ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. இதுவரை இதன் வரிகள் வெளியாகாமையால் மத்திய தொல்லியல் துறையிலிருந்து அதன் மைப்படியைப் பற்று ஈண்டு வெளியிடுகிறேன்.

     இந்தக் கல்வெட்டு வருங்காலத்தைக் கணிப்பதைப் போல அமைந்திருக்கிறது. இது திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார் என்றும் தேவர்களின் குருவான வியாழன் அவனுடைய அமைச்சரான ஜயந்தனாகப் பிறப்பார் என்றும் குறிப்பிடுகிறது. அவர்கள் இவ்வுலகை அளந்து த்ரிசூல மலையின் மீது ஒரு நகரத்தை அமைப்பர் என்றும் இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது ராஜராஜனின் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் இது வருங்காலத்திலேயே செய்தியைக் குறிப்பிடுகிறது. என்னுடைய கருத்தாவது – இந்தக் கல்வெட்டு நீண்டதாக அமைந்து, இதன் பிறகமையும் பகுதி, இவ்விதமான கணிப்பை உண்மையாக்கி ராஜராஜன் தனது ஸாதனைகளை மேற்கொண்டான் என்று அமைந்திருக்கலாம் என்பதே. ஆனால் மற்றைய பகுதிகள் செதுக்கப்பெறவில்லை. ஆனால் இந்த மலை மீது நகரம் அமைந்ததற்கான அறிகுறியும் இல்லை. ஆகவே இந்தப் பகுதி வெறும் கணிப்பாக அமைந்திருக்கும்.

     இந்தக் கல்வெட்டு வரலாற்றுரீதியான தரவுகளை அதிகமாகத் தராவிட்டாலும், ராஜராஜனின் அமைச்சரின் பெயர் ஜயந்தன் என்று இந்தக் கல்வெட்டு தகவலைத் தருவது குறிப்பிடத்தக்கது.

RAJARAJA

Line 1: वासुदेवो महाविष्णुः राजराजो भविष्यति।
Line 2: जयन्तो वाक्पतिर्म्मन्त्री तस्य राज्ञो भविष्यति।
Line 3: तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।
Line 4: तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

பாவகை – அனுஷ்டுப்

वासुदेवो महाविष्णुः राजराजो भविष्यति।

जयन्तो वाक्पतिर्म्मन्त्री तस्य राज्ञो भविष्यति।

வாஸுதே³வோ மஹாவிஷ்ணு​: ராஜராஜோ ப⁴விஷ்யதி|

ஜயந்தோ வாக்பதிர் ம்மந்த்ரீ தஸ்ய ராஜ்ஞோ ப⁴விஷ்யதி|

         வஸுதேவரின் மகனான திருமாலே ராஜராஜனாக அவதரிப்பார். தேவர்களின் அமைச்சரான ப்ருஹஸ்பதியே அந்த அரசனுக்கு ஜயந்தன் என்னும் அமைச்சராகத் திகழ்வார்.

பாவகை – அனுஷ்டுப்

तत्काले जगतो मानं करिष्यति जगत्पतिः।

तन्नाम्ना नगरीन्दिव्याम् त्रिशूलोच्चगिरौ पुरी।।

தத்காலே ஜக³தோ மானம்ʼ கரிஷ்யதி ஜக³த்பதி​:|

தன்னாம்னா நக³ரீம் தி³வ்யாம் த்ரிஶூலோச்ச-கி³ரௌ புரீ||

அந்தப் பேரரசன் தன்னுடைய காலத்தில் உலகை அளப்பான். தன்னுடைய பெயராலே த்ரிசூல மலையின் உயர்ந்த முகட்டில் ஒரு நகரத்தை அமைப்பான்.

இதில் குறிப்பிடப்பெற்றுள்ள த்ரிசூல மலையானது தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள நவிரமலையென்பதும் இதன்மீது காரி உண்டியின் வழிபாட்டிடம் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  ராஜராஜனைத் திருமாலின் வடிவமாக மக்கள் கருதியிருந்தனர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேட்டாலும் உறுதி பெறுகிறது.

Please follow and like us:

2 thoughts on “ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு

  1. அரியசெய்தி, நிலத்தை அளந்தது உண்மை,நவிரமலை மீது நகரம் இருந்து பின் அழிக்கப்பட்டதா?இடிபாடுகள் உள்ளனவா எனப்பார்க்கவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *