சுவடிகளில் எழுதவும் பல வகையான பொருட்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மையைப் பொறுத்து அவை மூவகையாகப் பிரிக்கப்பெற்றுள்ளன.
- கூரியமுனையுடைய எழுத்தாணி – ஓலைகளில் எழுத
- மென்மையான முனையுடைய எழுதுபொருள் – பூர்ஜபத்ரம் முதலியவற்றில் எழுத
- தூரிகை – வண்ணங்கள் பூச
1. எழுத்தாணியை வடமொழியில் லோஹகண்டகம் அல்லது சலாகா என்று கூறுவர். இரும்பினாலான நீளமான கம்பி 10-30 செமீ அளவில் ஆக்கப்பெற்று எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பெறும். இதற்கு மிகக் கூரிய முனையும் அமைக்கப்பெறும். மற்றொரு முனை தட்டையாக்கப்பெற்று அலங்கரிக்கப் பெற்றிருக்கும்.
எழுத்தாணி சிலநேரம் தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் பித்தளையினாலும் உருவாக்கப்பெறும். விட்டுவிட்டு எண்ணெய் கொண்டு தேய்த்துக் கூராக்கவும் செய்வர். அதன் முனையைக் கொண்டு அதை சத்ரம் – குடை, பத்ரம்- இலை, நளம் – குழாய் மற்றும் கண்டம் – பந்து ஆகிய வகைகளாகப் பிரித்துள்ளனர். இவை முறையே நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓரங்குல நீளத்தைப் பெற்றிருக்கும். தமிழகத்தில் எழுத்தாணியை குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி மற்றும் கூரெழுத்தாணி என வகைப்படுத்தியுள்ளனர்.
2.முள்ளம்பன்றியின் முள் அல்லது மூங்கிலின் சிறு குச்சி மற்றும் பறவைகளின் இறகு ஆகியவை மைகொண்டு எழுதும் பொருளாகப் பயன்பட்டன. இவை பூர்ஜபத்ரத்திலும் காகிதத்திலும் எழுதப் பயன்பட்டன. இவற்றை வடமொழியில் குஞ்சம் அல்லது வர்த்திகா என அழைத்தனர்.
3.குஞ்சிகா, மஷீகுஞ்சிகா, தூளி மற்றும் தூளிகா மற்றும் வர்த்தி ஆகியவை தூரிகைகளாம். இவை, குச்சிகள், மரம், இரும்பு, ரோமம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பெற்றன.
வர்ணகம் என்பது சிறு வண்ணக்குச்சியைக் குறிக்கும். வடமொழியில் சுண்ணக்கட்டியும் கடினீ என வழங்கப்பெற்றது.