சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்கள் – துணி

     துணியும் பண்டைக்காலத்தில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பெற்றது. இது நீடிக்கும் பொருளில்லை என்பதால் நூல்களை எழுதுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பெறவில்லை. துணியின் மீது அரிசி அல்லது கோதுமையை அரைத்த மாவைத் தடவி காயவைத்து பின்னர் எழுதப்பயன்படுத்துவர். இத்தகைய துணிபொருட்கள் வடமொழியில் படம், படிகா, கார்பாஸ படம் என்னும் பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி இத்தகைய படங்களைக் குறிப்பிடுகிறது.

पटे वा ताम्रपटे वा स्वमुद्रोपचिह्नितम्।

      இத்தகைய துணியில் எழுதும் வழக்கம் மிகப்பழமையாக நாஸிக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. பாணரும் தமது ஹர்ஷசரிதத்தில் துணியில் எழுதுவதைக் குறிப்பிடுகிறார். பட்ட நாராயணர் எழுதிய வேணி ஸம்ஹாரத்திலும் போர்க்களத்திலிருந்து கர்ணன் தனது தலைப்பாகைத் துணியில் துரியனுக்குக் கடிதம் எழுதியதைக் குறிப்பிடுகிறார்.

     ஸ்ரீப்ரபாஸூரியின் தர்மவிதி 38 செமீ நீளமுள்ள துணியில் எழுதப்பெற்றதாக 1361 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கிடைத்துள்ளது. இது பதனிலுள்ள சாஸ்த்ர பண்டாரத்தில் பாதுகாக்கப் பெறுகிறது.

     மைசூரிலுள்ள கீழை ஆய்வகத்திலும் துணியிலான சுவடிகள் பாதுகாக்கப்பெறுகின்றன.

கடிதம்

     துணியின் மீது வறுத்த புளியங்கொட்டைப்பொடியையும் கரிப்பொடியையும் கலந்து நீரிற் குழைத்து அப்புவர். காய்ந்த பிறகு இவை கரும்பலகை போல இருக்கும். இதில் சுண்ணக்கட்டியைக் கொண்டு எழுதுவர். இத்தகைய துணிப்பொருளை கடிதம் அல்லது கடதம் என்று அழைப்பர். இத்தகைய பொருட்கள் கர்ணாடக மாநிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன. ச்ருங்கேரி சாரதா மடத்தில் இத்தகைய கடிதங்கள் பல கிடைத்துள்ளன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *