வேறு வேறு இடங்களில் வாழ்வோர் தமதிடத்திலிருந்து வெகுதூரத்திலுள்ள கோயில்களுக்கும் தானமளித்தனர் என்பது கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. அத்தகையதொரு தானம் பின்வரும் கல்வெட்டில் ஆவணமாக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு அரக்கோணத்தை அடுத்துள்ள கோவிந்த வாடியிலுள்ள பெருமாள் கோயிலின் தென்புறச்சுவரில் காணப்பெறுகிறது. இது முதலாம் ராஜராஜனின் 3-ஆம் ஆட்சியாண்டைச் சுட்டுவதால் இதன் காலம் பொயு 988 ஆகும்.
இந்தக் கல்வெட்டு ஒரு வடமொழிச்செய்யுளையும் முடிவுறாத தமிழ்ப்பகுதியையும் கொண்டுள்ளது. வடமொழிப்பகுதி ஆதித்யன் என்பான் கோவிந்தபாடியிலுள்ள ஒரு அந்தணனுக்கு உணவளிக்க 30 தங்கக் காசுகளை அளித்தமையைக் குறிப்பிடுகிறது. தமிழ்ப்பகுதி தானமளித்தானுடைய பெயர் வீரசோழ இளங்கோவேளின் மகனான மதுராந்தக ஆதிச்ச பிடாரன் என்று தருகிறது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 13 இல் 33 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
வரி 1: | स्वस्तिश्री राजराजे समवति भुवं |
வரி 2: | वत्सरे यस्तृतीये श्रीमत् गोविन्द |
வரி 3: | पाट्याम्रुचिभवतिलकः काममादित्यनामा। |
வரி 4: | प्रादात् त्रिंशत् सुवर्ण्णं समशनविध |
வரி 5: | ये भूसुरेन्दोत्तमस्य श्रीमानाचन्द्र |
வரி 6: | तारं त्रिदशतरुसमो याचकानां प्र |
வரி 7: | दाने। சிரி கோவிராஜகேசரி பன்மர்க்கு யாண்டு ௩ஆவது |
வரி 8: | கோநாட்டு கொடும்பாளூர் வீரசோழஇளங்கோவேளான் ம |
வரி 9: | கன் மதுராந்தகன் ஆச்சபிடாரந் தாமர்கோட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ |
வரி 10: | கோவிஞ்சபாடி மடத்தில் உண்ண வ… |
स्वस्तिश्री
மங்கலம்.
राजराजे समवति भुवं वत्सरे यस्तृतीये
श्रीमत् गोविन्दपाट्याम्रुचिभवतिलकः काममादित्यनामा।
प्रादात् त्रिंशत् सुवर्ण्णं समशनविधये भूसुरेन्दोत्तमस्य
श्रीमानाचन्द्रतारं त्रिदशतरुसमो याचकानां प्रदाने।
ராஜராஜன் புவியைக் காக்கும் போது அவனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் திருவுடைய கோவிந்தபாடியில் ஆதித்யன் என்னும் பெயருடையவனும் இரப்போருக்கு தேவர்களின் கற்பகமரத்தையொத்தவனுமானவன் கதிரும் நிலவும் உள்ளளவும் ஒரு சிறந்த அந்தணனுக்கு உணவளிக்க முப்பது தங்கக் காசுகளை மகிழ்வோடு வழங்கினன்.
சிரி கோவிராஜகேசரி பன்மர்க்கு யாண்டு ௩ஆவது கோநாட்டு கொடும்பாளூர் வீரசோழஇளங்கோவேளான் மகன் மதுராந்தகன் ஆச்சபிடாரந் தாமர்கோட்டத்து வல்லநாட்டு ஸ்ரீகோவிஞ்சபாடி மடத்தில் உண்ண வ…
கோவிராஜகேஸரி வர்மரின் மூன்றாவது ஆட்சியாண்டில் கோநாட்டைச் சேர்ந்த கொடும்பாளூரில் வாழும் வீரசோழ இளங்கோவேளானின் மகனான மதுராந்தகன் ஆச்சபிடாரன் என்பான் தாமல் கோட்டத்தில் அடங்கியதும் வல்லநாட்டைச் சேர்ந்ததுமான ஸ்ரீகோவிந்தவாடியிலுள்ள மடத்தில் உண்பதற்காக……….
இந்தக் கல்வெட்டு முடிவுறவில்லை. இது குறிப்பிடும் ஆச்சன் என்பது ஆதிச்சன் என்றாகலாம்.