காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் ஆகிய சுவடிகளில் எழுதுதற்கும் ஓலைச்சுவடியில் எழுதிய எழுத்துக்களைத் தெளிவாகக் காணப் பூசவும் மை பயன்படுத்தப்பெறுகிறது. வடமொழி நிகண்டுகளில் மேலம், மஷீஜலம், பத்ராஞ்ஜனம் ஆகிய சொற்கள் மைக்குக் காணப்பெறுகின்றன. இவற்றுள் பத்ராஞ்ஜனம் என்பது ஓலைச்சுவடியில் பூச பயன்படுத்தப்பெறும் மையாகும். மைக்கூடுகளும் வடமொழியில் மஷீபாத்ரம், மஷீபாண்டம், மஷீகூபிகா மற்றும் மேலந்து ஆகிய சொற்களால் குறிப்பிடப்பெறுகின்றன.
சில அறிஞர்கள் மேலம் என்னும் சொல் கிரேக்க மூலத்தைக் கொண்டதாகக் கருதினர். மேற்கொண்ட செய்த ஆய்வுகளில் இந்தச் சொல் வடமொழிமூலத்ததே என்பது அறியக்கிடக்கிறது. மைக்கான மிகப்பழமையான பயன்பாட்டுக்கான சான்று க்ருஹ்யஸூத்ரங்களில் கிடைக்கிறது. ஸாஞ்சியிலிருந்து பொயுமு ஐந்தாம் நூற்றாண்டைய மை கண்டெடுக்கப்பெற்றுள்ளது. ஜைன நூல்களும் கூட மையைக் குறிப்பிடுகின்றன.
முழுமையாக மையில் எழுதப்பட்ட பழமையான சுவடி கோடானில் கிடைத்த தம்மபாதச் சுவடியாகும்.
மை இருவகைத்து – அழியும் மை, அழியா மை. இவற்றுள் அழியும் மை தினசரி அலுவல்களில் பயன்படுத்தப்பெறுகிறது. அழியா மை சுவடிகளை எழுதப்பயன்படுத்தப்பெறுகிறது.
மையைத் தயாரிக்கும் பல வகையான முறைகள் நூல்களில் காணப்பெறுகின்றன. பொதுவாகக் கரித்தூளை கோந்து போன்ற பொருளுடனோ அல்லது சர்க்கரைப் பாகுடனோ கலந்து மை தயாரிக்கப்பெற்றது. அரச மரத்தின் கரியைப் பொடிசெய்து வெந்து அதனுடன் கோந்தையும் நல்லெண்ணெய் விளக்கில் படியும் கரிப்படிவத்தையும் சேர்ந்து தயாரிக்கப்பெறும் மை அழியா மையாகக் கிடைக்கிறது. அழியும் மை கரிப்படிவத்துடன் கோந்தைக் கலந்து தயாரிக்கப்பெறுகிறது.
பாதாம் கொட்டையின் ஓடுகளை கோமியத்தில் வெந்து தயாரிக்கப்பெறும் மை பூர்ஜபத்ரத்தில் எழுதப் பயன்படுகிறது.
இதனைப் போலவே வண்ண மைகள் கூட சிலாஜித், மூலிகைச் சாறு ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பெறுகிறது.
வண்ணமையினால் எழுதப்பெற்ற ஓவியங்களைக் கொண்ட பல சுவடிகள் கிடைத்துள்ளன. கீதகோவிந்தம், சௌர பஞ்சாசிகா மற்றும் ஸ்ரீதத்வநிதி ஆகிய நூல்கள் வண்ணமையினாலான ஓவியங்களைக் கொண்டுள்ளன. ஸ்ரீதத்வநிதி சுவடி மைசூர் கீழைச்சுவடியகத்தில் பாதுகாக்கப்பெறுகிறது.