எழுத்தொழுங்கு
பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் காண்பதைப் போலவே சுவடிகளிலும் கூட எழுத்தொழுங்கு இடம் பெற்றுள்ளது. வடமொழிச் சுவடிகளில் தண்டம் எனப்பெறும் செங்குத்துக் கோடு (।) செய்யுட்களில் இடம்பெற்றுள்ளது. செய்யுட்களில் ஒரு கோடும் இரு கோடுகளும் கூட இடம்பெற்றுள்ளன. உரைநடையிலும் கூட சொற்றொடர் முடிவில் ஒரு கோடும், பத்தியின் இறுதியில் இரு கோடுகளும் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் இரு கோடுகள் கோடு இரு கோடுகள் (।।-।।) போன்றதொரு அமைப்பு ஒரு பகுதியின் இறுதியில் காணப்பெறுகிறது. சில சுவடிகளில் இதனைக் குறிக்க í என்பது போன்ற குறியீடும் பயன்படுத்தப்பெற்றுள்ளது. இங்கு இரு தண்டங்களுக்கு நடுவே சிலவேளை அத்யாய எண்ணும் எழுதப்பெறுவது வழக்கம்,
பொதுவாக சுவடிகளில் சொற்களுக்கு இடையே இடைவெளியின்றி தொடர்ச்சியாக எழுதப்பெறும். எழுத்துக்களும் கூட தனித்தனியாக எழுதப்பெறும்.
சுருக்கச் சொற்கள்
சுவடிகளிலும் கூட சுருக்கச் சொற்கள் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக கோத்ரம் என்னும் சொல் “கோ” என்னும் எழுத்து பயன்பட்டுள்ளது. சில இடங்களில் பூஜ்யத்தைப் போன்றதொரு குறியீடு ஒற்று இரட்டித்தலைக் குறிக்கப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. சில சுவடிகளில் ஒன்றுக்கும் மேல்முறை வரும் சொற்களுக்கு எண்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக புன: புன: என்னும் சொல் புன: 2 என்று எழுதப்பெற்றுள்ளது.