பா
பெருங்கவிஞரான இவர் ஒரு முட்டாளுக்கு மணமுடிக்கப்பெற்றார். தனது மணாளனைப் பற்றி இவர் எழுதிய கவிதைகள் நகை கலந்த கழிவிரக்கத்தை ஏற்படுத்தும்.
- கங்காதேவீ
ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் தோன்றிய இவர் விஜயநகரத்தின் இளவரசான கம்பண்ண உடையாரின் மனைவி. கம்பண்ண உடையார் தமிழகத்தை இசுலாமிய வேந்தர்களிடமிருந்து மீட்ட போது அவருடனேயே வந்து அவர் மதுரையை மீட்ட செய்தியை மதுரா விஜயம் என்னும் காப்பியமாக எழுதினார். பெருங்கவிஞர்களுக்கு இணையாக இவர் எழுதிய இந்தக் காப்பியம் இவருடைய கவித்திறனுக்கு பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
- திருமலாம்பா
விஜயநகர மன்னர் அச்யுதராயரின் மனைவியான இவரும் வரதாம்பிகா பரிணய சம்பூ என்னும் நூலை இயற்றியவர். இவர் அச்யுதராயரின் திருமணத்தை அழகுற இந்தக் காப்பியத்தில் வர்ணித்துள்ளார்.
இவர்களைத் தவிர பத்தொன்பதாம் நூற்றாண்டில் புணே நகரில் தோன்றி பல நாடகங்களையும் இயற்றியுள்ளார். முந்தைய நூற்றாண்டிலும் கூட ரமா சௌதரி, புஷ்பா தீக்ஷித் போன்ற பெண்பாற் புலவர்கள் வடமொழியில் பல நூல்களை இயற்றியுள்ளனர். சமீபத்திலும் கூட ராதாயனம் என்னும் ஒரு பெண்பாற் புலவர் இயற்றிய நூலொன்று கிடைக்கப் பெற்றேன்.
பெண்பாற் புலவர்கள் பொதுவாக ஸ்தோத்ரங்கள், இயற்கை, தலைவியின் மனநிலை, தலைவனின் மனநிலை என்று ஆண்கவிகள் எழுதிய முறையிலேயே கவிதைகளை இயற்றியுள்ளனர். ஆனால் பெண்களின் மனநிலையை வர்ணிக்கும் போது அவர்களின் சிறப்பு தனியாகத் தெரிகிறது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு கவிஞர்கள் சின்னம்மாவும் வித்யாவதியும் இடம் பெற்றுள்ளதும் சிறப்புத்தானே…