- வர்த்திதம்
இந்தக் கரணம் இரண்டாவதாக அமைந்துள்ளது. பரதரின் நாட்ய சாஸ்த்ரம் இந்தக் கரணத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
कुञ्चितौ मणिबन्धे तु व्यावृत्तौ परिवर्त्तितौ।
हस्तौ निपतितौ चोर्वोः वर्तितं करणं तु तत्।।
மணிக்கட்டில் வளைந்த கரங்கள் வ்யாவ்ருத்தமாகவும் பரிவர்த்திதமாகவும் சுழன்று அதன் பிறகு துடையின் மீது வைக்கப்பெற வேண்டும். இத்தகைய கரணத்திற்கு வர்த்திதமென்று பெயர்.
அபிநவபாரதி இதனை விளக்கும் தறுவாயில் – இரு கரங்களையும் மார்பளவில் ஒன்றையொன்று ஒட்டாமல் ஸ்வஸ்திகத்தைப் போல வைத்து பிறகு அவற்றை முதலில் வ்யாவ்ருத்தமாகவும் பிறகு பரிவர்த்திதமாகவும் சுழற்ற வேண்டும். வ்யாவ்ருத்தம் என்பது சுண்டுவிரல் துவங்கி உட்புறமாக விரல்களைச் சுழற்றுவதாம். பரிவர்த்திதம் என்பது. சுண்டுவிரல் துவங்கி வெளிப்புறமாக விரல்களைச் சுழற்றுவதாம். அதன் பிறகு கைத்தலங்களை மேல் நோக்கியவாறு துடையின் மீது வைக்க வேண்டும். பொறாமையைக் காட்ட பதாக ஹஸ்தத்தைப் பயன்படுத்த வேண்டும். அவற்றைக் கீழாக வைத்தால் அது சினத்தைக் குறிக்கும். கடகாமுகம் மற்றும் சுகதுண்டம் ஆகிய ஹஸ்தங்களையும் கூட பயன்படுத்தலாம். சிலர் இதில் அக்ரதள ஸஞ்சர பாதத்தைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அபிநவ குப்தரோ சூழலுக்கேற்ற பாதத்தைப் பயன்படுத்த வேண்டுமெனக் கூறுகிறார்.
தஞ்சாவூர் சிற்பத்தொகுதியில் சிவன் நான்கு கரங்களோடு உள்ளார். மேலிரு கரங்களும் உடுக்கையும் தீச்சட்டியையும் ஏந்தியிருக்கிறார். கீழிரு கரங்களும் துடை மீது மூடிய வண்ணம் வைக்கப்பெற்றிருக்கின்றன. கால்கள் மண்டல நிலையில் உள்ளன. வலது கால் அக்ரதள ஸஞ்சரமாக தலபுஷ்பபுடத்தில் அமைந்ததைப் போலிருக்கிறது.
மேல்கூறியவை நாட்ய சாஸ்த்ரத்தின் வரையறையை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். அபிநவ பாரதி கூறும் இரண்டாம் வகை அபிநயத்தையொட்டியபடி அமைந்திருப்பதைக் காணலாம்.
தலபுஷ்பபுடத்தைப் போல இந்தக் கரணத்திலும் கூட அக்ரதலஸஞ்சரத்தில் முடியும் அத்யர்த்திகா சாரி இதிலும் பயன்பட்டிருக்க வேண்டுமென நான் கருதுகிறேன்..