ராஜேந்த்ர சோழனின் ஹூப்ளே செப்பேடு

     இந்தச் செப்பேடு கர்ணாடக மாநிலத்திலுள்ள குளத்தூர் தாலூகா அலுவலகத்தில் கண்டெடுக்கப்பெற்றன. இது சோழ பரம்பரையின் ராஜேந்த்ர சோழனைக் குறிப்பிடுகின்றது. ஆனால் இதன் எழுத்தமைதி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அமைந்துள்ளது. ஆகவே இது ஐயப்பாட்டுக்குரியதாகக் கருதப்பெறுகிறது. ஆயினும் பண்டைய மூலச்செப்பேட்டின் பிற்கால படியாகக் கருதவும் இடமுண்டு.

     இந்தச் செப்பேட்டின் செப்பிதழ்கள் 4.75 அங்குல நீளமும் 1.5 அங்குல அகலமும் உடையவை. இவற்றின் இலச்சினையில் ஒரு யானையின் உருவம் அழிந்த நிலையிலுள்ளது. இந்தச் செப்பேட்டில் ஐந்து இதழ்கள் உள்ளன.      இவை நிகரிலி சோழமண்டலத்தில் கையவார நாட்டிலுள்ள குளத்தூரை சோழாண்டான் என்பானுக்குத் தானமளித்தச் செய்தியைக் குறிப்பிடுகின்றன.

     இந்தச் செப்பேடு ராஜேந்த்ர சோழ கரிகால சக்ரவர்த்தியின் 15 ஆம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகின்றது. இவனை அடையாளம் காணவியலவில்லை. ராஜராஜனின் தமையனான ஆதித்யனும், வீரராஜேந்த்ரனும் கரிகாலன் என்னும் விருதினைக் கொண்டிருந்தனர். ஆயினும் இந்தச் செப்பேட்டின் எழுத்தமைதி அவ்விருவரின் காலத்திற்கும் ஒவ்வாதமைந்திருக்கிறது. ஆகவே இந்தச் செப்பேட்டின் அரசனையும் இதன் காலத்தையும் கண்டறியமுடியா வண்ணம் அமைந்திருக்கிறது.

இந்தச் செப்பேட்டு தமிழ் மொழியிலும் தமிழ் எழுத்திலும் அமைந்துள்ளது. இந்தச் செப்பேட்டின் எழுத்தமைதி 14 நூற்றாண்டாகவும் அதிலுள்ள செய்தி முற்காலத்தியதாகவும் அமைந்துள்ளது.

இதன் துவக்கச் சொல்லான ஸ்வஸ்திஸ்ரீ என்னும் எழுத்து க்ரந்தத்தில் அமைந்துள்ளது. க என்னும் எழுத்து முழுமையாக மாறவில்லை. ண என்னும் எழுத்து முழுமையாக மாறி 14 ஆம் நூற்றாண்டு எழுத்துக்களைப் போல அமைந்துள்ளது. ச என்னும் எழுத்தும் ஏறக்குறைய உருவாகி 14 ஆம் நூற்றாண்டின் பிற்கால பாண்டியர் சாஸன எழுத்துக்களை ஒத்தமைந்துள்ளது. இந்தச் செப்பேடுகளின் வளையத்துக்கான ஓட்டையின் கீழே செப்பேடுகளின் எண்கள் தமிழ் எண்களால் எழுதப்பெற்றுள்ளன.

இந்தச் செப்பேடு என்னால் தொகுக்கப் பெற்ற சோழர் செப்பேடுகளில் தரப்பெறவில்லை. பிற அறிஞர்களும் இதனை ஆயவில்லை. ஆகவே இங்கே இதனைப் பதிப்பிக்கிறேன்.

இந்தச் செப்பேடு நிகரிலி சோழமண்டலம் மற்றும் கையவார நாடு ஆகியவற்றைத் தெளிவாகக் குறிக்கிறது. இத்தகைய நிலப்பிரிவுகள் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கிலில்லை. ஆகவே இந்தச் செப்பேடு மூலச்செப்பேடின் படியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்தச்செப்பேடு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் மூன்றாம் தொகுதியில் திருமகூட்லு-நரஸிபூர தாலூக்கா சாஸனங்களின் வரிசையில் 94 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

முதல் ஏடு முதல் இதழ்

001

வரி 1: ஸ்வஸ்திஸ்ரீ ராசேந்திர சோ
வரி 2: ழ கரிகாலச்சோழச
வரி 3: க்கரவர்த்திக்கு யாண்டு
வரி 4: ௰௫ வதில் நிகரிலி சோ
வரி 5: ழ மண்டலத்துக்கை

    முதல் ஏடு இரண்டாம் இதழ்

002

வரி 1: யவார நாட்டுக்குளத்தூ
வரி 2: முங்கவங்கச குலத்து
வரி 3: ள்ளாந் சோழாண்டாநு
வரி 4: க்கு குளத்தூர் நாற்பாலெ

    இரண்டாம் ஏடு முதல் இதழ்

003

வரி 1: ல்லையும் மண்ணுக்குரிய
வரி 2: வழையாரையுங் உய்கா
வரி 3: லஞ்செல்லும்படி காணியா
வரி 4: க குடுத்து பரியட்டமுமிட்டு வி
வரி 5: ட்டாந் கரிகாலச்சக்கரவத்தி யி

இரண்டாம் ஏடு இரண்டாம் இதழ்

004

வரி 1: ப்படிக்குடுக்கக் கொண்டு
வரி 2: பெரந்து ஒரு எறிவுங்கட்டி கோ
வரி 3: யிலுமெடுத்தாந் சோழாண்
வரி 4: டாந் இது குளத்தூர் வளைய
வரி 5: மாவது உயகிற்குத்தெ

மூன்றாம் ஏடு முதல் இதழ்

005

வரி 1: ன்னருகில் சிவகுறிக்கு அ
வரி 2: க்கப்பட்ட குத்துக்கல் ல
வரி 3: கப்பட சிவகுறிக்கு அகப்
வரி 4: பட நெடுகுறிக்கு மேற்

மூன்றாம் ஏடு இரண்டாம் இதழ்

006

வரி 1: கில் சிவகுறிக்கு அக
வரி 2: ப்பட வேங்கைப்பள்ள
வரி 3: ம் அகப்பட குண்டநெல்லி
வரி 4: க்கு வடவ ருகில் குத்துக்

நான்காம் ஏடு முதல் இதழ்

007

வரி 1: காலகப்பட கைவ்வா
வரி 2: ரத்துக்கு நடுவில் அ
வரி 3: ம்படக்கி மலை அருகே
வரி 4: யிது எல்லை யிதுக்கு ச்

நான்காம் ஏடு இரண்டாம் இதழ்

008

வரி 1: சாந்து ப்ருதுவி அப்பு
வரி 2: ந்த்தேயு வாயு ஆகாசம்
வரி 3: சந்த்ராதித்த நக்ஷத்தி
வரி 4: ரஞ்சாந்து சோழாண்

ஐந்தாம் ஏடு முதல் இதழ்

009

வரி 1: டன் பிழையான் வே
வரி 2: டன் வயிரருக்குக் காணி
வரி 3: கண்ணால் தரல் உப
வரி 4: யி வரை யிவனுக்கு யில்

ஐந்தாம் ஏடு முதல் இதழ்

010

வரி 1: லை எந்றவன் கங்கைய்க
வரி 2: ரையில் காராம் பசு
வரி 3: வைக் கொன்ற பாபத்தி
வரி 4: லே போவான்.

சாஸனச் சுருக்கம்

     மங்கலம். ராஜேந்த்ர சோழ கரிகால சக்ரவர்த்தியின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் நிகரிலி சோழ மண்டலத்தின் கையவார நாட்டிலுள்ள குளத்தூர் முங்கவங்கச குலத்தைச் சேர்ந்த சோழாண்டான் என்பானுக்குத் தரப்பெற்றது. இந்த ஊரின் நான்கு எல்லைகளுக்குட்பட்ட நிலமும் அதன் வருவாயும் வழங்கப்பெற்றது. இவ்வூரைப் பெற்ற சோழாண்டான் அங்கொரு ஏரியையும் கோயிலையும் கட்டினான். இந்த ஊரின் எல்லைகள் விளக்கப்பெற்றிருக்கின்றன. பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், ஸூர்யன் மற்றும் தாரகைகள் இதற்குச் சான்றாக்கப் பெற்றுள்ளன. இதனை மறுப்பவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவான் எனவும் இறுதிப்பகுதி குறிப்பிடுகிறது.

Please follow and like us:

One thought on “ராஜேந்த்ர சோழனின் ஹூப்ளே செப்பேடு

  1. அற்புதப்பதிவு!மிக நன்றாக உள்ளது.கர்நாடகத்தில் தமிழ் வழங்கியிருக்கிறது 14 ஆம் நூற்றாண்டில்.வியப்புதான்.சனகாபுரி -மைசூரில் தமிழ் இலக்கணம் நன்னூல் சீயகங்கன் அவையில் அரங்கேற்றப்பட்டதாமே?கல்வெட்டு ஏதேனும் உள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *