எழுத்தர் என்பவர் சுவடிகள் ஆவணங்கள் இவற்றைப் படியெடுப்பவர் ஆவார். எழுத்தருக்கும் நூல்களை யாத்தவருக்கும் வேறுபாடறியாமல் சிலர் மயங்குவதுண்டு. லிபிகரன், லிபிகாரன், லேககன் ஆகியவை எழுத்தருக்கான வடமொழிச் சொற்களாம். பண்டைய காலத்தில் அரசாங்க எழுத்தரும் இருந்தனர். அவர்கள் கரணிகர், காயஸ்தர், ராஜலேககர், ராஜலிபிகரர் என்று வழங்கப்பெற்றனர். ஆவணங்களைப் பாதுகாப்பவர் அக்ஷபாடலிகர் என்று வழங்கப்பெற்றார். கௌடல்யரும் எழுத்தரின் இலக்கணத்தைப் பின்வருமாறு தருகிறார்.
अमात्यसम्पदोपेतः सर्वसमयवित्, आशुग्रन्थः चार्वक्षरः लेखनवाचनसमर्थः लेखकः स्यात्।
அமைச்சருக்குண்டான பண்புகளோடியைந்தவர், எல்லா கொள்கைகளையும் அறிந்தவர், விரைவில் நூலைக் கொள்பவர், அழகிய எழுத்துக்களை உடையவர், படிக்கவும் எழுதவும் திறன் பெற்றவர் எழுத்தராவார்.
பொதுவாக எழுத்தரின் பெயர் சுவடியின் இறுதியில் எழுதப்பெற்றிருக்கும். அதனோடு அவரை ஆதரித்தவர், எழுதிய இடம், வருடம் முதலிய தகவல்களும் தரப்பெற்றிருக்கும். இதையடுத்து சுவடியைப் படிப்போரைக் குறித்து அவருடைய வேண்டுகோள் இடம்பெற்றிருக்கும்.
அறிவார்ந்த எழுத்தரைக் காட்டிலும் நேர்மையான எழுத்தர் மேலானவர். எழுத்தரின் பிழைகள் உள்நோக்கமுடையவை உள்நோக்கமற்றவையென இருவகைப்படும். உள்நோக்கம் கொண்ட பிழைகள் அறிவார்ந்த எழுத்தர்களாலேயே ஏற்படுகின்றன.
சிலநேரம் எழுத்தர்களின் பிழைத்திருத்தம் கூட புகழத்தக்கதாக இருக்கும். அவர்களுக்கு ஐயம் நேருமிடத்து வட்டமிட்டுக் காட்டியிருப்பர். இது சுவடிகளைப் பதிப்பிப்போருக்குச் சரியான பாடத்தைத் தெரிந்தெடுக்கத் துணையாய் அமைகிறது.
க்ஷேமேந்த்ரர் என்னும் கவிஞர் தவறான எழுத்தர்களைப் பின்வருமாறு நகையாடுகிறார்.
अकारशीर्षहारी नवदरकारी पदार्थसंहारी
अक्षरभक्षकमेलालिप्तमुखो लेखकः कालः।।
காலையும் கொம்பையும் உடைப்பர், புதிய சுழிகளை ஏற்படுத்துவர். சொற்பொருளையே அழிப்பர். எழுத்துக்களை விழுங்குவதால் அவர்கள் வாயினில் மை அப்பியிருக்கும். அவர்கள் யமனேயல்லவா..