- வலிதோருகம்
இது மூன்றாவதான கரணம். நாட்ய சாஸ்த்ரம் பின்வருமாறு இந்தக் கரணத்தை வரையறுக்கிறது.
शुकतुण्डौ यदा हस्तौ व्यावृत्तपरिवर्त्तितौ।
ऊरू च वलितौ यस्मिन् वलितोरुकमुच्यते।।
சுகதுண்ட கரம் வ்யாவ்ருத்த பரிவர்த்திதங்களைப் புரிந்து இது துடைகளும் வளைந்திருந்தால் அத்தகைய கரணத்திற்கு வலிதோருகம் என்று பெயர்.
அபிநவகுப்தர் மேலும் வ்யாவ்ருத்த பரிவர்த்திதங்களை ஒரே காலத்தில் மார்பளவில் செய்து அதன் பிறகு ஆக்ஷிப்தா சாரியுடன் கீழே விடவேண்டும். பரிவர்த்தித கரணத்தின் இறுதியில் சுகதுண்ட கரங்கள் கீழ்நோக்க வேண்டும். இறுதிநிலை பத்தா சாரியாக அமையும்.
தஞ்சாவூரில் உள்ள கற்பலகையில் நான்கு கரங்கள் இருக்கின்றன. மேலுள்ள வலது கரம் கீழே மானைத் தொட்டுக் கொண்டும் இடது கரம் தீச்சட்டியையும் ஏந்தியுள்ளது. மற்றிரு கரங்களும் சூலத்தைப் போன்ற பொருளைத் தாங்கியுள்ளது. கால்களில் இடக்கால் ஸமமாகவும் வலக்கால் திரும்பி வலிதமாகவும் அமைந்துள்ளது.
கால்களின் நிலை பத்தா சாரியைக் கொண்டு சரியாக இருப்பதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் கரங்களின் நிலை அபிநவபாரதியை மீறி அமைந்துள்ளது. அபிநவ பாரதி கரங்கள் மார்பளவில் அமைந்திருக்க வேண்டுமெனக் கூறுகிறது. ஆனால் இரு வலது கரங்களும் துடையின் மீது அமைந்துள்ளது. இந்த மாறுபாட்டுக்கு இரு விதமான பதில்கள் இருக்கக் கூடும்.
- இந்தக் கற்பலகை காட்டும் சிற்பம் இப்போது கிடைக்காத நாட்ய சாஸ்த்ரத்துக்கான தென்னிந்திய உரையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
- இந்த வரிசையில் வலிதோருகம் விடப்பட்டிருக்க வேண்டும். பலகை மூன்றும் நான்கும் அடுத்த கரணமான அபவித்தத்தின் பலகைகளாக வேண்டும்.
நான் முதல் பதிலைத் தேர்ந்தெடுக்க எண்ணுகிறேன். காரணம் வரிசையாக அமைந்த கரணச் சிற்பங்களில் ஒன்றை விடுப்பது என்பது பொருத்தமான பதிலாக அமையாது..