பொதுவாகச் சுவடிகளின் இறுதிப் பகுதியில் சுவடியைப் பற்றிய குறிப்புக்கள் காணப்பெறும். இதனைச் சுவடிக்குறிப்பு என்பர். சிலநேரம் சுவடிக் குறிப்பு இல்லாமலும் சுவடிகள் கிடைத்துள்ளன. சுவடிக் குறிப்புக்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் தருமளவிற்கு மிக எளிமையாகவும், இயற்றியவர், அவரைப் புரந்தார் ஆகிய பல குறிப்புக்களைத் தருவதாகவும் அமையும். ஒவ்வொரு அத்யாயம் அல்லது சருக்கத்தின் இறுதியிலும் கூட சுவடிக் குறிப்புக்கள் அமையும். இந்த நடுச் சுவடிக் குறிப்புக்கள் மிக எளிமையாக நூலின் பெயரையும் அத்யாயப் பெயரை மட்டும் தரும் அளவில் அமையும். முதல் அத்யாய இறுதியில் அமையும் சுவடிக்குறிப்பு பொதுவாக பல குறிப்புக்களைக் கொண்டிருக்கும்.
இறுதியிலுள்ள சுவடிக்குறிப்பு பின்வரும் பொருட்களில் ஒன்றையோ இரண்டையோ அல்லது அனைத்தையுமோ கொண்டிருக்கும்.
- நூலின் பெயர்
- இயற்றியவர் பெயர்
- பெற்றோர் பெயர்
- ஆசிரியர் பெயர்
- புரந்தவர் பெயர்
- இந்திய வருடங்களில் எழுதி முடித்த காலம்
- செய்யுள் எழுத்துக்களின் எண்ணிக்கை
- எழுத்தர் பெயர்
- எழுத்தரின் வாழிடம்.
சிலநேரம் சுவடிக் குறிப்புக்களே நூலை அடையாளம் காணவும் அதன் ஆசிரியரை அடையாளம் காணவும் பேருதவி புரிகின்றன. வடமொழியில் சுவடிக்குறிப்பை புஷ்பிகா அல்லது க்ரந்த புஷ்பிகா என்பர்.