ஆசார்ய சுந்தரபாண்டியன்

ஆசார்ய சுந்தரபாண்டியன்

 

ஆசார்ய என்று ஒரு பாண்டிய மன்னனுக்குப் பட்டம் கொடுத்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்தப் பட்டம் நான் கொடுத்ததில்லை. ஒரு வேதாந்த நூலுக்கு கல்பதரு என்னும் உரையெழுதும் போது அமலானந்தர் என்னும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி கொடுத்த பட்டமிது. வேதாந்தத் துறவி பாண்டிய மன்னனை ஆசார்யர் என்று குறிப்பிடுவதற்கு என்ன காரணம்?  இதனை ஆய்வதற்கு முன்பு ஆதிசங்கரர் இயற்றிய பிரம்ம சூத்திர உரையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வேதங்களின் இறுதிப்பகுதியாகத் திகழும் உபநிஷத்துக்களுக்கு வேதாந்தம் என்று பெயர். அந்த வேதாந்தத்தின் இறுதிக் கொள்கையாக அவற்றைச் சுருக்கி பாதராயணர் நூற்பாக்களாக – சூத்திரங்களாக இயற்றினார். அவற்றிற்குப் பிரம்ம சூத்திரங்கள் என்று பெயர். அந்தச் சூத்திரங்களுக்கு உரை எழுதினால் மட்டுமே வேதாந்தக் கொள்கையானது உறுதி பெறும். அத்தகைய உரையில் எல்லோரும் கொண்டாடும் படி மிகச் சிறப்பாக உரையெழுதியவர் அன்றைய தமிழகமான சேரநாட்டில் தோன்றிய ஆதி சங்கரர். அவர் எழுதிய உரைக்கு சாரீரக பாஷ்யம் என்று பெயர். இந்த உரையில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் உண்டு. அப்படி முதல் அத்தியாயத்தின் முதல் பாதத்தின் நான்காவது சூத்திரத்தின் உரையில் ஆதிசங்கரர் கீழ்க்கண்ட காரிகைகளை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

கௌண-மித்யாத்மனோ: ஸத்வே புத்ர-தேஹாதி-பாதனாத்

ஸத்-ப்ரஹ்மாஹமித்யேவம் போதே கார்யம் கதம் பவேத்

அன்வேஷ்டவ்யம் ஆத்ம-விஜ்ஞானாத் ப்ராக் ப்ரமாத்ருத்வமாத்மன:

அன்விஷ்ட: ஸ்யாத் ப்ரமாதைவ பாப்ம-தோஷாதி-வர்ஜித:

தேஹாத்ம-ப்ரத்யயோ யத்வத் ப்ரமாணத்வேன கல்பித:

லௌகிக: தத்வதேவேதம் ப்ரமாணம் த்வாத்ம-நிஸ்சயாத்

பெண்டு பிள்ளைகளை ஆத்மாவென நினைப்பது கௌணாத்மா எனப்படும். தன் உடலை ஆத்மாவாக நினைப்பது மித்யாத்மா எனப்படும். தான் பிரம்மம் என்றறியும் அத்வைத அறிவிற்குப் பிறகு  கௌணாத்மாவும் மித்யாத்மாவும் இல்லையென்றான பின் செயலிருக்குமா என்ன? பிரமமென்று அறியும் வரையில்தான் ஆத்மா அறிந்துகொள்பவனாயிருக்கிறது. அறிந்துகொண்ட பிறகு பாவங்களற்ற அறிந்துகொண்ட பரமாத்மாவே தானென்று இருக்கும். தன்னுடலையே ஆத்மாவாக நினைக்கும் இந்த உலகியல் பிரமாணம் எப்படி இருக்கிறதோ அதனைப் போன்றே ஆத்ம நிச்சயத்தினாலே ஆத்மாவைப் பற்றிய பிரமாணமும் இருக்கும்.

என்பது இந்த காரிகைகளின் பொருள். வேதாந்த சாஸ்திரத்தைச் சுருக்கிக் கையிற்கொடுத்தாற்போன்ற இந்த காரிகைகளை எவரியற்றினார்? ஆதி சங்கரர் இவற்றை மேற்கோள் காட்டுமளவிற்கு அத்தகைய உயர்ந்த சிந்தனையாளர் யார்? என்று ஆராயுங்கால் ஆதிசங்கரர் இவற்றை எழுதியவரைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இதற்கு உரையெழுதிய பத்மபாதரோ அல்லது வாசஸ்பதி மிச்ரரோ கூட கூறவில்லை. பத்மபாதரின் உரைக்கு ஆத்மஸ்வரூபரால் எழுதப்பெற்ற பிரபோத பரிசோதினீ என்னும் குறிப்புரை இவை சுந்தர பாண்டியனுடையவை என்று குறிப்பிடுகிறது. வாசஸ்பதி மிச்ரர் எழுதிய பாமதி என்னும் உரைக்கு குறிப்புரை வழங்கிய அமலானந்தர் மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் பாதத்தின் 25 ஆவது சூத்திரத்திற்கு குறிப்புரை வரையும் போது நிச்ரேண்யாரோஹணப்ராப்யம் ப்ராப்தமத்ரோபபாதி ச முதலிய மூன்று காரிகைகளைக் குறிப்பிட்டு இவை ஆசார்ய சுந்தரபாண்டியனுடையவை என்று குறிப்பிடுகிறார்.

இப்படி ஆசார்ய என்னும் அடைமொழியோடு குறிப்பிடப்பெறும் சுந்தரபாண்டியன் யார்? பாண்டிய மன்னனா? அல்லது வேறு எவரேனுமொருவரா? என்று ஆராய்ந்தால் ராஜஸிம்ஹனின் சின்னமனூர்ச் செப்பேடு பின்வரும் வரியில் ஒரு சுந்தர பாண்டியனைக் குறிப்பிடுகிறது.

ஸமஸ்த-சாஸ்த்ரார்ணவ-கர்ணதார: யதுத்பவ: சுந்தரபாண்ட்யநாமா

அனைத்து சாஸ்திரங்களாகிய கடலுக்கு மாலுமியைப் போன்றவரான இந்த குலத்தில் தோன்றிய சுந்தரபாண்டியன் என்பது இதன் பொருள். இந்தச் செப்பேட்டின் காலம் பதினோராம் நூற்றாண்டு ஆகும். ஆகவே அதற்கு மிக முன்பாக இந்தச் சுந்தர பாண்டியன் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவனைப் பற்றி வேறேதாவது குறிப்புண்டா?

மீமாம்சை என்னும் சாஸ்திரத்தில் கரைகண்டவர் குமரில பட்டர் என்னும் பெரிய மேதை. அவர் தந்திர வார்த்திகம் என்னும் ஒரு நூலை யாத்துள்ளார். அந்த நூலில் பின்வரும் காரிகைகளை மேற்கோள் காட்டுகிறார்.

தேன யத்யபி ஸாமர்த்யம் ப்ரத்யேகம் ஸித்திமன்யதா

ததாபி யுகபத்பாவே ஜகன்யஸ்ய நிராக்ரியா

அன்யதைவ ஹி சூன்யேஷு துர்பலைரபி சர்யதே

அன்யதா பலவத்க்ரஸ்தை: ஸர்வசக்திக்ஷயே ஸதி

இவற்றிற்கு உரையெழுதியவர்கள் இவை விருத்தவசனம் – மூத்தோர் சொல் என்றே குறிப்பிட்டாலும் ஆராய்ச்சியாளர்கள் இவை சுந்தர பாண்டியனுடையவையே என்று கருதுகின்றனர். இவை தவிர வேறு ஏதாவது குறிப்புண்டா என்று ஆராய்ந்தால் சூதசம்ஹிதை என்னும் நூலிற்கு உரையெழுதிய மாதவ மந்திரி என்பவர் ஆதிசங்கரரால் மேற்கோள் காட்டப்பெற்றதில் மூன்றாம் காரிகையை மேற்கோள் காட்டி இது சுந்தரபாண்டியனுடையது என்று குறிப்பிடுகிறார். இத்துணை மேற்கோள்கள் சுந்தரபாண்டியனுடையவையாக இருந்தாலும் தனிநூலாக ஏதாவது கிடைத்ததுண்டா என்று ஆராய்ந்தால் நீதித்விஷஷ்டிகா என்னும் நல்லுரை நூல் ஒன்று கிடைத்துள்ளது என்பதைக் குறிப்பிடலாம்.

 

நீதி த்விஷஷ்டிகா

இந்த நூலில் 120 செய்யுட்கள் உள்ளன. இவை ஆர்யா என்னும் வகை பாவகையால் ஆனவை. இந்த நூலின் துவக்கத்தில் சுந்தரபாண்டியன்

ஸ்ரீமான் ஸுந்தரபாண்ட்ய: ச்ருதி-ஸ்ம்ருதி-ப்ரஸ்ருத-ஸத்-பதார்த்த-ஜ்ஞ:

க்ருதவான் ஆர்யாம் ஸம்யக் ச்ரோத்ரூணாம் புத்தி-வ்ருத்தி-கரீம்

வேதம் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் விரவியுள்ள நற்பொருளை அறிந்தவனான திருவுடைய சுந்தரபாண்டியன் கேட்போரின் அறிவைப் பெருக்கும் இந்த ஆர்யாவை (விருத்தத்தால் ஆன நூலை) யாத்துள்ளான் என்பது இதன் பொருள்.

இவற்றிலுள்ள 120 செய்யுட்களும் இன்சொல்கூறல், கூடாநட்பு போன்ற பலபொருட்களில் அமைந்தவை. இவற்றில் பல திருக்குறள், நாலடியார் போன்ற செய்யுட்களின் சாயையில் அமைந்துள்ளமை மிகவும் சிறப்பானதொன்றாகும். எடுத்துக்காட்டாக

ஸ்வாதீனே மாதுர்யே மதுராக்ஷரஸம்ஹிதேஷு வாக்யேஷு

கிம் நாம ஸத்த்வவந்த: புருஷா: பருஷாணி பாஷந்தே

என்னும் செய்யுள் இனியவுளவாக என்னும் குறளை எதிரொலிக்கின்றது.

பனஸாம்ரபாடலஸமா: ஸ்யு: இஹோத்தம-மத்யமாதமா: புருஷா:

பலஸுமபல-ஸுமநிசயை: கர்மவச: கர்மவாங்நிசயை:

என்னும் செய்யுள் அவ்வைபிராட்டியின்

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர்சிறியர்

சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல

குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்

பலாமாவைப் பாதிரியைப் பார்

என்னும் செய்யுளின் மொழிபெயர்ப்பாகவே அமைந்துள்ளது. இன்னும் பல செய்யுட்களை இவ்வாறு எடுத்துக்காட்டமுடியும். இந்த நூலின் இறுதிப்பகுதிதான் மிகவும் சுவாரசியமானது.

இமாம் காஞ்சன பீடஸ்தாம் ஸமேத்ய கவயோ புவி

ஆர்யாம் ஸுந்தரபாண்ட்யஸ்ய ஸ்னாபயந்து வதூமிவ

பொற்பலகையில் வீற்றிருக்கும், சுந்தரபாண்டியனின் இந்த ஆர்யாவை பூமியில் கவிகள் புதுமணப்பெண்ணைப் போல நீராட்டட்டும் என்பது இதன் பொருள். இங்கு குறிப்பிடப்பெற்றிருக்கும் பொற்பலகைச் சங்கப்பலகையைக் குறிப்பதாகவும் வதூ என்று பெண்ணைக் குறிப்பிடுவது மீனாட்சியையோ அல்லது தமிழையோ குறிப்பிடுவதாகவும் சில ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சுந்தரபாண்டியன் பூர்வ மீமாம்சை உத்தரமீமாம்சையான வேதாந்தம் ஆகிய இரண்டிலும் நூலெழுதியிருக்க வேண்டும் என்றும் அவற்றிலிருந்தே இந்த மேற்கோள்கள் பெறப்பட்டிருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் மீமாம்சை உரையான சபரபாஷ்யத்தில் பல மேற்கோள்கள் இயற்றியவரைக் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ளன. இவை சுந்தரபாண்டியனுடையவையாகலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

சுந்தரபாண்டியனின் காலம்

இந்த சுந்தரபாண்டியனின் காலத்தைக் கணிப்பது மிகவும் சிரமமானதென்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிலர் நின்றசீர் நெடுமாறனை திருவிளையாடல் புராணம் சுந்தர பாண்டியன் என்று குறிப்பிடுவதால் அவனே சுந்தரபாண்டியன் என்று குறிப்பிடுகின்றனர். அவன் சைவமதத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவன் அத்வைத, மீமாம்சை நூல்களை இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சிலர் மறுக்கின்றனர். சுந்தரபாண்டியன் என்னும் வடமொழிப்பெயரும் திருக்குறள் போன்றவற்றின் தாக்கமும் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் சுந்தர பாண்டியனின் காலத்தைக் கொண்டு செல்ல இயலாதவண்ணம் அமைந்துள்ளன.

நீதி த்விஷஷ்டிகா என்னும் நூலின் சில செய்யுட்கள் பஞ்சதந்திரம், சாணக்கிய ராஜநீதி ஆகிய நூல்களிலும் கிடைக்கின்றன. ஆகவே சுந்தரபாண்டியன் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவன் என்பது திண்ணமாகிறது. சபர ஸ்வாமியின் பாஷ்யங்களில் இருக்கும் மேற்கோள்கள் சுந்தரபாண்டியனுடையதானால் நான்காம் நூற்றாண்டாகக் கொள்ளமுடியும். இவ்வாறு மூன்று முதல் ஐந்து நூற்றாண்டு வரையிலான காலம் சுந்தரபாண்டியனின் காலம் என்று கொள்ள முடியும். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானாச்ரயி என்னும் அறிஞர் ஆர்யா பாவகைக்கு எடுத்துக்காட்டாக நீதி த்விஷஷ்டிகாவிலிருந்து 24ஆம் செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால் இந்த மேற்கோள்கள் சுந்தரபாண்டியனுடையவை என்பதற்குப் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்த உரையாசிரியர்கள் தவிர வேறு எவரும் பிரமாணமாக இல்லை. ஆதிசங்கரரின் காலத்தைக் கணிப்பவர்களும் சுந்தரபாண்டியனையும் ஒரு காரணியாக வைக்கின்றனர். ஆனால் அவருடைய உரை மேற்கோள்கள் மூத்தோர் சொல், ஞானிகளின் சொல்லென்றே குறிப்பிடுவதால் இதனை உறுதிசெய்ய இயலவில்லை. எனினும் பெரும்பாலான ஆய்வாளர்கள் சுந்தரபாண்டியனுடையவையே என்று துணிகின்றனர்.

இவை தவிர கிருஷ்ணலீலாசுகர் என்பவர் புருஷகாரம் என்னும் வடமொழி இலக்கணநூலை யாத்துள்ளார். அந்த நூலில் சுந்தர பாண்டியன் இயற்றிய கிரியா நிகண்டு என்னும் இலக்கண நூலிலிருந்து ஒரு மேற்கோளை வழங்கியுள்ளார். இவன் சுந்தரபாண்டியனல்ல, வீரபாண்டியன் என்று குறிப்பாருமுளர். அவன் வீரபாண்டியனானால் எந்த வீரபாண்டியன் அல்லது சுந்தரபாண்டியன் என்று திண்ணமாகக் கூற இயலவில்லை.

மேலும் நல்லுரைகளின் தொகுப்பான சூக்திரத்னாகரம் என்னும் நூல் சுந்தர பாண்டியனின் செய்யுட்களாக சார்தூல விக்ரீடிதம் என்னும் பாவகையில் அமைந்த செய்யுளைக் கொண்டிருக்கிறது. இதை இயற்றிய சுந்தரபாண்டியனும் நீதித்விஷஷ்டிகாவை இயற்றிய சுந்தரபாண்டியனும் ஒருவரா என்பதை அறியயியலவில்லை.

எது எப்படியாயினும் மறையவரும் மறையவர் போற்றும் துறவியரும் ஆசார்ய என்னும் பட்டத்தோடு போற்றிய ஒரு பாண்டியமன்னன் வாழ்ந்திருந்தான் என்பது வரலாறாக உள்ளது. மேலும் வண்டமிழை வளர்த்த வழுதியர் வடமொழியையும் வாழ்வித்தனர் என்பதும் இதன் மூலம் அறியக்கிடக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *