வாஸ்து நூல்களில் விமானங்களை அழகு செய்ய பல்வேறு உறுப்புக்கள் கூறப்பெற்றுள்ளன. அத்தகைய உறுப்புக்களில் வ்ருத்த ஸ்புடிதமும் ஒன்று. இதன் இலக்கணம் காமிகாகமத்தில் பின்வருமாறு கூறப்பெற்றுள்ளது.
एवं कुम्भलता प्रोक्ता वृत्तस्फुटितमुच्यते
षडष्टदशभिर्भानुमनुवैकारमात्रकैः ११९
व्यासतारार्धनिष्क्रान्ता द्वित्र्यंशं वा द्विभागिकम्
वृत्ताकारं समं चेत्तु तोरणाङ्घ्रिवदायतम् १२०
सकन्धरं तदूर्ध्वे तु शुकनास्या विभूषितम्
वृत्तस्फुटितमत्रोक्तं द्युस्थसद्मविभूषितम् १२१
ஆறு, எட்டு, பத்து, பதினொன்று மற்றும் பதினான்கு மாத்ரைகளில் தன்னுடைய அகலத்தில் பாதியளவிற்கோ அல்லது மூன்றில் இரண்டு பங்கோ வெளியே ஒழுங்கு பெற்றதாகவும் உருளை வடிவிலும் தோரண பாதத்தைப் போன்று நீண்டதாகவும் கண்டத்தோடு கூடியதாகவும் இறுதியில் சுகநாஸியினால் அலங்கரிக்கப்பெற்றதாகவும் விமானத்தின் மேற்பகுதியை அலங்கரிக்கும் வ்ருத்த ஸ்புடிதம் அமையும்.
காச்யப சில்ப சாஸ்த்ரம் மேற்கொண்டு இதன் இலக்கணத்தை விவரிக்கிறது.
षडङ्गुलं समारभ्य द्विद्व्यंगुलविवर्धनात् १
कलांगुलावधिर्यावत् तावद्व्यासं तु षड्विधम्
विस्तारार्धं तु तन्नीप्रं द्वात्र्यंशद्वित्रिभागकम् २
वृत्ताकारसमं तच्च तोरणांघ्रिवदायतम्
सकन्धरं तदूर्ध्वे तु शुकनासान्वितं तु वा ३
कर्णकूटाकृतिं वाथ वृत्ताकारं प्रकल्पयेत्
ஆறங்குலத்தில் துவங்கி பதினாறங்குலம் வரையில் இரண்டிரண்டு அங்குலமாக அதிகரிப்பதால் ஆறுவிதமாக அமையும். தனது அகலத்தில் பாதியளவிற்கோ அல்லது மூன்றில் இரண்டுபங்கோ வெளியொழுங்கு பெறும். உருளை வடிவனதாக தோரண பாதத்தைப் போன்று நீண்டதாக கண்டமும் அதற்கு மேலே சுகநாஸி அல்லது கர்ணகூடத்தைப் போன்றதையோ பெறும்.
இது இடம் பெறுமிடமும் காமிகாகமத்தில் பின்வருமாறு விளக்கப்பெற்றுள்ளது.
ग्रीवायां तु चतुर्दिक्षु नासि पादांश्च विन्यसेत्
तत्रैव कारयेद्वृत्तं स्फुटितं च समन्ततः १०
க்ரீவாப்பகுதியில் நால்புறமும் நாஸிகையையும் பாதங்களையும் அமைக்க வேண்டும் அங்கேயே வ்ருத்த ஸ்புடிதத்தையும் எல்லாப்புறமும் அமைக்கலாம்.
இத்தகைய வ்ருத்த ஸ்புடிதங்கள் தமிழகத்தில் குறிப்பாக ஒன்பதாம் நூற்றாண்டு துவங்கிக் காணப்பெறுகின்றன. கொடும்பாளூர், திருப்பூந்துருத்தி, புஞ்சை, திருவையாறு மற்றும் திருப்புத்தூர் தளிநாதஸ்வாமி கோயில் ஆகியவற்றில் இத்தகைய வ்ருத்த ஸ்புடிதங்கள் காணப்பெறுகின்றன. திருப்பூந்துருத்தியிலும் புஞ்சையிலும் கர்ணகூடவடிவிலான முனையையும் கொடும்பாளூரில் உருளைவடிவிலும் அமைந்திருக்கின்றன.
இவற்றின் துவக்கம் மாமல்லபுரத்திலுள்ள கணேசரதத்தின் குக்ஷிநாஸிகையில் காணப்பெறுகிறது. ஆயினும் இதனையும், திருப்பூந்துருத்தி மற்றும் புஞ்சையில் கிடைத்தவற்றை வேசரவிமானத்தின் குறுவடிவமாகக் கருதவும் இடமுண்டு.