தஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -1

இந்தியக் கூத்தியலைப் பொறுத்தவரை கரணங்கள் மிகவும் கவர்ந்திழுக்கும் தலைப்புக்களாக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கரணம் என்பது கை மற்றும் கால்களின் ஒத்திசைந்த அசைவாகும். அத்தகைய கரணங்கள் பரதமுனியின் நாட்ய சாஸ்த்ரத்தின் நான்காம் அத்யாயத்தில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. இந்த அத்யாயத்திற்கே தாண்டவ லக்ஷணம் என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. தலபுஷ்பபுடத்தில் துவங்கி கங்காவதரணம் வரையில் நூற்றெட்டு கரணங்கள் இந்த அத்யாயத்தில் விவரிக்கப்பெற்றுள்ளன. கரணங்களை காலியக்கங்களான சாரிகளைக் கொண்டும் ஆடற்கைகளை உள்ளடக்கிய கைகளைக் கொண்டும் ஒத்திசைந்து செய்யப்பெறுகின்றன.

     இதே வரிசையில் அமைந்த சிற்பங்கள் தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், திருவண்ணாமலை கோயில் மற்றும் பகுதிகளாக விருத்தாசலத்திலும் திருவதிகையிலும் காணப்பெறுகின்றன. இத்தகைய கரணங்கள் பல்லவர் காலந்தொட்டு சிற்பங்களில் கிடைத்தாலும் சோழர்களின் காலந்தொட்டே வரிசையாகக் கிடைக்கின்றன. இத்தகைய கரண வரிசைகளில் மிகப்பழமையான வரிசை தஞ்சைப் பெரியகோயிலின் மேலடுக்கிலுள்ள வரிசையேயாம். ஸர்ப்பிதம் ஈறான எண்பத்தோரு கரணங்கள் செதுக்கப்பெற்றிருக்கின்றன. மீதி கரணங்களுக்கான இடம் கற்பலகைகளாகச் செதுக்கப்பெறாமல் விடுக்கப்பெற்றிருக்கிறது. நான்கு கரங்களோடு ஈசனே இந்தக் கரணங்களைச் செய்பவராகச் செதுக்கப்பெற்றிருக்கிறது. முனைவர் வி. ராகவன் அவர்கள் கூறியபடி இங்குள்ள கரணங்கள் கரணத்தின் முடிவுப் பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.

     சின்னாட்களுக்கு முன்பு முனைவர் நாகஸ்வாமி அவர்களின் கருத்தைப் பார்க்க நேர்ந்த போது வியப்பு மேலிட்டது. அவர் இந்தக் கரணங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த நாட்ய சாஸ்த்ர உரையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கலாம் என்றும் அபிநவபாரதி என்னும் வடநாட்டு உரையை முழுவதுமாக ஆதாரமாக உருவாகியிரா என்றும் கருதியிருந்தார். இந்த முடிவுக்கு ஏறத்தாழ நான் ஒரு வருடத்திற்கு முன்னர் வந்திருந்தேன். காரணம் அபிநவபாரதியில் கூறப்பெற்ற சில விதிகளை மீறித் தஞ்சைக் கரணங்கள் அமைந்திருப்பதேயாம். ஆயினும் இப்போது தென்னக உரை ஏதும் கிடைத்திராமையால் அபிநவபாரதியைக் கொண்டே இந்தக் கரணங்களைக் கற்பதும் மீட்டுருவாக்குவதும் நிகழ்கிறது.

     இப்போது கரணங்களைக் காணலாம்

  1. தலபுஷ்பபுடம்

001_talapushpaputa

     முதன் முதல் கரணம் தலபுஷ்பபுடம் ஆகும். இதில் ஈசன் நான்கு கரங்களோடு மேலிரு கரங்கள் உடுக்கையையும் தீயையும் தாங்கும் வண்ணம் செதுக்கப்பெற்றிருக்கிறார். கீழிரு கரங்களும் புஷ்பபுடமாக – அதாவது பூக்குடலை போன்று அமைந்துள்ளன. இதனைக் கொண்டே இந்தக் கரணத்திற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. வலது கால் அக்ர தள ஸஞ்சரத்திலும் பக்கம் நன்கு வளைந்து ஸன்னதமாகவும் இருக்கின்றன. முனைவர். வி. ராகவன் கூறியபடி வ்யாபுக்ன கடி இந்தச் சிற்பத்தில் நன்றாகக் காட்டப்பெற்றுள்ளது. இந்த இலக்கணங்கள் நாட்யசாஸ்த்ரத்தின் இலக்கணத்தை நன்கு பின்பற்றி அமைந்துள்ளன.

वामे पुष्पपुटः पार्श्वे पादो अग्रतलसञ्चरः।

तथा च सन्नतं पार्श्वं तलपुष्पपुटं भवेत्।।

     என்பது நாட்ய சாஸ்த்ர இலக்கணம். இடதுபுறம் புஷ்பபுடம் அமைய பாதம் அக்ரதலஸஞ்சரமாக அமைய பக்கம் ஸன்னதமாக அமைந்தால் அந்தக் கரணத்திற்குத் தலபுஷ்பபுடம் என்று பெயர்.

     இரு ஸர்ப்பசீர்ஷ கரங்களை விளிம்பு சேர்த்து பிடித்தால் அதற்கு தலபுஷ்பபுடம் என்று பெயர். குதிகாலைத் தூக்கி நுனிக்காலில் விரல்கள் படிய நின்றால் அதற்கு அக்ரதளஸஞ்சரம் என்று பெயர். வயிற்றை உட்குழித்து பக்கத்தில் வளைந்து நிற்பதே நத பார்ச்வம் எனப்பெறுகிறது.

     இந்தக் கரணத்திற்கு அத்யர்த்திகா என்னும் சாரி கூறப்பெற்றுள்ளது. இதன் இறுதியில் அக்ரதளஸஞ்சரம் என்னும் பாதம் அமைகிறது. அபிநவ பாரதி வலதுகாலை வெளியெடுக்கும்போது என்று குறிப்பிடுவதால் பூர்ணர்த்திகா சாரியைப் பயன்படுத்தவேண்டும் என்று நான் கருதுகிறேன். விரல்களைச் சுழற்றும் வ்யாவர்த்தனம் வலப்புறமும் பரிவர்த்தனமும் இடப்புறமும் அமைய இறுதியில் இடப்புறத்தில் புஷ்ப புடமாகக் கூடும்.

     இந்தக் கரணச் சிற்பத்தில் இறுதியான புஷ்பபுடத்தில் இணைந்த கரங்களை நாம் காண்கிறோம். வலக்கால் அக்ரதளஸஞ்சரமாக அமைந்திருக்கிறது. இது என்னை பூர்ணர்த்திகாவியின் பயன்பாடு அமைந்திருக்கலாம் என நினைக்கத் தூண்டுகிறது. பூர்ணர்த்திகாவின் இறுதியில் அக்ரதள ஸஞ்சரம் அமைவது எளிமையாக அமையும்.

Please follow and like us:

One thought on “தஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *