பின்வரும் கல்வெட்டு கர்ணாடகத்தில் முல்பல்கல் தாலூகாவிலுள்ள பைராகூரில் உள்ள கோபால க்ருஷ்ணர் ஆலயத்தினருகேயுள்ள நடுகல்லில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு தமிழில் வட்டெழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டுத் துண்டாக இருந்தாலும் கோவிசைய ஈச்சுவரவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இந்த மன்னனைப் பல்லவர் குலத்தின் முதலாம் பரமேச்வர வர்மனாக அடையாளம் காணலாம். இந்தக் கல்வெட்டு காரோனிரி வாணரசர் போர்ச்சிறையானதையும் வேறொருவர் இறந்து பட்டதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு முழுமையாக இல்லாததால் முழுத் தகவலையும் அறியமுடியவில்லை. இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 682 ஆகும்.
இந்தக் கல்வெட்டு துண்டாக அமைந்திருந்தாலும் கூட இதனை பரமேச்வர வர்மன் சாளுக்யர் தம் தலைநகரான ரணரஸிகபுரத்தை நோக்கி மீண்டும் படையெடுத்ததற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இந்தச் செய்தி காஞ்சி கைலாயநாதர் ஆலயக் கல்வெட்டில் இருந்தாலும் கூட பரமேச்வர வர்மனின் படையெடுப்பை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் இல்லை. அதற்கு ஆதாரமாக இந்த ஒற்றைக் கல்வெட்டைக் கொள்ள இயலாவிட்டாலும் கூட இந்தப் பகுதி வரை பரமேச்வரனின் ஆட்சிப் பரப்பைக் குறிக்க பயன்படுத்தவியலும்.
இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் பத்தாந்தொகுதியில் வெளியாகியுள்ளது.
வரி 1: | கோவிசைய ஈச்சுவர |
வரி 2: | பருமற்கி பன்னிர |
வரி 3: | ண்டாவது காரோனிரி |
வரி 4: | வாணராசர் போர் |
வரி 5: | ச்சிறை ஊ…றிய வாண |
வரி 6: | ராசர் ய பட்டார் அ… யா |