பின்வரும் கல்வெட்டு கர்ணாடக மாநிலம் கோலாரின் அருகிலுள்ள பங்கவாடியிலுள்ள ஸோமேச்வரர் கோயிலிலுள்ள ஒரு நடுகல்லில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கன்னடம் விரவிய தமிழ்மொழியில் வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவ குலத்தின் முதலாம் நரஸிம்ஹவர்மனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பாணகுலத்தரசனின் பணியாளைக் குறிப்பிடுகிறது. அவன் பெயர் அழிந்திருக்கிறது. பாணமன்னனின் பெயர் கந்த வாணாதிராசர் எனத்தரப்பெற்றுள்ளது.
இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் பத்தாந்தொகுதியில் MB 227 என்னும் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது.
வரி 1: | கோவிசைய நரசிங்க விக்கிரமபரும.. |
வரி 2: | யாண்டு இருபத்து நால்காவது தடியங்க.. |
வரி 3: | வாணராசரும் மயிந்திரமிக்கரமரும் |
வரி 4: | எறந்த தொன்று கந்த வாணதிஅரசர் ஸேவகரி |
வரி 5: | ஸே..ளிகர் எறிந்த பட்டார் அது கன்னடகருங்கங்க |
வரி 6: | இதற்கழி….ங்…ர்பாத…. |
வெற்றியுடைய மன்னவனான நரசிங்க விக்ரமவர்ரின் இருபத்துநான்காவது ஆட்சியாண்டில் தடியங்க.. வாணராசரும் மகேந்த்ர விக்ரமவர்மரும் இறந்தமையில் கந்த வாணதி அரசரின் ஸேவகரான…. ஸேளிகள் இறந்து பட்டார். இதற்கு தீங்கு நினைக்கும் கன்னடகரும் கங்கரும்….
கர்ணாடகத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு கிடைத்துள்ளமை மிகுந்த ச்வாரஸ்யமாக உள்ளது. இது மஹேந்த்ர வர்மரின் இறப்பையும் குறிப்பிடுகிறது. ஆனால் நரஸிம்ஹரின் இருபத்துநான்காம் ஆட்சியாண்டான பொயு 654-இல் மகேந்த்ர வர்மரின் இறப்பைக் கொண்டு ஒருவன் இறந்தமைக்குக் காரணம் தெரியவில்லை.
ஒரு யூகம்தான்.கிரேக்க மரபில் ஒரு அரசன் இறந்தால் அவனுடைய உரிமைப்பொருள்கள் மனைவி,வேலைக்காரன்,பயன்படுத்திய பொருள்கள் அனைவரையும் பிரமிடுக்குள் சாகடித்து வைப்பராம்.மறுமைக்கு உற்றுழி உதவும்பொருட்டு இவர்களும் அனுப்பப்படுகிறார்களாம்.அதுபோல் இராணி தீப்பாய்ந்தபின் வேலைக்காரனும் அனுப்பப்பட்டிருப்பானோ?