நம்முடைய பண்டைய நூல்களில் சிவலிங்கங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பெற்றுள்ளன.
उद्भूतं दैविकं चैव मानुषं गाणवं तथा ।
एवं चतुर्विधं लिङ्गं स्वयम्भुरिति कीर्तितम्।। (मानसारः)
உத்பூதம் – ஸ்வயம்பூ, தைவிகம், மானுஷம் மற்றும் காணவம் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இவற்றின் விளக்கமும் தரப்பெற்றுள்ளது.
तत्स्थाप्य स्वयमुद्भूतं स्वयम्भूरिति कीर्तितः १०२
देवैश्च स्थापितं लिङ्गं दैविकं लिङ्गमुच्यते
मानुषैः रचितं लिङ्गं मानुषं चेति कथ्यते १०३
अन्येषु रचितं लिङ्गं चार्षञ्चैव कथ्यते
गणैश्च पूजितं लिङ्गं गणं चेति प्रकथ्यते १०४
தானாகவே உருவானது ஸ்வயம்பூ எனப்பெறும். தேவர்களால் உருவாக்கப்பெற்றது தைவிகம் எனவும் மானிடர்களால் உருவாக்கப்பெற்றது மானுஷம் என்வது ரிஷிகளால் உருவாக்கப்பெற்ற ஆர்ஷம் எனவும் கணங்களால் பூஜிக்கப்பெற்றது காணவம் என்றும் பெயர் பெறும். காமிகாகமம் இவற்றோடு பாணலிங்கத்தையும் சேர்த்து ஆறு பிரிவாகத் தருகிறது. பாணலிங்கம் என்பது ஈசனாலேயே உருவாக்கப்பெற்ற லிங்கமாகும்.
शिवेन संस्कृतं यत्तु बाणलिङ्गमिति स्मृतम्
மானஸாரம் இவற்றின் நிறங்களையும் தருகிறது.
उद्भूतं श्वेतवर्णं चेद् दैविकं रक्तवर्णकम्
मानुषं पीतवर्णाभं कृष्णवर्णं च गाणवम् १०५
आर्षं युक्तसूत्रं स्यात् स्वस्तिकाकृतिरेव वा
ஸ்வயம்பு வெள்ளை வண்ணத்திலிருக்கும். தைவிகம் செவ்வண்ணத்தில் அமைந்திருக்கும். மானுஷம் மஞ்சள் வண்ணத்திலும் காணவம் கருமையாகவும் இருக்கும். ஆர்ஷ லிங்கம் ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு ஸ்வஸ்திக வடிவில் இருக்கும்.
தைவிக லிங்கத்தின் இலக்கணம் “दैविकं डिण्डिमाकारं” என்று தரப்பெற்றுள்ளது. அதாவது தைவிக லிங்கம் சிறுபறையைப் போன்ற உருவத்தைக் கொண்டிருக்கும்.
மேற்கண்ட இலக்கணத்தை மனத்திற்கொண்டு காஞ்சி ஐராவதேச்வரர் கோயிலிலுள்ள சக்ரதானமூர்த்தியிலுள்ள லிங்கத்தைக் காண்போம்.
இந்தச் சிற்பத்தொகுதியில் எண்கரங்களைக் கொண்ட திருமால் ஆழியைப் பெறுதற்வேண்டி லிங்கத்தைப் பூஜிக்கிறார். அந்த லிங்கம் நாகர பீடத்திற்கு மேலே வேசர அல்லது வட்டவடிமான லிங்கமாக அமைந்திருக்கிறது. பீடத்திற்கு மேலே லிங்கத்தில் ஒரு ஊர்த்வ க்ஷேபணகமும் அதன் மேலே மாலை, வர்த்துல சின்னங்களும் கொண்ட அலங்காரத்தைப் பெற்றுள்ளது. அதன் தலைப்பகுதி அண்ட வடிவாக – முட்டை வடிவாக அமைந்துள்ளது.
இந்த முழு லிங்கம் ஒரு சிறுபறை போல அமைந்துள்ளது. இவ்விதம் இது தைவிக லிங்கமாக அமைந்துள்ளது.